மூன்று ஆண்டு கால கடுமையான உழைப்பு இந்த தண்டேல் – சாய் பல்லவி!

இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ தண்டேல் ‘எனும் திரைப்படத்தில் நாக சைதன்யா, சாய் பல்லவி முதன்மையான வேடத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் பிரகாஷ் பெலவாடி, கருணாகரன், ‘ஆடுகளம்’ நரேன், பப்லு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஷாம் தத் சைனூதீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ‘ராக் ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். ரொமான்டிக் சர்வைவல் டிராமா ஜானரிலான இந்த திரைப்படத்தை கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பன்னி வாஸ் தயாரித்திருக்கிறார். இதனை அல்லு அரவிந்த் வழங்குகிறார். தமிழில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். ஆர். பிரபு வெளியிடுகிறார். எதிர்வரும் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்கு முன்னதான ப்ரீ- ரிலீஸ் ஈவென்ட் சென்னையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு பேசும்போது, ”தண்டேல் என்றால் என்ன? என்ற கேள்வி அனைவரிடத்திலும் எழுந்திருக்கும். இந்திய சினிமாவில் தற்போது அனைவரும் மொழி என்ற எல்லையை கடந்து வந்து கொண்டிருக்கிறோம். தற்போது வெளியாகும் படத்தின் டைட்டில்கள் அனைவரையும் கவர்வது போல் இருக்கும். ‘பாகுபலி’க்கு பிறகு இதற்கு நாம் பழகிவிட்டோம். பாகுபலி என்றால் என்ன? என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பியதில்லை. அதேபோல் தண்டேல் என்பதற்கும் யாரிடமும் கேள்வி எழாமல் பெரும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்.‌ இருந்தாலும் தண்டேல் என்றால் லீடர் என இப்படத்தில் ட்ரெய்லர் மூலம் தெரிந்து கொண்டிருப்போம்.

இந்த திரைப்படத்தை பார்க்கும் போது அர்ப்பணிப்புடன் உருவாக்கியிருக்கிறார்கள் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. பான் இந்திய அளவிலான திரைப்படத்தை உருவாக்க வேண்டும் என்ற நெருக்கடி இல்லாமல்.. ஒரு கதையை உருவாக்கி, அது பான் இந்திய ரசிகர்களுக்கு சென்றடையும் எனும் நம்பிக்கையில் இந்த திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.‌ இதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படத்தை தமிழகத்தில் வெளியிடுவதற்கான வாய்ப்பை எங்களுடைய ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு வழங்கியதற்காக தயாரிப்பாளர் அல்லு அரவிந்த் அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

திரைத் துறையில் தயாரிப்பாளராக 10, 15 ஆண்டுகளை கடந்து செல்வது என்பது சவாலாக இருக்கும் தருணத்தில் தொடர்ந்து 50 வருடங்களாக திரைப்படங்களை வழங்கி வருகிறார் கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளரான அல்லு அரவிந்த். இந்த வகையில் கீதா ஆர்ட்ஸ் நிறுவனம் அனைவருக்கும் முன்னுதாரணமாக திகழ்கிறது. நாக சைதன்யாவுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று விரும்பி இருக்கிறேன். ஆனால் தற்போது அவர் நடித்த படத்தை தமிழகம் முழுவதும் விநியோகம் செய்யும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

சாய் பல்லவி ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால்.. அந்தத் திரைப்படம் நன்றாக இருக்கும் என்ற ஒரு நம்பிக்கையை சாய் பல்லவி தமிழக மக்களிடத்தில் ஏற்படுத்தியிருக்கிறார். அவர் இந்தப் படத்தில் நடித்திருப்பதால் இந்த திரைப்படம் நன்றாக இருக்கும் என்று நானும் நம்புகிறேன். நடிகர் கருணாகரன் தற்போது பான் இந்திய நடிகராக உயர்ந்திருக்கிறார் அவருக்கும் வாழ்த்துக்கள்” என்றார்.

இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், ” ரெட்ரோ படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் தருணத்தில் நடிகர் கருணாகரன் இப்படத்தைப் பற்றி சொல்லி இருக்கிறார். அப்போதிருந்து இப்படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு என்னிடமிருக்கிறது. இயக்குநர் சந்துவின் முந்தைய திரைப்படங்கள் நன்றாக இருக்கும். நாக சைதன்யா – சாய் பல்லவி போன்ற திறமையான நட்சத்திர நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இவர்களுக்கு இடையேயான காதல் கதை. இதற்கு தனித்துவமான பின்னணி என்பதால் சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன். கருணாகரன் விவரிக்கும் போது நிறைய பயணம் செய்ததாக குறிப்பிட்டார். கதை நிகழும் இடத்தைப் பற்றி சொல்லும் போதும்.. அதனை முன்னோட்டத்தில் பார்க்கும் போதும்.. இன்ட்ரஸ்டிங்காக இருந்தது. ராக்ஸ்டாரின் பாடல்களும் நன்றாக இருந்தது. படக் குழுவினர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நடிகர் கருணாகரன் திறமையானவர். காமெடி மட்டுமல்ல அவர் எந்த கேரக்டரிலும் நடிக்கக்கூடியவர். இந்தப் படத்தின் மூலம் அவர் தெலுங்கில் அறிமுகமாகிறார். அவருக்கும் தெலுங்கிலும் வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். படம் வெற்றியடைய வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இயக்குநர் வெங்கட் பிரபு பேசுகையில், “மகிழ்ச்சியாக இருக்கிறேன். ஒன்றரை வருடங்களுக்குப் பிறகு நாக சைதன்யாவை இப்போதுதான் சந்திக்கிறேன். அவருடைய ஸ்கிரிப்ட் செலக்சன் என்பது தனித்துவமானதாக இருக்கும். நாக சைதன்யாவை கண்வின்ஸ் செய்வது கடினம். இந்த ஜானர் புதிது. படத்தைப் பற்றி கருணாகரன் என்னிடம் சொல்லும் போது உண்மை சம்பவத்தை தழுவி தயாரான படம் இது என்றார். படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போதே படக்குழுவினரின் கடின உழைப்பு தெரிகிறது. கடலில் படப்பிடிப்பு நடத்துவது என்பது கடினமானது. சவாலானது. ஆனால் அதனை அழகாகவும், நேர்த்தியாகவும் படமாக்கி இருக்கிறார்கள். இயக்குநருக்கும், ஒட்டுமொத்த குழுவினருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். நான் சாய் பல்லவியின் பெரிய ரசிகன். நான் மட்டுமல்ல ஏராளமான இயக்குநர்கள் உங்களுடைய ரசிகர்கள். நீங்கள் மீண்டும் திரையில் ஜோடியாக இணைந்திருப்பதை வரவேற்கிறேன். உங்கள் இருவரையும் திரையில் பார்க்கும்போது பாசிட்டிவ்வான எனர்ஜி இருக்கிறது.

நானும் டிஎஸ்பியும் சிறிய வயதில் இருந்து ஒன்றாக – வெட்டியாக சுற்றிக் கொண்டிருந்தோம். தற்போது தான் இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பம் பிரபலமாகி இருக்கிறது ஆனால் 90 களிலேயே தேவி ஸ்ரீ பிரசாத் – எஸ் பி பி சரண் ஆகியோர் இணைந்து இண்டிபெண்டன்ட் மியூசிக் ஆல்பத்தினை வெளியிட்டு இருக்கிறார்கள். அந்தக் குழுவில் நான் இருந்தாலும் என்னை பாட அனுமதிக்க மாட்டார்கள்.

இயக்குநர் சந்து – இதற்கு முன் இயக்கிய ‘ கார்த்திகேயா ‘ உள்ளிட்ட படங்களை பார்த்திருக்கிறேன். அவரும் நாக சைதன்யாவும் மூன்றாவது முறையாக இணைந்து இருக்கிறார்கள். இயக்குநர் சந்து வெவ்வேறு ஜானர்களில் படங்களை இயக்கி வருகிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். எங்களின் கருணாகரனை தெலுங்கில் அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். இதற்கும் படக்குழுவினருக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

நாக சைதன்யா திறமையானவர். அர்ப்பணிப்புடன் உழைப்பவர். நன்றாக தமிழ் பேச கூடியவர். தமிழ் இயக்குநர்கள் அவரிடம் சென்று கதையையும் , காட்சியையும் தமிழிலேயே விளக்கிச் சொல்லலாம். அவரும் ஒரு காட்சியை மேம்படுத்துவதற்காக நிறைய மெனக்கெடுவார். நாங்கள் இருவரும் மீண்டும் ஒரு திரைப்படத்தில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசை. ஆனால் அது தெலுங்கு படமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன். ஏனென்றால் தெலுங்கு – தமிழ் என கலவையாக இருக்கக் கூடாது. மிகப்பெரிய திரையுலக ஆளுமை மிக்க குடும்பப் பின்னணியில் இருந்து வந்தாலும் எளிமையாக பழகக் கூடியவர். இதற்காகவும் அவருக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்று புதிய உயரத்தை தொட வேண்டும் என வாழ்த்துகிறேன்” என்றார்.

இசையமைப்பாளர் ‘ராக்ஸ்டார்’ தேவி ஸ்ரீ பிரசாத் பேசுகையில், ” ரொம்ப மகிழ்ச்சி. ‘ தண்டேல் ‘ எனக்கு ஸ்பெஷலான திரைப்படம். தண்டேல் படத்தை பற்றி தயாரிப்பாளர் பன்னி வாஸ் மற்றும் இயக்குநர் சந்து ஆகியோர் என்னை சந்தித்து படத்தை பற்றி ஒரு வரி கதையாக சொன்னார்கள்.‌ அதுவே சுவராசியமாக இருந்தது. அந்த சுவாரஸ்யம் படம் முழுவதும் இருந்தது. அதனால் பணியாற்றுவதற்கு உற்சாகமாக இருந்தது. இது உங்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

கடல் என்று வந்து விட்டால்.. அந்தப் படத்திற்கும் சென்னைக்கும் தொடர்பு எளிதாக அமைந்து விடும். இந்த படத்திலும் கடல்- கடற்கரை- மீனவர்கள்- காதல் -என அனைத்தும் இருக்கிறது. அதனால் இந்த திரைப்படம் தமிழக ரசிகர்களுக்கும் நெருக்கமானதாக இருக்கும்.

அல்லு அரவிந்த் அவர்களுக்கு என்னை சிறிய வயதில் இருந்தே தெரியும். அவரும் சிறந்த இசை ரசிகர். இந்தத் திரைப்படத்தை தயாரித்ததற்காகவும், எனக்கு வாய்ப்பளித்ததற்காகவும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

நாக சைதன்யா என் நண்பர். என் சகோதரர். திறமையானவர். தண்டேல் படத்தின் போஸ்டரை பார்த்தவுடன் ஆச்சரியப்பட்டேன். அவர் இந்த கதாபாத்திரத்திற்காக தன்னுடைய உடல் அமைப்பை மாற்றி அமைத்து இருந்தார். இது நம்முடைய வழக்கமான நாக சைதன்யா இல்லையே..! என்ற எண்ணம் வந்தது. படத்திற்காக கடும் உழைப்பை வழங்கிய அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

சாய் பல்லவி இந்த பெயரை உச்சரித்தாலே போதும். அனைவருக்கும் பிடித்து விடும். இந்தியாவின் சிறந்த இயக்குநரான மணிரத்தினமே சாய் பல்லவியின் ரசிகர் தான். இந்த திரைப்படத்தில் அவரும் தன்னுடைய சிறப்பான பங்களிப்பை வழங்கி இருக்கிறார். அவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவர் சிறந்த நடிகை மட்டுமல்ல. நன்றாக நடனம் ஆடக்கூடிய கலைஞர். அவருடைய படங்களில் இடம்பெறும் பாடல்களில் அவர் நடனமாடி இருக்கிறாரா..? என்பதை நான் ஆவலுடன் எதிர்பார்ப்பேன். ஒரு பாடலுக்கு என்ன தேவையோ.. அதனை அந்த பாடலுக்குள்ளேயே சின்ன சின்ன நடன அசைவுகள் மூலம் அழகூட்டுபவர்.

நான் பாடலாசிரியர்களுக்கு எப்பொழுதும் முக்கியத்துவமும், முன்னுரிமையும் வழங்குவேன். ஏனெனில் நான் பிரபல கதாசிரியர் சத்தியமூர்த்தியின் மகன். அவர் கதாசிரியர் மட்டுமல்ல. பாடலாசிரியரும் கூட. ஒரு பாடலுக்கு அழகாக டியூன் அமைத்தாலும் அதனை வெளிப்படுத்துவது பாடல் வரிகள் தான். இந்த வகையில் இந்த படத்தின் அனைத்து பாடல்களையும் பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார்” என்றார்.

நடிகை சாய் பல்லவி பேசும்போது, “தண்டேல் படத்தின் கதையை கோவிட் காலகட்டத்தின் போது இயக்குநர் சந்து ஒரு உண்மை சம்பவத்தை தழுவி, 20 பக்க அளவிலான கதையாக சொன்னார். அதை இவ்வளவு அழகான காதல் கதையாக மாற்றி வழங்கி இருக்கிறார்கள். இதற்காக மூன்றாண்டு காலம் கடுமையாக உழைத்திருக்கிறார்கள். ஒன்றரை ஆண்டு காலம் படப்பிடிப்பு நடைபெற்றது. இந்த பயணம் மறக்க முடியாதது. நாக சைதன்யா ஒன்றரை ஆண்டு காலத்தை இந்த கதாபாத்திரத்திற்காக வழங்கி, கடுமையாக உழைத்திருக்கிறார். இன்னும் இதற்காக உழைக்க வேண்டும் என்றாலும் அதற்கும் அவர் தயாராக இருக்கிறார்.‌ அவருடன் மீண்டும் இணைந்து பணியாற்றியது மறக்க முடியாத இனிய அனுபவமாக இருந்தது. இந்தப் படத்தின் பாடல்கள் தெலுங்கு ரசிகர்களிடத்தில் மிகவும் பிரபலம். இதற்காக பணியாற்றிய ராக் ஸ்டார் டிஎஸ்பிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.

தெலுங்கு திரையுலகத்திற்கு அறிமுகமாகும் கருணாகரனுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். அவரை தெலுங்கு திரையுலகம் சார்பாக வரவேற்கிறேன். படப்பிடிப்பில் மொழி தெரியாவி ட்டாலும் அற்புதமாக நடித்திருக்கிறார். அவருக்கும் தெலுங்கில் தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் என நம்புகிறேன். தண்டேல் படக் குழுவுடன் பணியாற்றிய ஒன்றரை ஆண்டு காலத்தில் நிறைய விசயங்களை கற்றுக் கொண்டிருக்கிறேன்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *