ட்ரெண்டிங் – விமர்சனம்!

கலையரசன், பிரியாலயா நடிப்பில் சிவராஜ் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘ட்ரெண்டிங்’. இன்றைய சமூக வலைத்தளத்தில் ட்ரெண்டிங், வியூஸ், லைக்ஸ் மோகம், அதை வைத்து பணம் சம்பாதிக்கும் இன்றைய தலைமுறை, அதற்காக எந்த எல்லைக்கும் செல்வார்கள் என்பதை ஒரு சினிமாவாக கொடுக்க முயற்சித்திருக்கிறார் இயக்குனர். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

காதலித்து திருமணம் செய்த கலையரசன், பிரியாலயா தம்பதி யூடியூபில் அர்ஜுன்மீரா என்ற சேனலில் கப்புள் விளாக்ஸ் (Couple vlogs) வீடியோக்களை பதிவிட்டு மிகப் பிரபலம். ஜீரோவில் இருந்து கிட்டத்தட்ட 3 மில்லியன் சப்ஸ்கிரைபர்ஸ் வர உயர, வளர்ச்சிக்கேற்ற ஆடம்பர வாழ்க்கைக்கு அடிமையாகிறார்கள். கடனில் கார், பங்களா என சொகுசு வாழ்க்கை வாழ்கிறார்கள். ஒரு நாள் திடீரென அவர்கள் சேனல் முடக்கப்பட, வருமானத்துக்கு என்ன செய்வது என தெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அந்த நேரத்தில் அவர்கள் ஃபோனுக்கு ஒரு கால் வர, அதில் ஒரு விளையாட்டை விளையாண்டால் உங்களுக்கு 2 கோடி வரை பணம் தருகிறோம் என சொல்ல, அதை விளையாட ஆரம்பிக்கிறார்கள். முதலில் 2,3 போட்டிகளில் பணம் கிடைக்க ஆரம்பிக்க, அதன் பின் வரும் போட்டிகள் அவர்கள் காதலையே, வாழ்க்கையையே ஆட்டிப் பார்க்கிறது. அதன் பின் என்ன ஆனது? அந்த போட்டியை நடத்துவது யார்? அவர்கள் வாழ்க்கை என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.

நாயகன் கலையரசன், யூடியூபராக, காதல் கணவராக, சராசரி மனிதராக என பல குணாதிசயங்களை வெளிப்படுத்தும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு போட்டி துவங்கும்போதும் முடியும் போதும் அவரது மனநிலையை மிகச் சிறப்பாக பிரதிபலித்திருக்கிறார். அதே போலவே நாயகி பிரியாலயாவும். அதே குணாதிசயங்களை வெளிப்படுத்துகிறார். நல்ல அழகும், நல்ல நடிப்பும் அவரது கதாபாத்திரத்தை மேலும் மெருகேற்றுகிறது.

இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் பிரேம், நல்ல உணர்ச்சிகரமான கதாபாத்திரத்தில் வந்து ஸ்கோர் செய்கிறார். ஒரு சில காட்சிகளில் வரும் அவர்களது நண்பர்களும் ஓகே. மாஸ்க் மேனாக வருபவரும் கடைசி வரை மாஸ்க்கை கழட்டாமல் நடித்து விட்டு போகிறார்.

ஒரே வீட்டில் முழுக்கதையும் நடக்கும் இந்த படத்தை கொஞ்சம் சுவாரஸ்யமாக காட்ட ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலு எடுத்த முயற்சி அதீதம். நாகூர் ராமச்சந்திரன் எடிட்டிங் நல்ல அனுபவத்தை தருகிறது, ஆனாலும் கொஞ்சம் நீளத்தை குறைத்திருக்கலாம் என தோன்றாமல் இல்லை. சாம் சி எஸ் இசை படத்துக்கு பலம். பின்னணி இசையிலும் நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார்.

ட்ரெண்டிங் என்ற தலைப்பை வைத்து ஆரம்பத்தில் யூடியூப் தம்பதி, சமூக வலைத்தளம் என கொண்டு சென்று, அதன் பின் கதை ஒரு விளையாட்டை நோக்கி செல்கிறது. கதையின் மாந்தர்களை வேறு யாராக வேண்டுமானாலும் கூட வைத்திருக்கலாம், ஆனால் யூடியூபராக காட்டியதும், அவர்கள் சொகுசு வாழ்க்கை, அந்த ட்ரெண்டிங் மோகம் ஆகியவற்றை காட்டிய விதமும் நன்றாக இருக்கிறது. ஒரே வீட்டில் நடக்கும் இந்த படத்தின் நீளத்தை மட்டும் கொஞ்சம் குறைத்திருக்கலாம். இரண்டாம் பாதியில் கொஞ்சம் போர் அடிக்கவே செய்கிறது. இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து இப்படி ஒரு படத்தை கொடுத்திருக்கும் இயக்குனருக்கு பாராட்டுக்கள். நிறைய குறைகள் இருந்தாலும் ஒரு முறை கண்டிப்பாக பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *