கின்னஸ் சாதனைக்காக, உலக சாதனைக்காக திரைப்படம் எடுப்பவர்கள் உண்டு. அதற்கான வழக்கத்துக்கு மாறாக ஏதாவது ஒரு விஷயத்தை செய்து தங்களை முன்னிலைப்படுத்திக் கொண்டு தனித்து தெரிவார்கள். அப்படி 9 வயதில் இயக்குனர், ஒரே ஆள் பல்வேறு துறைகளில் பணியாற்றி சாதனை புரிவது என பல அடக்கம். அந்த வகையில் 21 துறைகளில் பணியாற்றி நாயகனாக நடித்து சாதனை புரிந்திருக்கிறார் குகன் சக்ரவர்த்தி. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் மிகுந்த மக்கள் செல்வாக்கு உடையவராக வலம் வருகிறார் நாயகன் குகன் சக்கரவர்த்தி. மண வாழ்க்கையில் சில பிரச்சினைகளால் மனம் உடைந்து வாழ்க்கையின் மீது பிடிப்பு இல்லாமல் இருக்கும்போது அவரின் முன்னாள் காதலி தற்கொலைக்கு முயற்சிக்க, அவரை காப்பாற்றி அவர் வாழ்க்கையும் சரியாக இல்லை என்பதை தெரிந்து கொண்டு அவர் வாழ்க்கைக்கும் உதவ நினைக்கிறார். அதற்காக ஒரு கொலை செய்யும் குகன் சக்கரவர்த்தி, அந்த கொலையால் கொஞ்சம் பின் விளைவுகளையும் சந்திக்கிறார். அந்த பிரச்சினைகளில் இருந்து எப்படி மீண்டார்? அவர் மண வாழ்க்கை என்ன ஆனது? மனைவி, இரண்டாம் காதலியுடனான உறவு எப்படி இருந்தது? என்பதே மீதிக்கதை.
நாயகன் குகன் சக்கரவர்த்தி நம்ம ஊர் மாஸ் ஹீரோ இமேஜில் அப்படியே ஒட்டிக் கொள்கிறார். நினைத்த விஷயத்தை தன்னுடைய செல்வாக்கால் செய்து முடிப்பவர், காதல், மண வாழ்க்கையில் அதன் போக்கில் போகிற கதாபாத்திரத்தில் கொஞ்சம் காமெடி, ஆக்ஷன் என அனைத்தும் கலந்த ஒரு ஹீரோவாக ஸ்கோர் செய்கிறார். ஏழை மக்களுக்கு உதவும் மாஸ் ஹீரோவாக நடிக்கிறார், ஆனாலும் ஒரு சில நேரத்தில் இவர் நல்லவரா? கெட்டவரா? எனவும் யோசிக்க வைக்கிறார்.
பள்ளி மாணவியாக இருக்கும்போதே நாயகன் மீது காதல் வயப்பட்டு மனைவி ஆனவர் மற்றும் முன்னாள் காதலி என இரண்டு நாயகிகளும் கதையின் மையக் கதாபாத்திரங்களில் முக்கியத்துவம் உணர்ந்து நடித்திருக்கிறார்கள். பொன்னம்பலம், வையாபுரி, வாசு விக்ரம் என சீனியர் மற்றும் பிரபலமான நடிகர்கள் நடித்ததும் இந்த படத்துக்கு பலம்.
இயக்குனர் குகன் சக்ரவர்த்தியார் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் உட்பட 21 துறைகளை தனி ஒரு நபராக செய்து ஒரு (சோ)சாதனை முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறார். நடிகராக ஓரளவு ஸ்கோர் செய்பவர் திரைக்கதை, வசனம் போன்றவற்றை கை போன போக்கில் எழுதி எடுத்து தள்ளியிருக்கிறார்.
பாடல்களும், பின்னணி இசையும் ஓகே ரகம். ஒளிப்பதிவும் கொஞ்சம் தாறுமாறாகவே இருக்கிறது. கேமரா கோணங்கள் எல்லாம் கதிகலங்க வைக்கிறது. எடிட்டிங்கும் சவுண்ட் எஃபெக்ட்ஸூம் சிஜியும் நானே எல்லாத்தையும் பண்றேன் பாரு என செய்தது போல இருக்கிறது. ஒரு பாடல் காட்சியில் எல்லாம் பகலில் வாணவேடிக்கை எல்லாம் நடக்கிறது.
முதல் காட்சியில் பிரமாண்டமாக ஒரு மாஸ் படம் போல துவங்கி பின் காதல், ட்ராமா என சென்று த்ரில்லர் மோடுக்கு சென்று கதை எதை நோக்கி பயணிக்கிறது என்பதையே கண்டுபிடிக்க முடியாதவாறு தாறுமாறாக தாவிக் கொண்டே இருக்கிறது. கிளைமாக்ஸில் ஒரு ட்விஸ்ட் உடன் முடித்து ஆச்சர்யப்படுத்துகிறார். மொத்தத்தில் இது ஒரு குகன் சக்ரவர்த்தியார் படைப்பு, குகன் சக்ரவர்த்தியாருக்காக குகன் சக்ரவர்த்தியார் உருவாக்கிய ஒரு படைப்பு.

