நடிகர் அர்ஜூன் தாஸ் நடிப்பில், இயக்குனர் விஷால் வெங்கட் நடிப்பில் ‘பாம்’ (Bomb) என்ற ஒரு ஃபீல்குட் ட்ராமா திரைப்படம் வரும் செப்டம்பர் 12 அன்று வெளியாக உள்ளது. அர்ஜூன் தாஸிடம் இருந்து இப்படி ஒரு படமா என தமிழ் சினிமா ரசிகர்கள் வியந்து பார்க்கிறார்கள். வில்லனாக மட்டுமே நடித்து பல கோடிகளை குவிக்க என நினைக்காமல், நல்ல நல்ல சினிமாக்களை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்ற அர்ஜூன் தாஸின் தமிழ் சினிமா மீதான காதலும், அதீத தேடலும் தான் அவர் அடுத்தடுத்து நடிக்கும் படங்களின் மூலம் தெரிகிறது.

தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான குரல் மூலம் மிகப்பிரபலமானவர் நடிகர் அர்ஜூன் தாஸ். அவரது நடிப்பையும் தாண்டி குரல் மிகவும் பிரபலமாக இருந்தது, குறிப்பாக 2019-ல் வெளியான “கைதி” படத்தில் அன்பு என்ற வில்லன் கதாபாத்திரத்தில் அவரது ஆழமான குரலும் மிரட்டலான நடிப்பும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.
கைதி படத்தில் கிடைத்த அந்த புகழ் வெளிச்சம் ஒரே இரவில் நடந்த அதிசயம் அல்ல, அதற்கு முன் 7, 8 ஆண்டுகள் அவரின் தீவிர முயற்சிகள், கடும் உழைப்புக்கு கிடைத்ததே கைதி என்ற அந்த முதல் பிரேக். 2012ஆம் ஆண்டே “பெருமான்” என்ற திரைப்படத்தில் அறிமுகமான அவர் இடையே சில படங்கள் நடித்திருந்தாலும், சில படங்கள் ரிலீஸூக்கு தயாராக இருந்திருந்தாலும் கைதி கொடுத்த மிகப்பெரிய அங்கீகாரம், அவரை தமிழ் சினிமாவில் தாண்டி இந்திய சினிமா அளவிலும் மிகப் பிரபலமாக்கியது.
கைதி படத்தில் இருந்து அவரின் ஓட்டம் தொடர் ஓட்டமாக, தெளிவான பார்வையோடு இருந்து கொண்டிருக்கிறது. கைதியை தொடர்ந்து, மாஸ்டர், விக்ரம் போன்ற படங்களிலும் நடித்த அவர் நாயகனாக நடித்த படங்கள் மூலம் நல்ல நடிகர் என்பதையும் நிரூபித்தார். அந்தகாரம் படத்தில் ஒரு ஷேட் என்றால், அநீதி படத்தில் டெலிவரி பாயாகவே நடித்து சராசரி இளைஞர்களை பிரதிபலித்தார். 
சாந்தகுமார் என்ற மாஸ்டர் இயக்குனரே அர்ஜூன் தாஸ் தான் தன் கதைக்கு பொருத்தமான ஹீரோ என மெடிவெடுத்து ரசவாதி படத்தை கொடுத்ததே அர்ஜூன் தாஸின் திறமைக்கு கிடைத்த சான்று.
இப்படிப்பட்ட சூழலில் அஜித்குமார் நடிக்கும் படத்தில் அவருக்கே சவால் விடும் மிரட்டலான வில்லனாக, அதுவும் மெயின் வில்லனாக குட் பேட் அக்லி படத்தி நடித்து அசரடித்தார். மறுபடியும் வில்லன் ரூட்டுக்கு திரும்பி விட்டாரோ என எண்ண வேண்டிய அவசியம் இல்லை. அடுத்தடுத்து ஒன்ஸ்மோர் என்ற காதல் ரசம் சொட்டும் படத்திலும், பாம் என்ற காமெடி, ஃபீல்குட் படத்திலும் நடித்திருக்கிறார். இரண்டுமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிற படங்கள். ஒன்ஸ்மோர் படத்தின் பாடல்கள் அனைத்துமே பட்டைய கிளப்பிக் கொண்டிருக்கின்றன.

இந்த வாரம் வெளியாகும் “பாம்” அவர் முதன்முறையாக நடிக்கும் நகைச்சுவை படம் என்றே சொல்லலாம். அவருக்கு காமெடி செய்யும் கதாபாத்திரம் இருக்குமா? என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்ளலாம். ஆனால் இந்த பாம் திரைப்படம், மண்டேலா போல கிராமத்து பின்னணியில் உருவாகியுள்ள காமெடி, ஃபீல்குட் எமோஷனல் ட்ராமா. அர்ஜூன் தாஸ் அவரது வழக்கமான மிரட்டல் ஆக்ஷன் கதாபாத்திரங்களில் இருந்து மாறுபட்டு நடிப்பை தந்திருக்கிறார் என்பது ட்ரைலர் பார்க்கும்போதே புரிகிறது.
அஜித்துக்கு வில்லனாக நடித்தவர் தற்போது தமிழ் தாண்டி, தெலுங்கில் பவர் ஸ்டார் பவண் கல்யானுக்கும் வில்லனாக “OG” படத்தில் மிரட்ட இருக்கிறார். மேலும் பல நல்ல கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் அர்ஜூன் தாஸ், புதுப்புது முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். நிச்சயம் இந்த பாம் திரைப்படம் அவரது திரை வாழ்வில் முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என்பதை உறுதியாக சொல்லலாம்.

