நல்ல கதையம்சம் உள்ள படங்கள், அரசியல் தெளிவை உண்டாக்கும் படங்கள் என்றாலே அதில் நிச்சயம் சமுத்திரகனியின் பங்களிப்பு இருக்கும். அப்படி கம்யூனிஸ்ட் இயக்கத்தின் சமூகப் பணிகளை, போராட்ட வரலாறைப் பேசும் ஒரு முக்கியமாக பதிவாக உருவாகியுள்ளது “வீர வணக்கம்”. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, மிகப்பெரும் செல்வந்தராக இருந்தாலும் ஏற்றத்தாழ்வு பாராமல், ஊரில் அனைத்து மக்களையும் சமமாக பார்க்கும் குணம் கொண்ட பரத், மக்களுக்கு தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். அதே சமயம், பக்கத்து ஊரில் சாதி வன்கொடுமை பிரச்சனைகளில் எளிய மக்கள் பாதிக்கப்பட அவர்களுக்கு துணையாக நிற்கிறார். அத்துடன் அவற்றை துணிச்சலுடன் எதிர்த்து போராட உத்வேகம் அளிக்க, கேரளாவுக்கு அழைத்துச் சென்று 96 வயது பெண் கம்யூனிச போராளியை சந்திக்க வைக்கிறார். அவர் புரட்சி வீரர் பி.கிருஷ்ண பிள்ளையின் (சமுத்திரகனி) வாழ்க்கை வரலாற்றையும், அங்கு மக்கள் சந்தித்த இன்னல்களையும், சமுத்திரகனி அவர்களுக்காக போராடிய வரலாற்றையும் உணர்ச்சிமிக்க கதையாக சொல்வது தான் மீதிக்கதை.
பி.கிருஷ்ண பிள்ளை கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி. கச்சிதமாக பொருந்துகிறார். சாதாரண படங்களிலேயே மக்களை தன்னுடைய கருத்துக்களால் ஈர்க்கும் சமுத்திரகனி, இஇந்த படத்தில் புரட்சிகரமான வசனங்களால், கம்யூனிச சித்தாந்தத்தை மிக அழகாக பேசியுள்ளார். மக்களுக்காக போராடும் காட்சிகளில் எல்லாம் நாயகனாக உயர்ந்து நிற்கிறார்.
ஒரு கல்லூரி படிக்கும் பெண்ணுக்கு அப்பாவாக, பெரிய மீசையுடன் கம்பீரமான தோற்றத்தில் நடித்திருக்கிறார் பரத். உண்மையஒ சொல்ல வேண்டுமென்றால் படத்தில் ஒரு கேமியோ கதாபாத்திரம் என்றே சொல்ல வேண்டும். மிகவும் கண்ணியமான, மரியாதைக்குரிய கதாபாத்திரத்தில் அப்ளாஸ் வாங்குகிறார். இவர்களுடன் ரித்தேஷ், பிரேம் குமார், ரமேஷ் பிஷரோடி, சுரபி லட்சுமி, புரட்சி பாடகி பி.கே.மேதினி, அதர்ஷ், ஆய்ஷ்விகா என மற்ற நடிகர்களும் தங்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.
கவியரசு ஒளிப்பதிவு படத்தின் கால கட்டத்தை பிரதிபலிக்கிறது. ஆடை வடிவமைப்பும், கலை இயக்கமும், அந்த காலகட்டத்தை நம் கண்முன் நிறுத்துகிறது. எம்.கே.அர்ஜுனன், பெரும்பாவூர் ஜி.ரவீந்திரன், ஜேம்ஸ் வசந்தன், சி.ஜே.குட்டப்பன், அஞ்சல் உதயகுமார் ஆகியோரது பின்னணி இசை மற்றும் பாடல்கள் படத்தை தூக்கி நிறுத்துகிறது.
இயக்குனர் அனில் வி.நாகேந்திரன், பி.கிருஷ்ண பிள்ளையின் வீர வரலாற்றை, உணர்வுப்பூர்வமான திரைப்படமாக கொடுக்க முயற்சி செய்திருக்கிறார். மேக்கிங்கில் பெரிய அளவில் Gimmick எதுவும் செய்யாமல் சொல்ல வந்த கதையை மட்டும் சொல்லியிருக்கிறார். சுய மரியாதை, சமத்துவம் என அனைத்தையும் பேசியதோடு போராட்டமே அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு என்பதையும் மிக அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார். கேரளாவில் சுதந்திர போராட்ட காலங்களில் நடந்த சாதிய அடக்கு முறைகளையும், மக்கள் புரட்சி எப்படி அவர்களை மீட்டெடுத்தது என்பதையும் மிகச்சிறப்பாக சொல்லியிருக்கிறார் இயக்குனர். கம்யூனிச வரலாற்றின் ஒரு பதிவாக இந்த படத்தை பார்க்கலாம்.

