சீதா பயணம் – விமர்சனம்!

நடிகர் ஆக்ஷன் கிங் அர்ஜூன் அவ்வப்போது இயக்குனர் அர்ஜூனாக அவதாரம் எடுத்து அதிரடியான ஆக்ஷன் படங்களை கொடுத்திருக்கிறார். இயக்குனராக அவர் முத்திரையையும் பதித்திருக்கிறார். ஜெய் ஹிந்த், ஏழுமலை போன்ற பிளாக்பஸ்டர் படங்களை இயக்கியதும் அர்ஜூன் தான் என்பது இந்த தலைமுறை தெரிந்து கொள்ள வேண்டியது. தற்போது ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இயக்கத்தில் அவரின் மகள் ஐஸ்வர்யா அர்ஜுன் நடிப்பில் உருவாகியுள்ள படம் சீதா பயணம். தந்தை, மகளுக்கு வெற்றியை தந்ததா இந்த படம்? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, ஐஸ்வர்யா அர்ஜுன் சிறு வயதிலேயே தாயை இழந்து தந்தை சத்யராஜின் அரவணைப்பில் வளர்கிறார். நண்பர்கள் போல பழகுகிறார்கள் தந்தையும் மகளும். ஐஸ்வர்யா சமையல் கலை ஒர்க் ஷாப் ஒன்றிற்காக காரில் தனியாக மதுரைக்கு செல்கிறார். செல்லும் வழியில் நாயகன் நிரஞ்சன் என் கார் பிரேக் டவுன் ஆகி விட்டது. அவசர வேலையாக செல்கிறேன், மதுரைக்கு அருகில் சீதாபுரம் என்ற ஊரில் இறக்கி விட சொல்லி லிஃப்ட் கேட்கிறார். ஆரம்பத்தில் சந்தேகிக்கும் ஐஸ்வர்யா வழியில் அவரை புரிந்து கொள்கிறார். வழியில் டீக்கடை அம்மா கோவை சரளா, ஒரு ரவுடி, பள்ளி குழந்தைகள், ரோட்டோரம் பழம் விற்கும் சிறுமி, மாடு மேய்க்கும் சிறுவன் என சிலரை சந்திக்க நேர்கிறது. அந்த ஒர்க் ஷாப்பில் வாசலில் கார் நிறுத்தி உள்ளே செல்லும்போது கியாஸ் லீக்கில் அந்த ஹோட்டலே வெடித்து சிதறுகிறது. 20 நொடி தாமதத்தால் உயிர் பிழைத்த ஐஸ்வர்யா, அந்த தாமதத்துக்கு காரணமான அந்த சிலரை சந்தித்து நன்றி தெரிவிக்க கிளம்புகிறார். அந்த சீதாவின் பயணமே இந்த “சீதா பயணம்” மீதிக்கதை.

கதையின் நாயகியாக ஐஸ்வர்யா அர்ஜுன். டைட்டில் கேரக்டரில் சீதா என்ற துணிச்சலான, தன்னம்பிக்கையான, மாடர்ன் கதாபாத்திரத்தில் அவரால் முடிந்த நடிப்பை தந்திருக்கிறார். பாடல் காட்சிகளில் நடனம் ஆடும்போதும் அவ்வளவு எனர்ஜி. நிரஞ்சன் நாயகியுடன் படம் முழுக்க பயணிக்கும் கதையின் நாயகனாக வருகிறார். ஐஸ்வர்யா உடன் டான்ஸிலும் ஸ்கோர் செய்கிறார். தெலுங்கு படங்களை நினைவுபடுத்தும் பிரகாஷ் ராஜ் கதாபாத்திரம், அதிலும் அவர் வழக்கம் போல ஸ்கோர் செய்திருக்கிறார். சத்யராஜ் ஒரு பணக்கார தந்தையாக, மகளின் எதிர்காலத்தை நினைத்து ஏங்கும் அப்பாவாக மனதில் நிற்கிறார். இரண்டு முக்கியமான ஹீரோக்களின் சர்ப்ரைஸ் கேமியோவும் நம்மை ரசிக்க வைக்கிறது. கோவை சரளா, சரண் மற்ற நடிகர்களும் அவர்கள் பங்கை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

அனூப் ரூபன்ஸ் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ஓகே ரகம். ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக படத்தை கொஞ்சம் பிரமாண்டப்படுத்தி காட்டுகிறது. மென்மையான கதைக்களமாக இருந்தாலும் ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பாடல் காட்சிகள் கலந்து ஒரு முழு கமெர்சியல் படமாகவே தந்திருக்கிறார்கள்.

இயக்குனர் அர்ஜூன். ஆக்ஷன் படங்களுக்கு பெயர் போனவர், இந்த முறை தன் மகளுக்காக ஒரு காதல், ட்ராமா படத்தை தானே தயாரித்து இயக்கியிருக்கிறார். நாயகிக்கு ஏற்றவாறு ஒரு ரோடு டிராவல் படமாக தந்திருக்கிறார். தமிழ் தெலுங்கு படம் என சொல்லப்பட்டாலும் பல நேரங்களில் நம்மால் ஒரு தெலுங்கு படமாகவே பார்க்க முடிகிறது. முதல் பாதி முழுக்க சாதாரண ட்ராவல் படமாக சென்று, இரண்டாம் பாதியில் கொஞ்சம் எமோஷன்ஸ் கலந்து ஒரு திருப்திகரமான படமாக தந்திருக்கிறார் இயக்குனர் அர்ஜூன். இரண்டு முக்கிய நடிகர்களின் கேமியோவை எழுதி அவர்களுக்கென மாஸ் சண்டைக் காட்சிகள் வைத்தது ஓகே, ஆனால் கதைக்கு பெரிய அளவில் துணை புரியவில்லை. ஆனாலும் ரசிகர்களுக்கு திருப்தி. கொஞ்சம் செலவு செய்து எடுக்கப்பட்டாலும் பழைய ஃபார்முலாவில் வந்திருக்கும் ஒன்னொரு படமாகவே மனதில் பதிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *