Karate Kid: Legends – Review!

1984-ஆம் ஆண்டில் இருந்து வெளிவந்து கொண்டிருக்கும் ஒரு ஃபிராஞ்சைஸி (Franchise) திரைப்படம் தான் கராத்தே கிட். கடைசியாக 2010 ஆம் ஆண்டில் வெளியான தி கராத்தே கிட், வில் ஸ்மித் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது. அந்த படத்தை தொடர்ந்து 14 ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம் தான் “கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்”. ஒரே மாதிரியான கதை அமைப்பை கொண்டிருந்தாலும் 2 மணி நேரம் நம்மை எண்டர்டெயின் செய்யும் படங்களாக அமைவது தான் இந்த படங்களின் சிறப்பு. அந்த வகையில் இந்த படமும் நம்மை ரசிக்க வைத்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, நியூயார்க் நகரத்தை மையமாகக் கொண்ட இந்த படம், புதிதாக பள்ளியில் சேரும் குங் ஃபூ மாணவன் லி ஃபாங் தனது புதிய சூழலுக்கு ஏற்றபடி எவ்வாறு இணைகிறார். அங்கு ஏற்படும் எதிர்பாராத நட்புகள், ஒரு உள்ளூர் கராத் தே சாம்பியனுடன் சந்திக்க வேண்டிய கடுமையான சவால்கள் ஆகியவற்றை எவ்வாறு எதிர்கொள்கிறார். அவரது ஆசிரியரான மிஸ்டர் ஹான் மற்றும் மைதானத்தில் புகழ்பெற்ற டேனியல் லாரூசோ (ரால்ஃப் மேக்கியோ) ஆகியோரின் வழிகாட்டுதலால், லி ஃபாங் தன்னைத்தானே உணர்ந்து கொள்ளும் தன்மை, தைரியம் மற்றும் வளர்ச்சி அடையும் பயணத்தை எப்படி மேற்கொள்கிறார் என்பதைப் பற்றி பேசுகிறது இந்த ‘கராத்தே கிட்: லெஜண்ட்ஸ்’.

பென் வாங் முதன்மை கதாபாத்திரத்தில் கதையின் இளம் நாயக்னாக நடித்திருக்கிறார். குங்ஃபூ காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், காதல் மற்றும் காமெடியிலும் கலக்குகிறார். அவரின் குருவாக வரும் ஜாக்கி சான் வரும் காட்சிகள் குறைவு என்றாலும் நம்மை சிரிக்கவும் ரசிக்க வைக்கிறார். அவரை மீண்டும் திரையில் பார்க்கும்போது ரசிகர்களுக்கு எழும் பரவசம் சொல்லில் அடங்காது. ரால்ஃப் மெக்கியோ ஓரிரு காட்சிகளில் வந்தாலும் ஜாக்கி சான் உடன் வந்து அதகளம் செய்கிறார். இந்த மூன்று பேரும் திரையில் தோன்றும் காட்சியில் நான் ஸ்டாப் கைதட்டல் தான்.

நாயகியாக வரும் ஸாடி ஸ்டான்லி அழகு, அதே நேரம் தந்தையுடனான காட்சிகளில் அந்த உணர்வை நமக்கு கடத்துகிறார். அவரின் தந்தையாக வரும் ஜோஷ்வா ஜாக்ஸனும் ரசிக்க வைக்கிறார். குறிப்பாக பென் வாங் உடன் சேர்ந்து அவர் பயிற்சி எடுக்கும் காட்சிகள் எல்லாம் சிரிப்பலை தான். கராத்தே போட்டிகளில் தொடர் சாம்பியனாக வரும் அராமிஸ் நைட் அந்த கதாபாத்திரத்துக்கான ஆட்டிட்யூட் மற்றும் அந்த சண்டைக்காட்சிகளில் ஸ்கோர் செய்கிறார்.

அமெரிக்காவின் நியூ யார்க் நகரத்தை மிக இயல்பாக, எந்த ஒரு பூச்சும் இல்லாமல் அப்படியே காட்டிய விதம் இன்னும் அருமை. பின்னணியில் வரும் இசையும் படத்தின் டெம்போவை அப்படியே கூட்டுகிறது.

மொத்தத்தில் அதே பழைய கதை, ஒரே நோக்கம் என பயணித்தாலும் நடிகர்களின் நடிப்பும் குங்ஃபூ, கராத்தே கலையை திரையில் காட்டும் விதமும், சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விதமும் நம்மை இரண்டு மணி நேரம் மகிழ்விக்கிறது. இன்றைய குழந்தைகளையும் அழைத்துச் சென்று குடும்பத்துடன் ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *