சக்தித் திருமகன் – விமர்சனம்!

இந்த ஆண்டில் மார்கன் என்ற வெற்றிப்படத்துக்கு பின் நடிகர் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் திரைப்படம் “சக்தித் திருமகன்”. வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து அதை தயாரித்து நடித்து வெற்றியை சுவைக்கும் விஜய் ஆண்டனி, அருவி இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன் இயக்கத்தில் நடித்துள்ள இந்த அரசியல் திரைப்படம், ட்ரைலரிலேயே மிகப்பெரிய எதிர்பார்ப்பை தூண்டியிருக்கிறது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 1989-ல் ஒரு பழங்குடியினப் பெண் கொலை செய்யப்பட்டு, அவரின் பச்சிளம் குழந்தை குப்பையில் வீசப்படுகிறது. இதன் பின்னணியில் பெரும்புள்ளிகள் இருக்கிறார்கள். 2025-ல் சென்னையில் அரசியல் இடைத்தரகராக இருக்கும் விஜய் ஆண்டனி, எந்த ஒரு காரியத்தையும் மிக எளிதாக செய்து முடித்துத் தருபவர். இதனால் அரசின் அனைத்து துறைகளிலும் அவரின் செல்வாக்கு பரவியிருக்கிறது. யாருக்கு எந்த ஒரு தேவை இருந்தாலும் அதை முடித்து கொடுக்கிறார் விஜய் ஆண்டனி. ஒரு கட்டத்தில் அபயங்கர் என்ற தொழிலதிபர், அரசையே தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஸ்ட்ரேட்டஜிஸ்ட் விஜய் ஆண்டனியின் நடவடிக்கைகளை ஆராய்ந்து விஜய் ஆண்டனியின் செய்கைகளை கண்டுபிடிக்கிறார். பல ஆயிரம் கோடிகள் விஜய் ஆண்டனி என்ன செய்தார்? அவரின் நோக்கம் என்ன? என்பதே பரபரப்பான மீதிக்கதை.

விஜய் ஆண்டனிக்கென அளவெடுத்து செய்தாற் போல ஒரு ஸ்கிரிப்ட். கிட்டுவாக மிகக் கச்சிதமாக பொருத்துகிறார். படம் முழுக்க அதிகம் அலட்டிக் கொள்ளாமல், அதிகம் பேசாமல் ஸ்கோர் செய்திருக்கிறார் விஜய் ஆண்டனி. நாயகியாக திருப்தி, அழகாக இருக்கிறார். கண்களால் மட்டுமே பேசுகிறார். விஜய் ஆண்டனிக்கு ஏற்ற ஜோடி. அபயங்கராக அலட்டிக் கொள்ளாமல் வில்லத்தனம் காட்டி மிரட்டுகிறார் காதல் ஓவியம் கண்ணன். செல் முருகன் நீண்ட நாளைக்கு பிறகு திரையில் தோன்றுகிறார். காமெடியனாக அல்லாமல் நல்ல ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்தில் மிகச்சிறப்பாக நடித்திருக்கிறார். அவருக்கு இனி நிறைய பட வாய்ப்புகள் அமையும் என எதிர்பார்க்கலாம்.

மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள வாகை சந்திரசேகர், அவர் பின்பற்றும் கொள்கைகளை படத்தில் அப்படியே பேசியிருக்கிறார். ரியா ஜிது, ஷோபா விஸ்வநாத், பிரசாந்த் பார்த்திபன், மாஸ்டர் கேஷவ், ரினி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்தவர்களும் தங்கள் கதாபாத்திரங்களை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

ஷெல்லி கேலிஸ்ட் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். படத்தை மிக பிரமாண்டமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். காட்சிக்கு என்ன தேவையோ அதை மிகச் சிறப்பாத தந்திருக்கிறார். ரேமண்ட் டெர்ரிக் கிரஸ்டாவின் படத்தொகுப்பு படத்தை ராக்கெட் வேகத்தில் பயணிக்க வைக்கிறது. விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் அருமை. மாறுதோ பாடலில் நம்மை கொஞ்சம் லயிக்க வைக்கிறார், ஜில் ஜில் பாடலில் நம் ரத்தத்தை சூடாக்குகிறார். இந்த படை பாடல், பின்னணி இசை என விஜய் ஆண்டனி தெறிக்க விட்டிருக்கிறார்.

இயக்குனர் அருண் பிரபு முதல் இரண்டு படங்களில் கையாண்ட அதே அழகியலுடன் இந்த படத்தில் அரசு எந்திரத்தின் இன்னொரு முகத்தை திரையில் வெளிச்சம் போட்டு காட்டுகிறார். அரசியல் தரகர்கள் பற்றிய ஒரு ஐடியாவையும் மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் மிக எளிமையாக சொல்லியிருக்கிறார். பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத முதல் பாதியில் காட்சிகள் அடுத்தடுத்து மின்னல் வேகத்தில் நகர்கின்றன. இரண்டாம் பாதியில் கொஞ்சம் நிதானம் எடுத்து அழுத்தான வசனங்களை நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல பேசியிருக்கிறார். பல நிஜ வாழ்க்கை சம்பவங்களை பிரதிபலிக்கும் சுவாரஸ்யமான அரசியல் த்ரில்லர் படத்தை கொடுத்து ஜெயித்திருக்கிறார் இயக்குனர் அருண் பிரபு புருஷோத்தமன். மொத்தத்தில் சக்தித் திருமகன் 2025-ன் பராசக்தி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *