யெல்லோ – விமர்சனம்!

யூடியூப் மற்றும் பிக் பாஸ் பிரபலம் பூர்ணிமா ரவி கதையின் நாயகியாக அறிமுகமாகியிருக்கும் படம் “யெல்லோ”. பெண் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டு அனைவரையும் ஈர்க்கும் வகையில் உருவாகியிருக்கும் ஒரு ரோடு ட்ராமா வகை திரைப்படம். Covai Film Factory சார்பில் பிரசாந்த் ரங்கசாமி தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ஹரி மகாதேவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, இந்த உலகில் அடுத்த நொடி ஒளித்து வைத்திருக்கும் ஆச்சரியங்கள் ஏராளம் என்ற Quote உடன் துவங்குகிறது படம். நாயகி பூர்ணிமா ரவி, காதலன் உடன் பிட்ஸ் பிலானி சென்று படிக்க திட்டமிடுகிறார். அந்த நேரத்தில் அவரது தந்தை டெல்லி கணேஷ் படுத்த படுக்கையாகி விட அவரை அருகில் இருந்து கவனித்துக் கொள்ள வேண்டிய சூழல். அதனால் வெளியூரில் படிக்கும் திட்டத்தை கைவிட்டு சென்னையிலேயே ஒரு வங்கியில் வேலைக்கு சேர்கிறார். வேண்டா வெறுப்பாக, எந்த ஒரு ஆர்வமும் இன்றி ஒரு மெஷின் போல வேலையை செய்கிறார். அவரின் காதலனும் அவரை விட்டு பிரிகிறார். ஒரு கட்டத்தில் அதில் இருந்து வெளியே வர, தனியே தன் பால்ய வயது நண்பர்களை தேடி கேரளாவுக்கு பயணமாகிறார். அந்த பயணத்தில் அவர் கற்று உணர்ந்த அன்பவங்கள், அந்த பயணம் அவர் வாழ்க்கையை எப்படி மாற்றியது? அவர் விரும்பியவர்களை சந்தித்தாரா? என்பதே மீதிக்கதை.

நாயகியாக பூர்ணிமா ரவி. ஆதிரை என்ற கதாபாத்திரத்தில் அப்படியே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம். ஆரம்ப காட்சிகளில் தோன்றும் வெறுமையை, பயணத்தில் ஒவ்வொரு முறையும் அனுபவிக்கும் உணர்வுகளை அப்படியே ரசிகர்களுக்கு கடத்துகிறார். மிகக் கச்சிதமான கதாபாத்திரம். கங்கனா ரணாவத்துக்கு குயின் படம் எப்படியோ அப்படி பூர்ணிமா ரவிக்கு இந்த படம். படம் முழுக்க பூர்ணிமாவுடன் பயணிக்கும் ஒரு கதாபாத்திரத்தில் வைபவ் முருகேசன். பூர்ணிமாவுக்கு இணையாக போட்டி போட்டு நடித்திருக்கிறார். காமெடியிலும் கலக்கி இருக்கிறார்.

பூர்ணிமாவின் அப்பாவாக டெல்லி கணேஷ், மீண்டும் ஒரு முறை நம் முன் வாழ்ந்திருக்கிறார். நமிதா கிருஷ்ணமூர்த்தி நவயுக மங்கையாக அழகாக வந்து போகிறார். மற்ற கதாபாத்திரங்களில் ஒரு சில காட்சிகள் மட்டுமே வந்தாலும் இயக்குநர் பிரபு சாலமன், சாய் பிரசன்னா, வினோதினி வைத்தியநாதன் ஆகியோரும் அவர்களது பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அபி ஆத்விக் ஒளிப்பதிவு படத்தை தரத்தை பல படிகள் உயர்த்தி இருக்கிறது. ஒரு ரோடு ட்ராவல் படம் என்பதால் காட்சிக்கு காட்சி புதுப்புது லொகேஷன்கள். அத்தனையும் மிக அழகாக, மிக மிக அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார். மூணார், கோவா, கேரளாவின் பல பகுதிகள் என அவ்வளவும் அழகு. அந்த ஒளிப்பதிவை இன்னும் தரமாக்கி தந்திருக்கிறது படத்தின் படத்தொகுப்பு. ஸ்ரீ வாட்சன் படத்தொகுப்பு ஆரம்ப காட்சிகளிலும் அந்த காலமாற்றத்தையும், பயணத்தில் நாமும் பயணிப்பது போன்ற உணர்வையும் உருவாக்கி தந்திருக்கிறது.

ஆனந்த காசிநாத் இசையில் பாடல்கள் அத்தனையும் மனதுக்கு இதம். பின்னணி இசையும் படத்தின் தன்மையை உணர்த்துவதோடு நம்மையும் படத்துக்குள் இழுத்துச் செல்கிறது.

இயக்குனர் ஹரி மஹாதேவன். ரொம்பவே உணர்வுப் பூர்வமான, தன்னை அறிதல் என்ற தத்துவத்தை உணர்த்தும் ஒரு கதையில் ஒரு பெண்ணின் ஆழமான, ஆழ்மன உணர்வுகளை பிரதிபலிக்கு ரொம்வே முயற்சித்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். அவரின் எழுத்தும், அதை திரையில் கொண்டு வந்திருக்கும் விதமுமே மிக சிறப்பு. அவரின் காட்சி மொழியும் தனித்துவமாகவே இருக்கிறது. தான் ஒரு நல்ல இயக்குனர் என்பதை தன் முதல் படத்திலேயே நிரூபித்திருக்கிறார். வன்முறை படங்களுக்கு மத்தியில் மனதை புத்துணர்ச்சியாக்கும் ஒரு நல்ல சினிமாவாக வந்திருக்கிறது இந்த “யெல்லோ”. நிச்சயம் குடும்பத்துடன் சென்று ரசிக்கக் கூடிய ஒரு நல்ல படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *