வட்டக்கானல் – விமர்சனம்!

எம்.பி.ஆர் ஃபிலிம்ஸ் சார்பில் மதியழகன், வீரம்மாள் தயாரிக்க, பித்தாக் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் “வட்டக்கானல்”. பாடகர் மனோவின் வாரிசு துருவன் மனோ, மீனாக்‌ஷி கோவிந்தராஜன் நடித்திருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கொடைக்கானலில் உள்ள வட்டக்கானல் என்ற பகுதி மேஜிக் மஷ்ரூம் என்ற பூஞ்சைக் காளான் போதைப்பொருளை விளைவிக்கும் ஒரு பூமி. அங்கு போதைப்பொருள் மாஃபியாவை தன் கட்டுபாட்டில் வைத்திருக்கும் ஆர்.கே.சுரேஷ். அவருக்கு மூன்று மகன்கள். அந்த சாம்ராஜ்யத்தை அழிக்கும் முனைப்பில் எதிரிகள் இருக்கிறார்கள். தாய் தந்தையை இழந்த நாயகி மீனாக்‌ஷி கோவிந்தராஜனுக்கு மிகப்பெரிய எஸ்டேட் இருக்கிறது. அந்த எஸ்டேட்டில் பூஞ்சைக் காளான் நன்றாக வளரும், அதனால் எப்படியாவது 200 ஏக்கரை அடைய நினைக்கிறார் ஆர்.கே.சுரேஷ். அதே நேரம் நாயகனும், நாயகியும் காதலில் விழுந்து விட, அந்த 200 ஏக்கர் நிலத்தை சுரேஷ் அடைந்தாரா? இவர்கள் காதல் என்ன ஆனது? ஆர்.கே.சுரேஷை பழிவாங்க காத்திருந்த எதிரிகள் என்ன ஆனார்கள்? என்பதே மீதிக்கதை.

நாயகன் துருவன் மனோ, பாடகர் மனோவின் மகன். ஆரம்பத்தில் கொஞ்சம் நெகட்டிவான கதாபாத்திரத்தில் ஆரம்பித்து பின் நாயகியின் அறிமுகத்துக்கு பின் கொஞ்சம் கொஞ்சமாக நல்லவராக நம் மனதில் பதிகிறார். நாயகியாக மீனாக்‌ஷி கோவிந்தராஜன் தாய் தந்தையை இழந்து அன்புக்கு ஏங்கும் ஒரு கதாபாத்திரம். வாய் பேச முடியாத ஒரு கதாபாத்திரத்தில் தன் கண்களாலேயே பேசி, அழகான நடிப்பை தந்து மனதில் நிற்கிறார்.

ஆர்.கே.சுரேஷ் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். எதிரிகளை ஒற்றை ஆளாக களத்தில் சமாளிக்கும் காட்சிகளில் தன் ஆளுமையை காட்டுகிறார். வித்யா பிரதீப் பழி வாங்கும் வெறியை கண்களில் சுமந்து வாழும் ஒரு கதாபாத்திரத்தில் வாழ்ந்திருக்கிறார். மனோ ஒரு எமோஷனலாக தந்தை கதாபாத்திரத்தில் மனதில் நிற்கிறார். ஆடுகளம் நரேன், முருகானந்தம், கபாலி விஷ்வந்த், ஃபாத்திமா பாபு என மற்ற நடிகர்களும் ஓரளவு தங்கள் கதாபாத்திரங்களை செய்திருக்கிறார்.

மாரீஸ் விஜய் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் பெரிதாக ஈர்க்கவில்லை. எம்.ஏ.ஆனந்த் ஒளிப்பதிவில் கொடைக்கானல் மலைப்பிரதேச காட்சிகள் நன்றாகவே காட்டியிருக்கிறார்.

இயக்குனர் பித்தாக் புகழேந்தி எடுத்துக் கொண்ட கதைக்களத்தில் முடிந்தவரை கதையை நகர்த்த முயற்சித்திருக்கிறார். போதைப்பொருளினால் ஏற்படும் விளைவுகளையும் சொல்ல வந்திருக்கிறார். ஆரம்பத்தில் போதைப்பொருள் வரலாற்றை சொல்ல ஆரம்பித்து பாப்லோ எஸ்கோபார் வரை ரெஃபரன்ஸ் எல்லாம் சொன்னவர் அதற்கு பிறகு ஒரு பழிவாங்கள் கதையாக முடித்திருக்கிறார். நாயகியின் கதை மனதை தொடும்படி இருந்தாலும் மற்ற கதாபாத்திரங்கள் வழக்கமான வன்முறை கதையாகவே நின்று விடுகிறது. மொத்தத்தில் ஒரு முறை பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *