வா வாத்தியார் – விமர்சனம்!

சூது கவ்வும் என்ற படம் மூலம் டார்க் காமெடி ஜானரை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வந்தவரும், காதலும் கடந்து போகும் என்ற ஒரு கவித்துவமான படத்தை தந்தவருமான நலன் குமாரசாமி இயக்கத்தில் வெளியாகும் மூன்றாவது திரைப்படம் “வா வாத்தியார்”. ட்ரெண்ட்செட்டிங் இயக்குனர் என பார்க்கப்படும் நலன் குமாரசாமியிடம் இருந்து கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழித்து வெளியாகும் படம் என்பதாலும், அவரது படத்தில் ஒரு மாஸ் ஹீரோ நடித்திருப்பதாலும் எதிர்பார்ப்பு எகிறி இருக்கிறது. எம்ஜிஆர் என்ற மாமனிதரை போற்றும் ஒரு படமாக ட்ரைலரை பார்க்கும்போதே தெரிகிறது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ராஜ்கிரண் தீவிரமான எம்ஜிஆர் ரசிகர். எம் ஜி ஆர் உடல் நலமின்றி மருத்துவமனையில் இருக்கிறார் என்பதால் அவர் முகத்தை படத்திலாவது பார்க்கிறோம் என குடியிருந்த கோவில் படத்தின் பிரிண்டை வாடகைக்கு எடுத்து படம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். படம் பார்த்துக் கொண்டிருக்கும்போது எம்ஜிஆர் மறைந்து விட்டார் என்ற செய்தி வருகிறது. அந்த சோகத்தில் இருக்கும்போதே ராஜ்கிரணுக்கு பேரன் பிறக்கிறார். எம் ஜி ஆர் இறந்த அதே நேரத்தில் பேரன் பிறந்ததால் அவர் எம் ஜி ஆர் மறு பிறவி என நினைக்கிறார். அத்தோடு நேர்மையாக வளர்க்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார். அதீத நேர்மை ஒரு கட்டத்தில் பிடிக்காமல் போக, தவறான வழிகளில் போக ஆரம்பிக்கிறார் கார்த்தி. போலீஸ் அதிகாரி ஆன பிறகும், தாத்தா மீதுள்ள பாசத்திற்காக தான் நேர்மை தவறியதை அவருக்கு தெரியாமல் பார்த்துக் கொள்கிறார். ஒரு கட்டத்தில் தாத்தாவுக்கு உண்மை தெரிய வர, அவர் இறந்து போகிறார். அந்த நேரத்தில் இருந்து எம்ஜிஆர் போலவே உதவி கேட்பவர்களுக்கு தன்னையறியாமலே உதவி செய்கிறார். அதன் மூலம் எதிரிகளின் பகைக்கும் ஆளாகிறார். அதிலிருந்து எப்படி மீண்டார்? தாத்தா ஆசைப்பட்டது போல எம்ஜிஆர் கொள்கைகளை கடைபிடித்து வாழ்ந்தாரா? என்பதே மீதிக்கதை.

மாஸ் ஹீரோவாக இருந்தாலும் வெரைட்டியான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பதில் கார்த்திக்கு நிகர் கார்த்தி தான். வெற்றி தோல்வியை தாண்டி எந்த ஒரு வித்தியாசமான கதை என்றாலும், கதாபாத்திரம் என்றாலும் அதில் ஃபிட் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வது தான் அவரது ஸ்டைல். கதாபாத்திரத்துக்காக அப்படியே மாறி நிற்பார். நெகட்டிவ் ஷேட் இருந்தால் அல்வா சாப்பிடுவது போல. இந்த படத்தில் MGR மேனரிஸம், காசுக்காக எதையும் செய்யும் போலீஸ் என இரண்டிலும் பெர்ஃபார்மன்ஸில் பின்னி எடுக்கிறார்.

நாயகி கிரிதி ஷெட்டி. படத்தில் நடிக்க அவ்வளவாக ஸ்கோப் இல்லையென்றாலும் அழகுப் பதுமையாக வந்து செல்கிறார். அதனால் கார்த்தி பேசும் வசனம் போல, “எனக்கு பிடிச்சிருக்கு, நான் ரசிப்பேன்” என நாமும் சொல்லிக் கொள்ளலாம். சத்யராஜ் ஒரு அரசியல் புரோக்கராக, கார்பரேட் வில்லனாக நடிப்பு மேனரிஸம் என வித்தியாசம் காட்டி கலக்கியிருக்கிறார். ராஜ் கிரண் எம்ஜிஆர் ரசிகராக அந்த அப்பாவித்தமான, அன்பொழுகும் அந்த முகத்தோடு நம் மனதில் அப்படியே பதிகிறார். ஷில்பா மஞ்சுநாத் மாடர்ன் கேர்ளாக சில காட்சிகளே வந்தாலும் அழகில் நம்மை வசீகரிக்கிறார். ஆனால் கதாபாத்திரம் எதுவும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. கருணாகரன், ஆனந்தராஜ், தேனப்பன், மற்ற நடிகர்களும் அவரவர் பங்கை சிறப்பாகவே செய்திருக்கிறார்கள்.

ஜார்ஜ் சி வில்லியம்ஸ் ஒளிப்பதிவு கலர்ஃபுல், அதே சமயம் ஒரு ஃபேண்டஸி உணர்வை அழகாக நமக்கு தருகிறது. சந்தோஷ் நாராயணன் பாடல்கள் அத்தனையும் நம்மை ஆட்டம் போட, தாளம் போட வைக்கிறது. முணுமுணுக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் சிறப்பு, ஆங்காங்கே எம் ஜி ஆர் பாடல்கள் வருவதும், அதன் ரீமிக்ஸ் வருவதும் என நல்ல ஒரு இசை அனுபவத்தை தந்திருக்கிறது.

இயக்குனர் நலன் குமாரசாமி இந்த படத்திலும் ஒரு புதுமையான கான்செப்டை எடுத்து நல்ல ஒரு திரை அனுபவத்தை தர முயற்சி செய்திருக்கிறார். முதல் பாதி முழுக்க கதைக்கான செட்டப்பை அழகாக அமைத்திருக்கிறார். இரண்டாம் பாதியில் இப்படி நடந்த பின் என்னவெல்லாம் நடக்கும் என்பதை திரைக்கதையாக்கி இருக்கிறார். ராமு, ராமச்சந்திரன் ட்ரான்ஸ்ஃபர்மேஷன் காட்சிகள் எல்லாம் ரசிக்க வைத்திருக்கிறது. இரண்டாம் பாதியில் யூகிக்க வைக்கும் காட்சிகள் வந்து கொஞ்சம் சுவாரஸ்யத்தை குறைக்கிறது. ஆனாலும் பொழுதுபோக்குக்கு குறைவில்லாமலேயே கொடுத்து ஈஸியாக பாஸ் மார்க் வாங்கி விடுகிறார் நலன் குமாரசாமி. மொத்தத்தில் பொங்கல் விடுமுறையில் குடும்பத்தோடு கண்டு ரசிக்கக் கூடிய ஒரு படமாக அமைந்திருக்கிறது இந்த “வா வாத்தியார்”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *