சல்லியர்கள் – விமர்சனம்!

தமிழ் ஈழ விடுதலைப் போரை தமிழ் மக்கள் யாரும் மறக்கவே முடியாது. அப்படி ஈழ விடுதலைக்காக போராடிய போராளிகள் சிங்கள ராணுவத்தால் அனுபவித்த கொடுமைகளை பற்றி ஒரு சில திரைப்படங்கள் வந்திருக்கிறது. ஆனால் இன்று அப்படி ஈழ மக்கள், ஈழப் போர் பற்றிய சினிமாக்களை இன்று எடுத்து வெளியிடுவது என்பது சாதாரண விஷயமல்ல. அதுவும் ஒரு பெரும் போராட்டம் தான். அந்த வகையில் இப்போது வெளியாகியிருக்கும் படம் தான் “சல்லியர்கள்”.

படத்தின் கதைப்படி, சிங்க தேசம் ராணுவத்தை எதிர்த்து போரிடும் தமிழ் அமைப்பினர் அவர்கள் காயமடையும்போது அவர்களை காப்பாற்ற போர்க்களத்தில் பதுங்கு குழி மருத்துவமனைகள் அமைத்து அவர்களை காக்கிறது தமிழ் விடுதலை அமைப்பு. இயக்கத்தில் அனைத்து பிரிவுகளையும் போல இருக்கும் முக்கியமான ஒரு பிரிவு தான் மருத்துவ பிரிவு. அதில் மருத்துவராக பணியாற்றும் சத்யதேவி ஓய்வு, உணவு இன்றி அர்ப்பணிப்புடன் போராட்ட குணத்துடன் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். அவருக்கு உதவியாக இன்னொரு மருத்துவரான மகேந்திரன் அந்த பதுங்கு குழிக்கு அனுப்பப்படுகிறார். இந்த சூழலில் தமிழ் அமைப்பின் மருத்துவ பதுங்கு குழிகளை அழிக்க உத்தரவிடுகிறார் சிங்க ராணுவ தளபதி. இதை எப்படி தமிழ் அமைப்பு கையாண்டது? நாயகி சத்யதேவி இந்த இயக்கத்தில் இணைந்த கதை என்ன? அவர்களுக்குள் தேசப் பற்று எப்படி மேலோங்கி இருக்கிறது? என்பதை பார்ப்போர் கண் கலங்க, மனதை நெகிழ வைக்கும் காட்சிகளுடன் சொல்லியிருக்கும் படமே ‘சல்லியர்கள்’.

நாயகியாக நடித்துள்ள சத்யதேவி. மருத்துவர் நந்தினி என்ற கதாபாத்திரத்தில் நம் மனதில் நிற்கிறார். இரட்டை ஜடையை இழுத்து கட்டி அமைப்பில் இணைய தயாராகும் அந்த காட்சி, பதுங்கு குழியில் ஒரு உண்மையான மருத்துவராகவே தெரியும் அளவுக்கு அவ்வளது யதார்த்தமான கச்சிதமான நடிப்பு. உண்மையான ஒரு தமிழ் ஈழ போராளி மருத்துவரை நம் கண் முன் நிறுத்துகிறார்.

இன்னொரு மருத்துவராக வரும் மகேந்திரன் அந்த கதாபாத்திரமாகவே மாறி நிற்கிறார். கடைசி காட்சியில் அந்த சிங்க ராணுவ வீரரை தூக்கிக் கொண்டு ஓடும் காட்சியிலேயே அந்த உணர்வை நமக்கு கடத்துகிறார். சிங்க ராணுவ அதிகாரிகள் கதாபாத்திரங்களில் களவாணி திருமுருகன், சந்தோஷ், மோகன் என மற்ற நடிகர்களும் சிறப்பான பங்களிப்பு. கதையின் இன்னொரு நாயகியான பிரியாலயா வரும் காட்சிகளும் படத்தின் முக்கியமான அம்சம். அவரின் காதலராக வரும் நாகராஜூம் நல்ல ஒரு தேர்வு.

படத்தில் மிக முக்கியமான காட்சியில் மிக முக்கியமான தருணத்தில் நாயகியின் தந்தையாக நடித்திருக்கும் சேது கருணாஸ் படத்தை அடுத்த கட்டத்துக்கு நகர்த்துகிறார். அவர் பேசும் வசனங்களும் இறக்கும் தருவாயிலும் தலையை நிமிர்த்தி இருக்கணும் என சொல்லும் காட்சியிலும் தமிழ் மக்களின் உணர்வை தூண்டுகிறார்.

ஒளிப்பதிவாளர் சிபி சதாசிவம் பங்கு அளப்பரியது. உண்மையில் யுத்த களத்திற்குள் சென்று வந்த உணர்வு நமக்கு கிடைக்கிறது. படம் பிடிக்கப்பட்ட அந்த இடங்கள் அனைத்துமே மிக மிக நெருக்கமான உணர்வை தருகிறது.

சேது கருணாஸ், கென் மற்றும் ஈஸ்வர் இசையில் வைரமுத்து, கிட்டு எழுதிய பாடல்கள் படத்தின் உணர்வை பிரதிபலிக்கிறது, பின்னணி இசையிலும் ஈழப் போர் உணர்வை நமக்குள் எழுப்புகிறது.

இயக்குனர் கிட்டு. ரொம்ப குழப்பிக் கொள்ளாமல் மிகப்பெரிய டாபிக்கான ஈழப் போராளிகளின் வாழ்வியலில் ஒரு சிறு பகுதியை மட்டும் எடுத்துக் கொண்டு அதை மிகச் சிறப்பாக கொடுத்திருக்கிறார். விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மருத்துவப் பிரிவு எப்படி இயங்கியது, போர்க்களத்தில் பதுங்கு குழியில் மருத்துவமனை அமைத்து அதில் தன்னலமின்றி பணியாற்றிய மருத்துவர்களின் மகத்துவத்தையும் மிக நெருக்கமாக நமக்கு காட்டியிருக்கிறார். லோகேஷன்கள், பதுங்கு குழி, சிறு சிறு டீட்டெயில், ஒப்பனை, ஆடை என அனைத்து விஷயங்களிலும் பார்த்து பார்த்து உழைத்திருக்கிறார். போராளிகளுக்கு உயிரை விட தங்கள் மண் மீதான பற்று எப்படி இருந்தது? இருக்கிறது என்பதை ஒரு சில வசனங்களின் மூலமே பார்வையாளர்களுக்கு கடத்தி பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறார். சல்லியர்கள் நிச்சயம் இன்றைய தலைமுறை ரசிகர்களும் பார்த்து கொண்டாட வேண்டிய ஒரு படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *