சாவீ – விமர்சனம்!

சின்ன பட்ஜெட்டில் புதுப்புது கான்செப்டில் வித்தியாசமான களத்தில் உருவாகும் பல படங்கள் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன. அந்த வகையில் தற்போது உருவாகியிருக்கும் படம் “சாவீ”. தலைப்பே வித்தியாசமாக இருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சகாய ராஜ், ஆரோக்கிய ராஜ் சகோதரர்களின் ஒரே சகோதரி ஸ்டெல்லா இந்து இளைஞர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொள்கிறார். ஒரு சில வருடங்களிலேயே ஸ்டெல்லாவின் கணவர் இறந்து விடுகிறார். சில வருடங்கள் கழித்து ஸ்டெல்லாவின் மகன் ஜூட் மாரிமுத்து வளர்ந்து இளைஞராகிறார். அவர் தன் தந்தையை கொலை செய்தது தன்னுடைய தாய் மாமன்கள் தான் என்பதில் உறுதியாக இருக்கிறார். அவர்களை பழிவாங்கணும் எனவும் நினைக்கிறார். ஆரோக்கிய ராஜ் மகள் ஆன்னியை காதலிக்கிறார் ஜூட். ஆனால் அதை ஆரோக்கியராஜ் எதிர்க்கிறார். இந்த நிலையில் ஆரோக்கியராஜ் இறந்து போகிறார். அவரின் இறுதிச் சடங்கில் அவரது உடல் காணாமப் போகிறது. சாவு வீட்டில் காணாமல் போன அந்த உடல் கிடைத்ததா? அதை கடத்தியது யார்? பின்னணி என்ன? என்பதே மீதிக்கதை.

கைதி, மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த உதய தீப் கதையின் நாயகனாக நடித்திருக்கிறார். தாய் மாமன்கள் மீது கோபம் கொள்வது, குடித்து விட்டு செய்த அலப்பறை, காதலியுடன் கலகலவென ரகளையாக இருப்பது, எந்த சூழ்நிலையிலும் அலட்டிக் கொள்ளாமல் இருப்பது என துறுதுறுவென இருக்கிறார். ஆரோக்கியராஜ் நண்பராக, போலீஸ் அதிகாரியாக ஆதேஷ்பாலா கம்பீரமாக வலம் வருகிறார். கொஞ்சம் சஸ்பென்ஸை மெயிண்டயின் செய்கிறார். நாயகி ஆஷிகா, பக்கத்து வீட்டுப் பெண் போல எளிமையான அழகுடன் ரசிக்க வைக்கிறார். ஆரோக்கியராஜாக பிரேம் சேஷாத்ரியும் நலல் இயல்பான நடிப்பை தந்துள்ளார். ராட்சசன் யாசர், மாஸ்டர் அஜய், கவிதா சுரேஷ், ஷ்யாம் ஜீவா, பவனா என மற்ற நடிகர்களும் அவர்கள் பங்கை சரியாகவே செய்திருக்கிறார்கள்.

சரண் ராகவன், ரகுராம் இசை காமெடி படத்துக்கு ஏற்ப ஓரளவுக்கு ஓகேவாக இருக்கிறது. பூபதி வெங்கடாசலம் ஒளிப்பதிவு சினிமாத்தனமாக இல்லாமல் இயல்பாக, குறைந்த லைட்டிங்கில் பார்க்க ஓகேவாகவே இருக்கிறது. எடிட்டர் கச்சிதமாக 1:45 மணி நேரத்துக்கு தொகுத்து தந்திருக்கிறார்.

இயக்குனர் ஆண்டன் அஜித் இப்படி ஒரு கதையை எடுத்துக் கொண்டு அதை காமெடி கலந்து ஒரு பொழுதுபோக்கு படமாக தந்திருக்கிறார். கதை இதை தான் சொல்ல வருகிறதோ என நினைக்கும் போது வேறு ஒரு விஷயத்தை நோக்கி பயணிக்கிறது. போதைப்பொருள் பயன்பாடு பற்றியும், அதன் விளைவுகளை பற்றியும் ஆங்காங்கே விரிவாக பேசும் இந்த படம், போதை வாஸ்து பயன்பாடு வேண்டாம் எனவும் வலியுறுத்துகிறது. அதோடு சேர்த்து தூக்கம் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்துகிறது. தூக்கமின்மை ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கிறது என்பதையும் சொல்லியிருக்கிறார். காமெடி கலந்து இந்த கதையை சொல்லியிருப்பது குடும்பத்துடன் பார்க்கக் கூடிய படமாக்கியிருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *