மாயக்கூத்து – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் இண்டி சினிமா (Independent cinema) என்று சொல்லப்படும் வணிக நோக்கத்தை தாண்டி, தங்களுக்கு இருக்கும் resources மற்றும் பெரிய அளவில் பரிச்சமில்லாத நடிகர்களை வைத்து நல்ல சினிமாக்களை மட்டுமே தரும் தாகத்துடம் ஒரு பெரும் கூட்டமே இங்கு இருக்கிறது. சமீபத்திய ஒரு பெரிய உதாரணத்தை சொல்ல வேண்டுமென்றால் கூழாங்கல் படத்தை சொல்லலாம். நீல நிற சூரியன், நாங்கள் என சமீபத்தில் கூட ஒரு சில படங்கள் அப்படி வெளியாகியிருந்தன. அந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் படம் “மாயக்கூத்து”. ராகுல் மூவி மேக்கர்ஸ் தயாரிக்க ஏ.ஆர்.ராகவேந்திரா இயக்கியிருக்கிறார். யாரிடமும் உதவியாளராக பணியாற்றாமல் குறும்படங்கள் மூலம் கிடைத்த அனுபவத்துடன் 25 லட்சங்கள் பட்ஜெட்டில் ஒரு சிறந்த படத்தை தந்திருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

சமூகத்தில் படைப்பாளிகள் எவ்வளவு பொறுப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்பதை சுட்டிக் காட்டும் ஒரு படமாக உருவாகியுள்ளது. ஆந்தாலஜி படம் போல விரியும் இந்த கதை, போகப் போக கதையை நகர்த்தும் மையக் கதாபாத்திரம் ஒரு எழுத்தாளர் என்பதையும், மற்ற கதைகள் மூன்றும் அவர் எழுதும் கதை மற்றும் கதாபாத்திரங்கள் என்பதையும் காட்சிகளினூடே உணர்த்துகிறது. தன்னை ஒரு கடவுளாக பாவித்துக் கொள்ளும் எழுத்தாளனை அவர் எழுதிய கதாபாத்திரங்கள் அவர்களின் உலகத்துக்குள் இழுத்துக் கொண்டு நீதி கேட்பது போல அமைந்துள்ளது திரைக்கதை. அதன் பின் எழுத்தாளர் எடுக்கும் முடிவு என்ன? அவரின் பொறுப்பு என்ன என்பதை உணர்ந்தாரா? என்பதை மிக அழகாக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் A.R.ராகவேந்திரா.

கதையின் நாயகனாக எழுத்தாளராக நடித்திருக்கும் நாகராஜன் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்திருக்கிறார். அவர் மனைவியுடனான காட்சிகள் நகைச்சுவையை வரவழைக்கின்றன. மு.ராமசாமியுடனான காட்சிகள் அவருக்கு தெளிவை கொடுப்பதுடன் நமக்கும் தெளிவை கொடுக்குபடியான காட்சிகள். மறைந்த நடிகர் டெல்லி கணேஷ் கடைசியாக நடித்த ஒரு சில படங்களில் இந்த படமும் ஒன்று. அவரின் அனுபவமிக்க நடிப்பு படத்தை தூக்கி நிறுத்தியிருக்கிறது. சாய் தீனா பிரகதீஸ்வரன், முருகன், ஐஸ்வர்யா, காயத்ரி மற்றும் ரேகா ஆகியோரின் நடிப்பும் படத்துக்கு கூடுதல் பலம். அவர்கள் அத்தனை பேருமே அசல் முகங்களாக கதாபாத்திரத்துக்கு பொருத்தமான தேர்வு.

இவ்வளவு சின்ன பட்ஜெட்டில் உருவான இந்த படத்துக்கே இப்படி ஒரு சிறந்த ஒளிப்பதிவை தந்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் சுந்தர் ராம் கிருஷ்ணன். நிச்சயம் அவரது திறமையை இதில் இருந்தே நம்மால் அறிந்து கொள்ள முடிகிறது. இரவில் நடக்கும் பல காட்சிகள், வயல்வெளி, சாய் தீனா கதையில் வரும் கடற்கரை, இரவில் ஷூட் அவுட் காட்சி, கிளைமாக்ஸ் படகுக் காட்சி என அத்தனையும் அவ்வளவு சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. நாகூரன் ராமசந்திரன் படத்தொகுப்பும் படத்துக்கு கூடுதல் பலம். முதல் பாதியில் வரும் ஒவ்வொரு ட்ரான்சிஷனும், அதை மேட்ச் கட் செய்த விதமும் சிறப்பு.

அஞ்சனா ராஜகோபாலன் பின்னணி இசை படத்தின் தரத்தை மேலும் சில படிகள் உயர்த்தியிருக்கிறது. நாகராஜன் மற்றும் கேபர் வாசுகி எழுதிய பாடல்களும் கேட்பதற்கு ரசிக்க வைக்கிறது.

இயக்குனர் ராகவேந்திரா. சில ஆண்டுகள் கதை, திரைக்கதையில் பயிற்சி பெற்றிருக்கிறார். பாராட்டுக்களை குவித்த உடன்பால் கதையை எழுதியிருக்கிறார், இயக்குனர் பிரம்மாவிடம் கதை விவாதத்தில் பங்கு பெற்றிருக்கிறார். இந்த படத்தை அவர் இயக்கிய விதமே அவரது திறமைக்கு சான்று. இப்படி ஒரு கதையை சொல்லும்போதும் பெரிய அளவில் ரசிகர்களை குழப்பியடிக்காமல் புரிந்து கொள்ளும்படி திரைக்கதை அமைத்துள்ளார். அத்துடன் சொல்ல வந்த கருத்தையும் அழகாக சொல்லியிருக்கிறார். ஒவ்வொரு கதையின் முடிவையும் மாற்றியமைத்த விதமும் அருமை. ஆரம்ப காட்சியிலேயே நல்ல ஒரு படத்தை பார்க்கப் போகிறோம் என்ற உணர்வை தந்து அமர வைக்கிறார். இன்னும் கொஞ்சம் பெரிய பட்ஜெட்டை கொடுத்தால் இன்னும் சிறப்பான படத்தை ரசிகர்களுக்கு நிச்சயம் கொடுப்பார் என்பது உறுதி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *