ஃப்ரைடே (Friday) – விமர்சனம்!

தமிழ் சினிமாவில் பெரும் பட்ஜெட் படங்கள், மசாலா படங்களுக்கு மத்தியில் அவ்வப்போது வெளியாகும் சின்ன பட்ஜெட் படங்கள் மூலம் தான் தமிழ் சினிமாவே தழைக்கிறது. சின்ன சின்ன பட்ஜெட் படங்களின் மூலம் அறிமுகமான இயக்குனர்கள் தான் இன்று இந்தியாவின் டாப் டைரக்டர்கள். அப்படி இந்த வாரம் வெளியாகியுள்ள சின்ன பட்ஜெட் படங்களில் நம்மை கவனிக்க வைத்திருக்கிறது ஒரு படம். அனிஷ் மாசிலாமணி நடிக்க, ஹரி வெங்கடேஷ் இயக்கியுள்ள படம் “ஃப்ரைடே”. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கதையின் நாயகன் அனிஷ் மாசிலாமணியும், கே.பி.ஒய் தீனாவும் சேர்ந்து ஒரு நபரை கொலை செய்ய முயற்சிக்க, அங்கு தீனா எதிர்பாராத விதமாக ஒரு தாக்குதலுக்கு ஆளாக நேரிடுகிறது. அவர்கள் தப்பி ஒரு பாதுகாப்பான இடத்தில் செட்டில் ஆகிறார்கள். அப்போது தான் ஒரு திடுக்கிடும் விஷயம் தெரிய வருகிறது. அனிஷ் மாசிலாமணியுடன் இருந்து கொண்டே அவரை கொலை செய்ய தேடும் கூட்டத்துக்கு தகவல்களை கொடுத்துக் கொண்டிருக்கிறார் தீனா. இந்த கொலை முயற்சிகளின் பின்னணி என்ன? தீனா யார்? அவர் ஏன் அவர்களுக்கு உதவி செய்கிறார்? இந்த சதியில் இருந்து அனிஷ் தப்பினாரா? இவர்களுக்கிடையில் வரும் போலீஸ் அதிகாரி? அவர் யார்? என்பதை சொல்வது தான் ’ஃப்ரைடே’படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகன் அனிஷ் மாசிலாமணி. மணி என்ற ஒரு லோக்கல் ரவுடி கதாபாத்திரத்தில் மிக இயல்பாக நடித்திருக்கிறார். தன் நிலையை எண்ணுவது, தம்பி மீது பாசம் காட்டுவது, சதியை தெரிந்த பின் அவரின் ரியாக்ஷன் என நல்ல ஒரு நடிப்பையே தந்திருக்கிறார். விஜய் டிவி கே.பி.ஒய் தீனா. கைதி படத்துக்கு பின் நல்ல ஒரு கவனத்தை ஈர்க்கும் கதாபாத்திரம். திரைக்கதையில் தவிர்க்க முடியாத ஒரு கதாபாத்திரம். சிறப்பாக செய்திருக்கிறார். மைம் கோபியின் அனுபவமிக்க நடிப்பு வலு சேர்க்கிறது. ராமச்சந்திர துரைராஜ், கலையரசன், சித்து குமரேசன் என மற்ற நடிகர்களும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.

ஜானி நாஷ் ஒளிப்பதிவு சின்ன பட்ஜெட்டில் நல்ல விஷூவலை கொடுக்க முடியும் என்பதை காட்டியிருக்கிறது. இரவுக் காட்சிகளிலும் குறைந்த லைட்டிங்கில் சிறப்பாக படமாக்கப்பட்டிருக்கிறது. படத்தின் பின்னணி இசையில் தன் திறமையை நிரூபிக்கிறார் இசையமைப்பாளர். நான் லீனியரில், பல கிளைக்கதைகள் இருந்தாலும் அதை புரியும்படி தொகுத்து தந்திருக்கிறார் எடிட்டர் பிரவீன்.

இயக்குனர் ஹரி வெங்கடேஷ். கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால் தான் சாவு என்ற தத்துவத்தின் அடிப்படையில் பல படங்கள் வெளியாகி இருந்தாலும் இந்த படத்தின் திரைக்கதை மூலமும், ட்ரீட்மெண்ட் மூலமும் கொஞ்சம் புத்துணர்வோடு தந்திருக்கிறார். ரவுடிகள் வாழ்க்கையை அருகில் இருந்து பார்த்த உணர்வையும் சிலர் செய்யும் இந்த விஷயங்களால் பல அப்பாவிகளின் வாழ்க்கை எவ்வளவு பாதிக்கப்படுகிறது, பழி வாங்கும் உணர்வு எப்படி எழுகிறது என்பதையும் அழகாக சொல்லியிருக்கிறார். மொத்தத்தில் சின்ன பட்ஜெட்டில் உருவான மற்றொரு கவனிக்கப்பட வேண்டிய படம் இந்த “ஃப்ரைடே”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *