சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் இந்த வேளையில் கல்லூரி மாணவர் தலைவர் தேர்தல் பின்னணியில் உருவாகியுள்ள ஒரு படம் தான் “ரெட் லேபில்”. கே.ஆர்.வினோத் இயக்கத்தில், லெனின் நாயகனாக நடிக்க, நாயகியாக அஸ்மின் மற்றும் ஆர்.வி.உதயகுமார், முனிஷ்காந்த், அனுமோகன் ஆகியோர் நடித்துள்ளனர். முழுக்க திறமையை மட்டுமே முன்னிறுத்தி உருவாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கல்லூரியில் படிக்கும் காலத்தில் மாணவர் புரட்சி, அடிதடி, வழக்கு என இருக்கும் நாயகன் லெனின் கல்லூரி வாழ்க்கைக்கு பிறகு அமைதியாக வாழ்ந்து வருகிறார். இனி ஒரு வழக்கு வந்தாலும் அது தன் வாழ்க்கையையே பாதிக்கும் என்ற நிலையில் இருக்கிறார். அந்த நேரத்தில் அவர் படித்த கல்லூரியில் நடைபெறும் மாணவர் தலைவர் தேர்தலில் இவரது உதவியை தேடி வருகிறார்கள் மாணவர்கள் சிலர். எம்.எல்.ஏ.வின் மகன் அந்த தலைவர் பதவிக்காக எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும் சூழலில் இந்த மாணவர்களுக்காக களத்தில் இறங்குகிறார் லெனின். வந்த இடத்தில் ஒரு கொலையும் நிகழ்ந்து விடுகிறது. எம்.எல்.ஏ.வுக்கு மிக நெருக்காமனவரான அந்த கொலையானவர் யார்? அந்த கொலைக்கான காரணம் என்ன? கொலை செய்தது யார்? அந்த கொலைக்குற்றத்தில் இருந்து நாயகனும், மாணவர்களும் தப்பினார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் லெனின். முதல் படம் என்றாலும் மாஸ் ஹீரோவாக ஒரு அவதாரம் எடுத்திருக்கிறார். கல்லூரி மாணவராக கொஞ்ச நேரம் வந்தாலும் ஸ்கோர் செய்கிறார். கல்லூரியை முடித்த பின் கொஞ்சம் முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்துகிறார். கோபக்கார இளைஞராக, மாணவர்களை வழிநடத்தும் ஒரு அண்ணனாக நம் மனதை வெல்கிறார். நாயகி அஸ்மின் அவரது கதாபாத்திரத்தை மிக அழகாக, இயல்பாக செய்து முடித்திருக்கிறார். பாடல் காட்சியில் நாயகன், நாயகி என இருவருக்கும் நல்ல கெமிஸ்ட்ரி.
வில்லனாக இயக்குநர் ஆர்.வி.உதயகுமார் காமெடி கலந்த ஒரு வில்லனாக ரசிக்க வைக்கிறார். 90களின் கமெர்சியல் சினிமா வில்லன்களை நினைவுபடுத்தும் ஒரு கதாபாத்திரம், ஸ்கோர் செய்கிறார். முனீஷ்காந்த் ஒரு சின்ன காட்சியில் வந்தாலும் ரசிக்க வைத்திருக்கிறார். அனுமோகன் படையப்பா படத்தில் பார்த்த அதே அனுமோகனான வந்து சென்றிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு படத்தின் பிரமாண்டத்தை கொஞ்சம் கூட்டியிருக்கிறது. பெரும்பாலும் ஒரு கல்லூரியில் நடக்கும் கதை என்றாலும் பல இடங்களை அழகாக காட்டி ரசிக்க வைக்கிறார். கைலாஷ் மேனன் இசையில் காதல் பாடல் இதமாக இருக்கிறது. பின்னணி இசையும் படத்துக்கு பெரும் பலம். எடிட்டர் லாரன்ஸ் கிஷோர் இரண்டு மணி நேரத்துக்கு உள்ளாக படத்தை விறுவிறுப்பாக நகர்த்த பேருதவி புரிந்திருக்கிறார்.
பொன் பார்த்திபன் திரைக்கதை, வசனம் எழுதியிருக்கும் இந்த படத்தை மிக நேர்த்தியாக இயக்கியிருக்கிறார் இயக்குனர் கே,ஆர்.வினோத். கல்லூரிக்குள் சென்று விட்டு வந்த உணர்வை தந்திருக்கிறார். காதல், மாணவர் புரட்சி, அங்கு நடக்கும் ஒரு கிரைம், அதை தொடர்ந்த சஸ்பென்ஸ் திரில்லர் என அழகாக தொடுக்கப்பட்ட ஒரு பூமாலையாக தந்திருக்கிறார்கள். கமெர்சியல் அம்சங்களும் படத்தில் சரிவிகிதமாக கலந்து ரசிக்க வைக்கிறார்கள். முதல் பாதியில் மாணவர் தேர்தல், காதல் என செல்லும் படம் இரண்டாம் பாதியில் 5th கியரில் வேகமெடுத்து வேறு பாதையில் பயணிக்கிறது. அது படத்துக்கு பெரும் பலமாகவும் அமைந்திருக்கிறது. முதல் பாதியை விட இரண்டாம் பாதி இன்னும் சுவாரஸ்யமாக மாற்றி, வெளியில் வரும் ரசிகர்களுக்கு நல்ல ஒரு திரை அனுபவத்தை தருகிறார் இயக்குனர். மொத்தத்தில் ஜாலியாக சென்று பார்த்து விட்டு வரக்கூடிய ஒரு படமாக அமைகிறது இந்த “ரெட் லேபில்”.
