சரீரம் – விமர்சனம்!

ஜி.வி.பி பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பெருமாள் எழுதி, இயக்கி தயாரித்துள்ள படம் ‘சரீரம்’. அறிமுக நடிகர்கள் தர்ஷன், சார்மி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் இந்த படம் சென்சிட்டிவான, ரொம்பவே வித்தியாசமான படமாக உருவாகியுள்ளது. கடவுள் தந்த கொடை சரீரம், அதனை மாற்றிக்கொள்ளும் உரிமை எவருக்குமில்லை என்ற கருத்தை ஆழமாக பேசும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கல்லூரியில் படிக்கும் தர்ஷன், சார்மி இருவரும் ஒருவருக்கொருவர் காதலிக்கின்றனர். சார்மியின் தந்தை மிகப்பெரிய தொழிலதிபர், தன் ஒரே மகளான சார்மி மீது அளவு கடந்த அன்பு வைத்திருப்பவர். அவரது தாய் மாமன் சார்மியை திருமணம் செய்து கொண்டு மொத்த சொத்தையும் அடைய நினைக்கிறார். இதனால் தர்ஷனை அடித்து கொன்று ஏரியில் வீசுகீறார். நண்பர்கள் உதவியுடன் உயிர் பிழைக்கும் தர்ஷன் மற்றும் சார்மி வீட்டை விட்டு வெளியே ஓடுகிறார்கள். அங்கு சந்திக்கும் சில திருநங்கைகள் பேச்சைக் கேட்டு பாலினம் மாற முடிவெடுக்கிறார்கள். தர்ஷன் பெண்ணாகவும், சார்மி ஆணாகவும் மாற முடிவெடுக்கிறார்கள். அதற்காக 3 கட்டங்களாக சிகிச்சைகளை மேற்கொள்ள வேண்டும். அப்படி முதல் கட்ட சிகிச்சைக்குப் பின் இரண்டாம் கட்ட சிகிச்சைக்கு தயாராகும் போது ஒரு அதிர்ச்சியான விஷயம் தெரிய வருகிறத்ய். அது என்ன? பாலினம் மாற்றம் செய்து கொண்டார்களா? காதல் ஜோடியை துரத்தும் அவர்கள் குடும்பத்தினரிடம் சிக்கினார்களா? பாலின மாற்றத்தை செய்வதால் அவர்கள் படும் இன்னல்கள் என்ன? என்பதே மீதிக்கதை.

புதுமுகங்கள் என்றாலும் தர்ஷன், சார்மி இருவருமே நல்ல நடிப்பை தந்திருக்கிறார்கள், அதிலும் திருநங்கை, திருநம்பியாக நடிக்கக் கூடிய சவாலான வேடம். அதையும் தங்களால் முடிந்தவரை நன்றாகவே செய்திருக்கிறார்கள். குறிப்பாக நாயகி சார்மி கொஞ்சம் அதிகமாகவே ஸ்கோர் செய்கிறார். நாயகியின் தந்தையாக வரும் புதுப்பேட்டை சுரேஷ் இரு வேறு பரிமாணங்களில் நல்ல நடிப்பையே தந்திருக்கிறார். மருத்துவராக வரும் ஷகீலா, நீதிபதியாக வரும் பாய்ஸ் ராஜன், வழக்கறிஞராக வரும் மதுமிதா, ஜெ.மனோஜ், கௌரி, லில்லி, மிலா ஆகியோரும் நன்றாகவே நடித்துள்ளார்கள்.

வி.டி.பாரதிராஜா இசையில் ஒரு மெலோடி பாடல் கேட்கும் ரகம். பின்னணி இசையும் படத்துக்கு ஏற்ப அமைந்திருக்கிறது. ஒளிப்பதிவும் கிடைத்த பட்ஜெட்டில் ஓரளவுக்கு தரமாகவே அமைந்துள்ளது.

காதலுக்காக தற்கொலை செய்து கொள்வது, நாக்கை வெட்டிக் கொள்வது, இதயத்தையே தானமாக தருவது வரை பல்வேறு தியாகங்களை செய்த படங்களை பார்த்திருக்கிறோம். ஆனால் காதலுக்காக இயற்கையின் படைப்பில், கடவுளின் படைப்பில் கிடைத்த சரீரத்தை தியாகம் செய்யும் ஒரு காதல் ஜோடியின் கதையை சொல்லும் ஒரு படமாக உருவாகியுள்ளது சரீரம். இயக்குனர் ஜி.வி.பெருமாள் எடுத்துக் கொண்ட கதைக்கு நியாயம் சேர்க்கும் படத்தை தந்திருக்கிறார். மேக்கிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். மற்றபடி சொல்ல வந்த கதையை எளிமையாக புரியும்படி சொல்லி கவனம் ஈர்த்திருக்கிறார். நல்ல ஒரு விவாத்ததி கிளப்பியிருக்கிறார் இந்த சரீரம் படத்தின் மூலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *