சில வருடங்களுக்கு முன்பே ரிலீஸ் ஆக வேண்டிய படம், 2020 பொங்கலுக்கு தர்பார் படத்துடன் ரிலீஸ் ஆக வேண்டியது. ஒரு சில பிரச்சினைகளால் பல தேதிகள் போடப்பட்டு, பின் தள்ளித் தள்ளிப் போன இந்த சுமோ, தற்போது 2025 சம்மருக்கு ரிலீஸ் ஆகியுள்ளது. குழந்தைகள் ரசிக்கும் வகையில் உருவாகியுள்ள இந்த படத்துக்கு சம்மர் ரிலீஸ் என்பது மிகப் பொருத்தம். இயக்குனர் எஸ்.பி. ஹோசிமின் இயக்கத்தில், மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோஷினோரி தாஷிரோ, வி.டி.வி. கணேஷ், மற்றும் யோகி பாபு ஆகியோர் நடிக்கு, ஐசரி கே.கணேஷ் தயாரித்துள்ள இந்த படத்திற்கு நிவாஸ் கே. பிரசன்னா இசையமைத்துள்ளார். ராஜிவ் மேனன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படம் எப்படி இருக்கு, பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சென்னையை அடுத்த கோவளம் கடற்கறையில் சர்ஃபிங் கிளப் நடத்துகிறார் விடிவி கணேஷ். அவருக்கு பக்கபலமாக இருக்கும் நாயகன் மிர்ச்சி சிவா ஒரு நாள் கடற்கரையில் கரை ஒதுங்கிய தாஷிரோவை பார்க்க, அவரை காப்பாற்றி அவர்கள் இடத்துக்கு அழைத்து செல்கிறார். அவர் மனதளவில் ஒரு 1.5 வயது குழந்தையாக இருக்கிறார், கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள் என மருத்துவர் சொல்கிறார். அவரை நன்றாக பார்த்துக் கொள்கின்றனர் சிவா மற்றும் விடிவி கணேஷ். இதற்கிடையில் அவர் ஜப்பான் நாட்டை சார்ந்தவர் என்பதை அறிந்து அவரை ஜப்பானுக்கு சென்று உறவினர்களிடம் ஒப்படைத்து விடலாம் என கிளம்புகிறார்கள். அதன் பிறகு என்ன நடந்தது? அவர் பின்னணி என்ன? அவர் யார் என்பதை காமெடியாக சொல்லியிருக்கும் படமே ‘சுமோ’.
மிர்ச்சி சிவா வழக்கம் போல தன்னுடைய காமெடியான நடிப்பு மற்றும் ரியாக்ஷன்களால் நம்மை ரசிக்க வைக்கிறார். பிரியா ஆனந்த் உடன் வரும் காட்சிகளை விட தாஷிரோவுடன் தான் படம் முழுக்க வருகிறார். பிரியா ஆனந்த் நாயகியாக தன் பங்குக்கு வந்து போகிறார் ஒரு வழக்கமான நாயகியாக. ஆனாலும் அவர் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார்.
யோகிபாபுவின் காமெடி காட்சிகள் கொஞ்சம் மையக்கதைக்கு ஒட்டாமல் பயணித்தாலும் அவரது காமெடி ரசிகர்களை கவர தவறவில்லை. வி.டி.வி. கணேஷ் சர்ஃபிங் கிளப்பின் ஓனராக தனக்கு அளிக்கப்பட்ட கதாபாத்திரத்தை மிகச்சிறப்பாக, காமெடியாகவும் செய்திருக்கிறார்.
யோஷினோரி தாஷிரோவின் தமிழ்நாட்டில் தமிழ் கலாச்சாரத்தை புரிந்து கொண்டு ஓரளவு நடித்திருக்கிறார். நடிப்பில் பெரிய அளவில் இல்லை என்றாலும் அந்த சுமோ ரெஸ்லிங்கில் நம்பகத் தன்மையுடன் நடித்திருக்கிறார்.
இந்தியாவின் முன்னணி ஒளிப்பதிவாளர் ராஜிவ் மேனன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருக்கிறார் என்ற தகவலே நமக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. சுமோ ரெஸ்லிங்கை காட்சிப்படுத்திய விதமும் ரசிக்கும்படி இருந்தது. நிவாஸ் கே. பிரசன்னாவின் இசையில் பாடல்கள் மனதில் பெரிதாக ஒட்டவில்லை, பின்னணி இசை ஓகே ரகம்.
இயக்குனர் எஸ்.பி.ஹோசிமின் இந்திய, ஜப்பானிய கலாச்சாரங்களை இணைக்க எடுத்திருக்கும் ஒரு முயற்சியாக இதை பார்க்கலாம். குழந்தைகள் ரசிக்கும் விதத்தில் தாஷிரோவின் கதாபாத்திரப் படைப்பு அமைந்துள்ளது. ஆனாலும் திரைக்கதையில் சில இடங்களில் கொஞ்சம் சுவாரஸ்யம் இல்லாமல் போனது நம் கவனத்தை கொஞ்சம் சிதறடிக்கிறது. ஜப்பானிய சுமோ கலையை காண்பித்த விதம் நன்று. சினிமா ரசிகர்களுக்கு பெரிய அளவில் ஈர்க்கும் அம்சங்கள் எதுவும் இல்லை. குழந்தைகளை அழைத்து சென்று பார்க்கும் ஒரு பொழுதுபோக்கு படம்.

