Mr and Mrs Mahi – திரை விமர்சனம்

ஷரண் ஷர்மா இயக்கத்தில், ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் தர்மா புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்துள்ல இந்தி திரைப்படம் மிஸ்டர் & மிஸஸ் மஹி. இப்படத்தில் ராஜ்குமார் ராவ் மற்றும் ஜான்வி கபூர் ஜோடியாக நடிக்க, சரீனா வஹாப், குமுத் மிஷ்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிரிக்கெட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் ஸ்போர்ட்ஸ் ட்ராமா படமான இந்த படத்தில் ராஜ்குமார் ராவ், ஜான்வி கபூர் என இரண்டு பேருமே கிரிக்கெட் வீரர்களாக நடித்துள்ளனர். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ராஜ்குமார் ராவ் கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் சிறுவயதில் இருந்து விளையாடி வருபவர். கிரிக்கெட் டீமுக்கு தேர்வாகததால் அவரின் அப்பா இனிமேல் கிரிக்கெட்டை மூட்டை கட்டி வைத்து விட்டு தான் வைத்திருக்கும் விளையாட்டு உபகரணங்கள் வைத்திருக்கும் கடையை கவனித்துக் கொள்ள சொல்லி விடுகிறார். பிடிக்காத கடை வேலை என வெறுமையாக செல்லும் அவர் வாழ்வில் திருமணம் மூலம் மனைவியாக அடியெடுத்து வைக்கிறார் டாக்டர் ஆகும் முடிவில் இருக்கும் ஜான்வி கபூர். திருமணத்துக்குப் பின் ஜான்விக்கும் கிரிக்கெட் மீது ஆர்வம் இருப்பது தெரிகிறது. இருவரும் கிரிக்கெட் பார்த்து சந்தோஷமாக பொழுதை கழிக்கும் நேரத்தில் ராஜ்குமார் மீண்டும் கிரிக்கெட்டில் விளையாட முடிவு எடுக்கிறார். ஆனால் அவருக்கு முன்பு மாதிரி விளையாட முடியவில்லை. கோச் அவரை தன்னை போலவே நீயும் ஒரு கோச் ஆகி விடு என சொல்கிறார். பின் ஒரு கட்டத்தில் ஜான்விக்கு பயிற்சி கொடுத்தால் அவரால் கிரிக்கெட்டில் நன்றாக சாதிக்க முடியும் என்பதை தெரிந்து கொள்கிறார். டாக்டர் ஆவதை விடுத்து கிரிக்கெட்டராகு என அவரை கன்வின்ஸ் செய்து அவருக்கு பயிற்சி கொடுக்கிறார். ஜான்வி கிரிக்கெட்டராக மாறினாரா? மாநிலம், இந்தியா என தேர்வாகி விளையாடினாரா? ராஜ்குமார் ஆசைப்பட்டது நடந்ததா? என்பதே மீதிக்கதை.

ராஜ்குமார் ராவ் கிரிக்கெட்டில் பெரிதாக சாதிக்காத, தோல்வியடைந்த ஒருவராக சோகத்துடன் திரியும் கதாபாத்திரம். சிறப்பாக நடித்துள்ளார். மனைவியை ஊக்கப்படுத்தும்போது வரும் தன்னம்பிக்கை, தனக்கு பெரிய அங்கீகாரம் கிடைக்காத போது வரும் கோபம், விரக்தி, வாழ்வின் அர்த்தம் புரியும்போது வரும் தெளிந்த மனநிலை என நடிப்பில் அட்டகாசப்படுத்தியுள்ளார்.

ஜான்வி கபூர், இளம் பெண் கிரிக்கெட் வீராங்கணையாக கலக்கி எடுத்திருக்கிறார். ராஜ்குமார் ராவ் நேர்மைக்காகவே அவரை திருமணம் செய்து உண்மையான காதலுடன் இருக்கும் ஒரு மனைவியாக தேர்ந்த நடிப்பு. இந்த படத்தின் ஷூட்டிங்கில் அவருக்கு இரண்டு முறை தோள்பட்டையில் காயம் பட்டும் முழு அர்ப்பணிப்புடன் நடித்ததை பாராட்டியே தீர வேண்டும். கிரிக்கெட்டராக மாறிய பின் அதற்கான அத்தனை விஷயங்களையும் செய்து சாதிக்க முனையும் பெண்ணாக சிறந்த நடிப்பு. அவரின் படங்களில் இந்த படத்துக்கு முக்கிய இடம் உண்டு.

ராஜ்குமார் அம்மாவாக வரும் சரீனா வஹாப் தனக்கு கிடைத்த ஒரு முக்கிய காட்சியில் ஸ்கோர் செய்கிறார். மகனை எப்போதும் மதிக்காமல் திட்டிக் கொண்டே இருக்கும் கதாபாத்திரத்தில் குமுத் மிஷ்ரா தேர்ந்த நடிப்பு.

ஜான் ஸ்டீவர்ட் எடூரி பின்னணி இசையில் படத்தை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போயிருக்கிறார். மற்ற இசையமைப்பாளர்களின் பாடல்களும் கதைக்கு நல்ல பங்களிப்பை தந்திருக்கின்றன. அனய் கோஸ்வாமியின் ஒளிப்பதிவில் கிரிக்கெட் சம்பந்தப்பட்ட காட்சிகள் மிகச்சிறப்பு. ஸ்டேடியத்தின் பிரமாண்டத்தை காட்டுவது முதல் பெட் ரூமில் நுணுக்கமான எமோஷன்ஸை காட்டுவது வரை சிறப்பான ஒளிப்பதிவு.

இந்த கதைக்கு நிகில் உடன் இணைந்து திரைக்கதை அமைத்து சிறப்பான ஒரு படமாக தந்திருக்கிறார் இயக்குனர் ஷரண் ஷர்மா. ஜான்வி கபூரை வைத்து அவர் இயக்கிய முதல் படமான குஞ்சன் சக்ஸேனா படத்தை போலவே இந்த படத்திலும் சாதிக்க துடிப்பவர்களுக்கு நல்ல ஒரு பாடமாகவே அமைந்திருக்கிறது இந்த படம். கண்டிப்பாக தியேட்டரில் போய் பார்த்து விட்டு வரலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *