தமிழ் சினிமாவில் பெண் இயக்குனர்கள் ரொம்பவே குறைவு. அவர்கள் உணர்வுகளை பிரதிபலிக்கும் படங்கள், அவர்கள் எண்ணங்களை சொல்லும் படங்களும் ரொம்பவே குறைவு. அப்படி ஒரு சில இயக்குனர்களில் சுதா கொங்கரா, பிரியா, மதுமிதா குறிப்பிடத் தக்கவர்கள். அப்படி தமிழ் சினிமாவுக்கு தற்போது கிடைத்த ஒரு பெண் இயக்குனர் தமயந்தி. அவரது இயக்கத்தில் லிங்கேஷ், அனுமோல், காயத்ரி, ஸ்வாகதா கிருஷ்ணா ஆகியோர் நடித்துள்ள இந்த படம், சில உண்மை சம்பவங்களின் பின்னணியில், இயக்குனர் வாழ்க்கையில் பார்த்த விஷயங்களை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ளது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தற்கொலை தடுப்பு பிரச்சாரங்களில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும் இளம் பெண் ஆறு மாத காலம் மூச்சுத் திணற வைக்கும் திருமண வாழ்க்கையைத் தாங்கிக் கொண்ட பிறகு, அவரது வாழ்க்கையை முடித்துக் கொள்கிறார். அவரது எதிர்பாராத மரணம் அவரது குடும்பத்தை உடைந்து போகச் செய்கிறது. பாண்டிச்சேரியில் இருந்து தனுஷ்கோடிக்கு அவரது அஸ்தியை கரைக்க எடுத்துச் செல்லும் உணர்ச்சிபூர்வமான பயணமே மீதிக்கதை.
படத்தில் அழகு தேவதையாக மாறி துள்ளிக் குதித்திருக்கிறார் காயத்ரி ஷங்கர். சாதி பாகுபாட்டினை பார்க்காமல், அது ஒரு பெரிய விஷயமாகவே கருதாமல் வசனங்களால் கடந்து செல்வதெல்லாம் திரைக்கதைக்கு பலமாக பார்க்கப்படுகிறது.
குட் நைட், டூரிஸ்ட் ஃபேமிலி படங்களை தொடர்ந்து ரமேஷ் திலக்கின் மற்றுமொரு சிறப்பான கதாபாத்திரம், சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். நம்மை கண் கலங்க வைத்திருக்கிறார். கவிதையாக வந்து செல்கிறார் நாயகி ஸ்வாகதா கிருஷ்ணா. மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் நல்ல நடிப்பை தந்திருக்கிறார்கள்.
கார்த்திக்கின் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாகவும், கடற்கரை சார்ந்த பின்னணியை மிக அழகாகவும் காட்டியிருக்கிறது. மன உணர்வுகளையும் திரையில் நமக்கு கடத்தவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஜஸ்டின் இசையில் பாடல்கள் நன்றாகவே இருக்கிறது. பின்னணி இசையும் படத்தின் ஆன்மாவாக இருக்கிறது.
இயக்குனர் தமயந்தி முதல் படத்திலேயே கொஞ்சம் சென்சிட்டிவான படத்தை மிக அழகாக திரையில் சொல்லியிருக்கிறார். சாதிய பாகுபாடு குறித்த படம் என்றால் இப்படியான ஒரு திரைக்கதை, இப்படியான கதாபாத்திரம், இப்படியான பார்வை என்று இருந்த தமிழ் சினிமாவில் “காயல்” ஒரு வித்தியாசமான படைப்பு தான். மற்ற சினிமாவிலிருந்து காயல் முற்றிலும் மாறுபட்டு, நிகழ்கால சாதிய பாகுபாடானது எதுவரை இருக்கிறது.? அது எதுவரை செல்லும் என்பதை வெளிச்சமாக காட்டியிருக்கிறார் இயக்குனர். ஒரு இயக்குனராக ரசிகர்கள் மனதில் ஆழமாக பதிகிறார் தமயந்தி.

