சுப்பன் – விமர்சனம்!

மதுரை டூ தேனி வழி ஆண்டிபட்டி, சனிக்கிழமை சாயங்காலம் 5 மணி, முயல் உள்ளிட்ட படங்களின் ஒளிப்பதிவாளர் SPS குகன் என்கிற குகநேசன் சோனைமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள படம் “சுப்பன்”. “தீய எண்ணங்கள் கொண்ட அரக்கனை வதம் செய்யும் சூரசம்ஹாரம்” நிகழ்வின் நியாய தர்மத்தை மையமாக வைத்து கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் குகநேசன் சோனைமுத்து. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஊரில் பெரிய தாதாவாக இருக்கும் பெரியவருக்கு வாரிசு இல்லை. தன்னுடைய சொத்துக்களை எல்லாம் தன்னிடம் விஸ்வாசமாக பல காலமாக இருக்கும் பழனி, வீரன் இருவருக்கும் சரி சமமாக எழுதி வைக்கிறார். ஆனால் அவரின் உயிருக்கு உயிராக இருக்கும் புல்லட் ஒன்றை மட்டும் யாருக்கும் எழுதி வைக்காமல் தன்னுடனே சேர்த்து புதைக்க சொல்கிறார். ஆனால் அந்த புல்லட்டை அடையும் போட்டியில் வீரன், பழனி மோதிக் கொள்கிறார்கள். அதில் பழனியை கொன்று அந்த புல்லட்டை அடைகிறார் வீரன். மறுபுறம் அனன்யா திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. அதே நேரத்தில் அனன்யாவை வீரனின் தம்பி ரவி தவறாக வீடியோ எடுத்து வைத்து பாலியல் ரீதியாக மிரட்டுகிறான். அதை அனன்யா தன் குடும்பத்தாரிடம் சொல்ல, போலீஸ் உட்பட அதிகாரம் மொத்தமும் ரவி கையில் இருக்க, ரவி அனன்யா குடும்பத்தையே மிரட்டுகிறான். இந்த சூழலில் அந்த குடும்பம் என்ன முடிவு எடுத்தது? அந்த பிரச்சினையை எப்படி கையாண்டது? அனன்யாவின் அண்ணன் அந்த கும்பலை பழி வாங்கினாரா? என்பதே மீதிக்கதை.

நாயகியாக காயத்ரி ரேமா. ஏற்கனவே சில படங்களில் நாயகியாக நடித்தவர், நன்றாக நடனம் ஆடக் கூடியவர். அவருக்கு ஏற்றார்போல அவரது அறிமுகமே நடனம் ஆடக்கூடிய பாடல் காட்சி தான். அதே போல நடிப்பிலும் தன்னை மெறுகேற்றிக் கொண்டுள்ளார் என்பது அவரது நடிப்பில் தெரிகிறது. நாயகியின் அண்ணனாக பால ஹாசன். தேர்ந்த நடிப்பை தந்திருக்கிறார். இயலாமையில் தவிக்கும் காட்சிகளிலும் சரி, பழி வாங்கல் காட்சிகளிலும் சரி ஸ்கோர் செய்கிறார்.

பெண்களை பாலியல் துன்புறுத்தல் செய்யும் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் யாசர் வழக்கம் போல புகுந்து விளையாடுகிறார். இவர்களை தவிர ஆனந்த முருகன், ஷர்மிஷா, சரவண சக்தி, ஸ்வாதி எஸ் பிள்ளை, சரவணன், ரொட்டேரியன் விஸ்வ நாராயண், ஸ்ரீதேவா, மிதுன் சக்ரவர்த்தி, கஜராஜ், ஹலோ கந்தசாமி ஆகியோரும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

ஜோஸ் ஃப்ராக்ங்ளின் இசையில் அந்த நிச்சயதார்த்த பாடல் தாளம் போட வைக்கிறது. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது. ஜெயகிருஷ்ணா படத்தொகுப்பு படத்தை நேர்த்தியாக தந்திருக்கிறது. குகநேசன் ஒளிப்பதிவு படத்தின் கதைக்களத்தை மிக அழகாக காட்சிப்படுத்தியுள்ளது.

இயக்குனர் குகநேசன் சோனைமுத்து இன்றைய சூழலில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களால் பெண்களுக்கு ஏற்படும் பிரச்சினைகளை மிக யதார்த்தமாக பேசியிருக்கிறார். இன்றைய சமூகத்தில் பெண்களின் பாதுகாப்பு எந்த நிலையில் இருக்கிறது என்பதையும் பேசி சமகாலத்தை நமக்கு நினைவுபடுத்துகிறது. உதவி செய்வதன் மகத்துவத்தையும், ரோட்டரி சங்கங்களின் செயல்பாடுகளையும் கூட படத்தினூடே சொல்லியிருக்கிறார். வீரன், பழனி மோதலின் அறிமுக காட்சிகளிலேயே நம் கவனத்தை ஈர்க்கிறார். பழி வாங்கல் விஷயங்களையும் சினிமாத்தனமாக இல்லாமல் ஒரு சாமானியனின் கண்ணோட்டத்தில் காட்டி ஸ்கோர் செய்கிறார். மொத்தத்தில் இன்றைய சூழலுக்கு தேவையான ஒரு படம். நிச்சயம் பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *