எக்ஸ்ட்ரீம் – விமர்சனம்

சமீப காலங்களில் தமிழ்நாட்டில் நிகழும் சமூக பிரச்சினைகளை பற்றியும், அந்த பிரச்சினைகளின் ஆண் வேர் என்ன என்பதையும் பேசும் பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில் பிழை, தூவல் படங்களை இயக்கிய ராஜவேல் கிருஷ்ணா இயக்கியுள்ள ‘எக்ஸ்ட்ரீம்’ திரைப்படமும் பெண்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் பாலியல் வன்கொடுமைகளை பற்றி பேசும் படமாக வந்திருக்கிறது. இதில் விஜய் டிவி மற்றும் பிக்பாஸ் பிரபலம் ரச்சிதா மகாலட்சுமி முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அபி நக்ஷ்த்திரா, அனந்த் நாக், அம்ரிதா ஹால்டர், ராஜ்குமார், சிவம் மற்றும் பலர் நடித்துள்ளனர். எப்படி இருக்கு, பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சென்னையில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஒரு கட்டிடத்தில், ஒரு தூணில் பெண்ணின் சடலம் இருக்கிறது. தொடர்ந்து காவல்துறை விசாரணையில் அது பள்ளிக்கூடம் படிக்கும் இளம் பெண் அபி நட்சத்திரா என்பது தெரிய வருகிறது. அந்த நேரத்தில் அந்த காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியில் சேரும் ரச்சிதா மகாலட்சுமியும் அந்த வழக்கை விசாரிக்கும் குழுவில் இணைகிறார். ஒரு கட்டத்தில் அந்த வழக்கை விசாரிக்கும் முழு பொறுப்பும் அவர் கைவசம் வருகிறது. அதை அவர் எவ்வாறு கையாண்டார்? அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து அங்கு புதைத்தது யார்? என்ன காரணம்? கொலையாளியின் பின்னணி என்ன? என்பதே ‘எக்ஸ்ட்ரீம்’படத்தின் மீதிக்கதை.

காவல்துறை அதிகாரியாக படம் முழுக்க போலீஸ் யூனிஃபார்மில் ரச்சிதா மகாலட்சுமி அந்த கதாபாத்திரத்துக்கு பொருத்தமாக இருக்கிறார். புல்லட்டில் போய் இறங்குவது, குற்றவாளிகளை துரத்தி பிடிப்பது, சண்டை போடுவது என ஆக்ஷன் காட்சிகளிலும் வெளுத்து வாங்குகிறார். அயலி இணையத் தொடர் மூலம் நம்மை ஈர்த்த அபி நக்ஷத்திரா இந்த படத்தில் கனமான, நெஞ்சை உலுக்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்து நம்மை பரிதவிக்க வைக்கிறார். வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட அப்பாவி ஏழை பெண்ணாக கலங்க வைக்கிறார்.

காவல் ஆய்வாளராக ராஜ்குமார் நாகராஜ் சத்தயசீலான் என்ற கதாபாத்திரத்தில் பொருந்திப் போகிறார். மனதில் ஒருவித வலியுடன் வழக்கை விசாரிக்கும் கடமையும் இருப்பதை அந்த கதாபாத்திரத்தில் நன்றாகவே செய்திருக்கிறார். அனந்த் நாக் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் ஒருவித சஸ்பென்ஸுடனே நம்மை வைத்திருக்கும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். தன் இளமையாலும் அதீத கவர்ச்சியாலும் சிறுசுகள் முதல் பெருசுகள் வரை கவர்ந்து இழுக்கும் ஒரு கதாபாத்திரத்தில் அம்ரிதா ஹால்டர் ரசிக்க வைக்கிறார். சிவம் தேவ், சரிதா, ராஜேஸ்வரி ராஜி உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் அளவாக நடித்திருக்கிறார்கள்

ஒளிப்பதிவாளர் பாலாவின் ஒளிப்பதிவு படத்துக்கு தேவையான விஷயங்களை செய்திருக்கிறது. எம்.எஸ்.ராஜ்பிரதாப் இசையில் பாடல்கள் பரவாயில்லை, பின்னணி இசை ஓகே ரகம்.

இன்றைய இன்ஸ்டாகிராம் காலகட்டத்தில் தங்களை பிரபலப்படுத்த சில பெண்கள் கவர்ச்சியாக உடை அணிவதும் சமூகத்தில் சில விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதையும், சில அப்பாவி பெண்கள் எப்படி பாதிக்கப்படுகிறார்கள் என்பதையும் இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா தன் திரைக்கதையில் கொண்டு வந்திருக்கும் விதம் நன்றாகவே இருக்கிறது. ஆனாலும் அந்த உடை சம்பந்தப்பட்ட விவாதம் இன்றுடன் முடியப்போவதும் இல்லை. தற்பொது பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், போதைப்பொருள் நுகர்வு அதிகரிப்பு போன்ற விஷயங்களை கதையில் கொண்டு வந்த விதமும் நன்றாகவே இருக்கிறது. இயக்குனர் ராஜவேல் கிருஷ்ணாவின் முயற்சிக்காகவும், நல்ல நோக்கத்திற்காகவும் இந்த படத்தை கண்டிப்பாக பாராட்டலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *