மாயபிம்பம் – விமர்சனம்!

செல்ஃப் ஸ்டார்ட் புரொடக்சன்ஸ் சார்பில், கே.ஜே சுரேந்தர் தயாரித்து, இயக்கியிருக்கும் படம் ‘மாயபிம்பம்’.‌ முழுக்க புதுமுகங்கள் நடித்திருக்கும் இந்த படம் 2005ல் நடக்கும் ஒரு காதல் கதை என்ற டேக்லைனோடு வெளியாகியிருக்கிறது. ஜானகி, ஆகாஷ் பிரபு, ஹரி கிருஷ்ணன், ராஜேஷ், அருண் குமார் மற்றும் பலர் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நாயகன் ஆகாஷ் நாகராஜன் மருத்துவக் கல்லூரியில் படித்து வருகிறார். அம்மா, அப்பா, அண்ணன், அண்ணி, அண்ணன் குழந்தை என அன்பான குடும்பம், மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். நேரம் கிடைக்கும்போதெல்லாம் நண்பர்கள் உடன் ஜாலியாக சுற்றி வருகிறார். அவரின் நண்பன் ஹரி கிருஷ்ணா பெண்களை பற்றி சகல விஷயங்களையும், பெண்களை எப்படி தன் வழிக்கு கொண்டு வருவது, யாரை எப்படி அணுக வேண்டும் போன்ற அட்வைஸ்களை தன் நண்பர்களுக்கு சொல்லிக் கொடுப்பவர். அப்படி ஒரு நாள் நாயகியான ஜானகி ஸ்ரீநிவாசனை சந்திக்கும் நாயகன் ஆகாஷூக்கு அவர் மீது ஒரு ஈர்ப்பு ஏற்படுகிறது. பின் அடுத்தடுத்த சில நாட்களிலேயே இருவரும் சந்தித்துக் கொள்ளும் சூழலும் அமைகிறது. அந்த நேரத்தில் ஜானகியை காமத்தோடு அணுக ஒரு ஐடியா தருகிறார் ஹரி. அவர் சொன்ன மாதிரி ஜானகியை அணுகும் ஆகாஷ் வாழ்க்கை என்ன ஆனது? அவர்களுக்கு இடையே இருந்தது காதலா? நண்பன் அட்வைஸ் அவர்கள் வாழ்க்கையை எப்படி புரட்டிப் போட்டது? என்பதை அழுத்தமான ஒரு காதல் கதையாக சொல்லியிருப்பதே மாய பிம்பம்.

நாயகன் ஆகாஷ் நாகராஜன். குடும்பத்தின் செல்லப் பிள்ளையாக ஜாலியாக சுற்றி வருபவர் நாயகியை பார்த்த தருணம் முதல் அவருக்குள் ஏற்படும் மாற்றத்தை அழகாக தன் நடிப்பில் வெளிக் கொண்டு வந்திருக்கிறார். இந்த கதாபாத்திரத்தை இன்னும் பிரதானப்படுத்துவது நாயகியின் கதாபாத்திரம் தான். நாயகி ஜானகி ஸ்ரீநிவாசன், இயல்பான அழகால் நம்மை கொள்ளை கொள்கிறார். பக்கத்து வீட்டுப் பெண் போன்ற எளிமையான அழகால் கதாபாத்திரத்தை மேலும் தூக்கி நிறுத்துகிறார். அவரது அப்பாவித்தனமான சிரித்த முகம் படம் பார்த்து விட்டு வந்த பிறகும் நம் மனதை விட்டு அகலவில்லை. அப்படி ஒரு நீங்கா இடத்தை பிடித்திருக்கிறார். அவரது தூய்மையான அன்பு நம்மை கண் கலங்க வைக்கிறது.

நாயகனின் நண்பர்களாக வரும் ஹரி கிருஷ்ணா முதல் பாதி முழுக்க ஸ்கோர் செய்கிறார். ராஜேஷ் பாலா காதல் காட்சிகள் கலகலவென சிரிக்க வைக்கிறது. அருண் குமார் ஆர்ப்பாட்டம் இல்லாத அளவெடுத்த நடிப்பும், கதையில் ஒரு மிக முக்கியமான விஷயத்தை புரிய வைக்கும் காட்சியிலும் கைதட்டல் வாங்குகிறார். மணிமேகலை அதிகம் பேசாமல் முக பாவனைகளிலேயே ஸ்கோர் செய்கிறார். மற்ற நடிகர்களும் இயல்பு மீறாமல் நடித்திருக்கிறார்கள்.

நடிகர், நடிகைகளை தாண்டி இசையமைப்பாளர் நந்தாவின் இசை படத்துக்கு ஜீவனாக அமைந்துள்ளது. குறிப்பாக இரண்டாம் பாதியில் அவர் இசை நம் மனதை தொடுகிறது. ஒளிப்பதிவாளர் எட்வின் சாகே ஒளிப்பதிவில் கடலூர், சிதம்பரம் என காட்டிய இடங்கள் எல்லாமே அவ்வளவு யதார்த்தம்.

இயக்குனர் சுரேந்தர் படத்தின் போஸ்டரிலேயே 2005 காதல் கதை என்பதை தெளிவாக சொல்லியிருக்கிறார். அதை போலவே படம் பார்க்கும்போது 2000 கால கட்டங்களில் வெளியான படங்களை மீண்டும் திரையில் பார்த்த உணர்வை தரும் வகையில் கதாபாத்திரங்களும், காட்சிகளும், ஒளிப்பதிவு, படத்தொகுப்பு என அத்தனையும் அந்த உணர்வை தருகிறது. கதாபாத்திர தேர்விலேயே பாஸ் மார்க் வாங்கி விட்டார். பின் நாயகியின் கதாபாத்திரம், நடிப்பு போன்றவற்றால் நல்ல படம் என்ற பெயரையும் வாங்கி விட்டார். முதல் பாதியில் ஆங்காங்கே சொன்ன விஷயங்களை இரண்டாம் பாதி திரைக்கதையில் இணைத்த விதம் எளிதாக கடந்து போகும் விஷயத்தை இரண்டாம் பாதியில் மிக முக்கியமான விஷயமாக மாற்றிய விதம் என கைதட்டல் வாங்குகிறார். மொத்தத்தில் நல்ல ஒரு உணர்வுப் பூர்வமான காதல் கதையை தந்து நம்மை வசப்படுத்துகிறார் இயக்குனர் KJ சுரேந்தர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *