தீயவர் குலை நடுங்க – விமர்சனம்!

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், தினமும் செய்திகளில் பல சம்பவங்களை பார்க்கிறோம். சில சம்பவங்கள் நாட்டையே உலுக்கும் அளவுக்கும் போய் இருக்கிறது. ஆனாலும் இந்த குற்றங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் அப்படி ஒரு குற்றத்தை மையமாக வைத்து உருவாகியிருக்கும் ஒரு கிரைம் திரில்லர் படம் தான் “தீயவர் குலை நடுங்க”. ஆக்ஷன் கிங் அர்ஜூன், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்க, தினேஷ் லட்சுமணன் இயக்கியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சென்னை OMR-ல் ஒரு கார் விபத்துக்குள்ளாகி அதை தொடர்ந்து ஒரு கொலை நிகழ்ந்திருக்கிறது. அதை விசாரிக்கும் போலீஸ் அதிகாரி அர்ஜூன். அந்த கொலைக்கு பின்னணியை தேடி அலையும் போது இன்னொரு கொலையும் நிகழ்ந்து விடுகிறது. அந்த இரண்டு கொலைகளையும் செய்தது யார்? கொலையாளியின் நோக்கம் என்ன? மீண்டும் ஏதாவது கொலையை செய்வானா? என்ற கோணத்தில் விசாரணையை கொண்டு சொல்ல, அடுத்தடுத்து நிகழும் சம்பவங்களும், திடுக்கிடும் திருப்பங்களும் தான் மீதிக்கதை.

ஆக்ஷன் கிங் அர்ஜூன். போலீஸ் அதிகாரியாக வழக்கம் போல கலக்கி இருக்கிறார். கமெர்சியல் ஹீரோவாக இல்லாமல், கதையின் போக்கில் திரில்லர் படத்துக்கு ஏற்ற ஒரு நடிப்பை மிகச்சிறப்பாக தந்திருக்கிறார். அர்ஜூன் ரசிகர்களுக்கு விருந்தாக சண்டைக் காட்சிகளும் உண்டு.

நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ். கதையின் மிக முக்கியமான கதாபாத்திரம். கதாபாத்திரத்துக்கு ஏற்ற பலவித உணர்வுகளையும் மிகச்சிறப்பாக வெளிப்படுத்துகிறார். சிரத்தை எடுத்து நடித்த ஆக்ஷன் காட்சிகளில் ரசிக்க வைக்கிறார். காதல், எமோஷன் என அதிலும் குறை வைக்காத ஒரு நடிப்பு.

அபிராமி வெங்கடாசலம் ஒரு குழந்தைக்கு அம்மாவாக ஒரு எமோஷனலான நடிப்பை தந்து நல்ல நடிகையாக மிளிர்கிறார். பேபி அனிகா, நிச்சயம் யார் இந்த குழந்தை என எல்லாரையும் திரும்பி பார்க்க வைப்பார். அவரது Special Act நடிப்பால் நம்மை கலங்க வைக்கிறார். அந்த பள்ளி காட்சிகளில் எல்லாமே அவ்வளவு நிஜம்.

ஐஸ்வர்யா ராஜேஷ் காதலராக வரும் பிரவீன் ராஜா நல்ல ஒரு தேர்வு. நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்தால் இன்னும் பெரிய உயரங்களை தொடுவார். நடிகர் ராம்குமார் கணேசன் ஒரு மிரட்டலான கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்திருக்கிறார். காமெடி நடிகர் தங்கதுரை அர்ஜூன் உடனே வரும் ஒரு கான்ஸ்டபிளாக, காமெடி இல்லாமலே ஸ்கோர் செய்கிறார். பிராங்க்ஸ்டர் ராகுல், பிரியதர்ஷினி, சையத், விஷாலின் தந்தை G.K. ரெட்டி, P.L. தேனப்பன், O.A.K. சுந்தர், வேல ராமமூர்த்தி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் நல்ல நடிப்பையே தந்துள்ளனர்.

சரவணன் அபிமன்யு ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய பலம். முதல் பாதியில் வரும் திரில்லர் தன்மையை அப்படியே கொண்டு சென்றிருக்கிறது அவரது ஒளிப்பதிவு. அந்த அபார்ட்மெண்ட் காட்சிகள், சண்டைக் காட்சிகள் என அவற்றை படமாக்கிய விதம் எல்லாமே அருமை. பரத் ஆசிவகன் இசையில் பாடல்கள் படத்துடன் பார்க்க பொருத்தமாக இருக்கிறது. பின்னணி இசையிலும் ஸ்கோர் செய்திருக்கிறார். லாரன்ஸ் கிஷோர் படத்தொடுப்பு கச்சிதம்.

இயக்குனர் தினேஷ் லட்சுமணன் எடுத்துக் கொண்ட கதைக் களத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார். சட்டத்தை தாண்டி நியாயம் இருக்கும், நியாயத்தை தாண்டி தர்மம் இருக்கும், ஆனால் இறுதியில் தர்மமே ஜெயிக்கும் எனும் கருத்தை மையமாக வைத்து ஒரு நல்ல திரில்லர் படத்தை தந்திருக்கிறார். ஒரு சீரியல் கில்லர் கான்செப்ட் படம் போல துவங்கும் படம் பின்னர் வேறு ஒரு கோணத்தில் பயணிக்க துவங்குகிறது. அந்த பின் கதையும் ரொம்பவே அழுத்தமாக சொல்லப்பட்டிருக்கிறது. இளகிய மனம் படைத்தவர்களால் ஏற்றுக் கொள்ள முடியாதபடி அமைந்திருக்கிறது. பெண்கள் பாதுகாப்பை மீண்டும் ஒரு முறை வலியுறுத்தியிருக்கிறது இந்த படம். நிச்சயம் பெற்றோர்கள் பார்க்க வேண்டிய படம். நல்ல ஒரு திரில்லர் படம் மற்றும் அதிலேயே ஒரு கருத்தை சொல்லும் படத்தையும் தந்திருக்கிறார் தினேஷ் லட்சுமணன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *