லீடர், ஹேப்பி டேஸ், ஃபிடா, லவ் ஸ்டோரி படங்களை இயக்கிய தேசிய விருது பெற்ற சேகர் கம்முலா முதன் முறையாக ஒரு தமிழ் ஹீரோவுடன் கைகோர்த்திருக்கும் படம் “குபேரா”. ‘வாத்தி’ படத்துக்குப் பின் தனுஷ் நடித்திருக்கும் நேரடி தெலுங்கு படம். தனுஷ் உடன் நாகார்ஜூனா, ராஷ்மிகா மந்தனா நடித்திருக்கும் இந்த படம் தனுஷூக்கு தெலுங்கில் வெற்றியை தேடித் தந்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, இந்தியாவின் பெரும் பணக்காரரான ஜிம் சர்ப் வங்காள விரிகுடா கடல் பகுதியில் பல லட்சம் கோடிகள் மதிப்பிலான கச்சா எண்ணெய் இருப்பதை தெரிந்து கொண்டு அதை தனக்கு தருமாறு அரசாங்கத்தில் உள்ள முக்கிய மந்திரிகள் மூலம் காய் நகர்த்துகிறார். இதற்காக ஒரு லட்சம் கோடி ரூபாயை அவர்கள் சொல்லும் கணக்குகளில் ஒப்படைக்க வேண்டும், 50,000 கோடி வெள்ளையாகவும், 50,000 கோடி கருப்புப் பணமாகவும் தரச் சொல்கிறார்கள்.
இதில் தங்கள் பெயர் இல்லாதவாறு இந்த வேலையை செய்து முடிக்க செய்யாத குற்றத்துக்கு ஜெயிலில் இருக்கும் முன்னாள் சிபிஐ அதிகாரி நாகர்ஜுனாவை நாடுகிறார் நீரஜ். கருப்பு பணத்தை வெள்ளையாக மாற்ற எந்த ஒரு பின்புலமும், அதைப் பற்றிய அறிவும் இல்லாத சில பிச்சைக்காரர்களை பயன்படுத்துகிறார்கள். அந்த நான்கு பிச்சைக்காரர்களில் ஒருவராக தனுஷூம் அழைத்து வரப்படுகிறார். வேலை முடிந்ததும் ஒவ்வொருவரையும் கொலை செய்கிறார் நீரஜ். அதை தெரிந்து கொள்ளும் தனுஷ் அவர்களிடம் இருந்து தப்பிக்கிறார். தன் பெயரில் 10,000 கோடிகள் இருப்பது கூட தெரியாத தனுஷ் அவர்களிடம் இருந்து தப்பித்தாரா? அந்த 10,000 கோடி என்ன ஆனது? ராஷ்மிகா யார்? என்பதே மீதிக்கதை.
நாயகன் தனுஷ், 50 படங்களை கடந்த எந்த ஒரு ஹீரோவும் ஏற்றுக் கொள்ள தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் உயிரைக் கொடுத்து நடித்திருக்கிறார். நடு ரோட்டில் பிச்சை எடுப்பது, குப்பை மேடுகளில் படுத்து உருளுவது, படம் முழுக்க வெள்ளந்தியான பையனாக எதிர்த்து அடிக்க முடியாமல் ஓடிக் கொண்டே இருப்பது என ஒரு அசுரத்தனமான நடிப்பு. ஒரு ஆக்ஷன் காட்சி கூட இல்லையா என இரண்டு படங்கள் நடித்த ஹீரோக்களே கேட்கும் காலத்தில் படம் முழுக்க வலிமையற்ற ஒரு இளைஞனாக, கருணை மட்டுமே உள்ள மனிதனாக திரையில் தெரிகிறார். நிச்சயம் ஒரு தேசிய விருது கிடைக்கும் என நம்பலாம்.
கதையில் வரும் இன்னொரு நாயகன் நாகர்ஜுனா. தீபக் என்ற கதாபாத்திரத்தில் முன்னாள் சிபிஐ அதிகாரி. மிகத் திறமையான ஸ்ட்ரேட்டஜிஸ்டாக அசத்துகிறார். தனுஷை போலவே இவரும் கதாபாத்திரத்தின் தன்மைக்கேற்ப ரொம்பவே சாஃப்டான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நல்ல இயல்பான, அருமையான நடிப்பு. ராஷ்மிகா ஆரம்பத்தில் லூசுப் பொண்ணு போன்று அறிமுகமாகி பின் அடுத்தடுத்த காட்சிகளில் மனதில் நிற்கிறார். ஆரம்பத்தில் வேண்டா வெறுப்பாக தனுஷூக்கு உதவப் போய், பின் அவரே பக்க பலமாக நிற்கிறார். கோடீஸ்வரராக ஜிம் சர்ப். அந்த கதாபாத்திரத்துக்கே அளவு எடுத்து தைத்தவர் போல இருக்கிறார். அவரின் குரூர எண்ணங்களை வெளிப்படுத்துவதிலேயே தன் வில்லத்தனத்தை காட்டுகிறார். குடும்பத்தலைவியாக ஒரு சில காட்சிகளில் வரும் சுனைனாவும் தன் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார். தலிப் டஹில், பாக்யராஜ், ஜெயப்ரகாஷ், சாயாஜி ஷிண்டே என சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள்.
நிகேத் பொம்மி கோடீஸ்வரர்களின் உலகம், பிச்சைக்காரர்களின் உலகம் என இரண்டு எல்லைகளையும் மிகச் சிறப்பாக காட்சிப்படுத்தியிருக்கிறார். கலை இயக்குனரின் பங்கு அலாதியானது என்பது படத்தை பார்க்கும்போதே தெரிகிறது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் பாடல்கள் பெரிய ஹிட் ஆகவில்லை என்றாலும் படத்தோடு பார்க்கும்போது நன்றாக இருக்கிறது. அதிலும் எனது எனது என்ற பாடல் ஆரம்பத்தில் வரும் வெர்ஷன், இரண்டாம் பாதியில் தனுஷ் குரலில் வரும் வெர்ஷன் என இரண்டுமே மிகச் சிறப்பாக உபயோகப்படுத்தி இருக்கிறார்கள். பின்னணி இசையிலும் படத்தை அடுத்த தளத்துக்கு உயர்த்தி இருக்கிறார்.
இயக்குனர் சேகர் கம்முலா, எந்த மாதிரி களத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் மிகப்பெரிய உழைப்பைக் கொட்டி சிறப்பான படத்தை, அனுபவத்தை தருபவர். கோடீஸ்வரன் vs பிச்சைக்காரன் என்ற இந்த களமே ஆர்வத்தை தூண்டும் அம்சம். படம் தொடங்கியம் வரும் காட்சிகள் எல்லாமே மிக இயல்பாக கதையை நகர்த்திக் கொண்டு போகிறது. நிதானமான திரைக்கதையாக இருந்தாலும் தொய்வின்றி நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதி முழுக்க தனுஷை தேடி துரத்தி செல்வதை இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யப்படுத்தியிருக்கலாம். படத்தின் சில எமோஷன் காட்சிகள் நம்மை கண் கலங்க வைப்பது உண்மை. 3 மணி நேர படமாக இருந்தாலும் நம்மை சீட்டில் உட்கார வைக்கிறார் இயக்குனர்.

