தமிழ் சினிமாவுக்கு ஒவ்வொரு வருடமும் தவறாமல் பங்களிப்பு செய்து வருபவர்களில் மிக முக்கியமானவர் விஜய் ஆண்டனி. அவர் நடிப்பிலோ, இசையிலோ தயாரிப்பிலோ படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது. அந்த வகையில் விஜய் ஆண்டனி தயாரிப்பில் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகி இருக்கும் படம் “பூக்கி”. விஜய் ஆண்டனியின் சலீம் உட்பட பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றிய கணேஷ் சந்திரா இப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். மார்கன் படத்தில் நடித்த அஜய் திஷான் நடித்திருக்கும் இரண்டாவது படம். எப்படி இருக்கு? இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, இன்றைய 2K தலைமுறை காதலுக்கு பெற்றோர்கள் குறுக்கே நிற்பதில்லை, காதலர்களே தான் பிரச்சனையாக இருக்கிறார்கள். அப்படி முதல் காட்சியிலேயே நாயகன் அஜய் திஷான், நாயகி தனுஷா இடையே வாக்குவாதம் வந்து காதலை முறித்துக் கொள்கிறார்கள். நடு ரோட்டில் ஒரு சண்டையில் இது நடக்க, அந்த வீடியோவும் வைரல் ஆகிறது. இருவருமே அந்த பிரேக் அப்பில் இருந்து வெளி வர என்னென்னமோ முயற்சிகளை மேற்கொண்டும் அந்த நினைவுகள் மீண்டும் மீண்டும் மனதில் வந்து கொண்டே இருக்கிறது. இதற்கிடையில் இன்னொரு காதலோ அல்லது திருமணமோ செய்து கொண்டால் வெளிவந்து விடலாம் என நினைக்கிறார்கள். அப்படி அவர்கள் எடுக்கும் முடிவுகள் அவர்கள் வாழ்க்கையில் என்னவெல்லாம் செய்தது? பிரிந்த காதலர்கள் சேர்ந்தார்களா? என்பதே மீதிக்கதை.
நாயகன் அஜய் திஷான், மார்கன் படத்தில் கிடைத்த பெயரை இந்த படத்திலும் தக்க வைத்திருக்கிறார். இன்றைய இளைஞர்களை அப்படியே பிரதிபலித்திருக்கிறார். காதல் காட்சிகளாகட்டும், அப்பாவுடனான எமோஷனல் காட்சியாகட்டும், அம்மாவுடன் உறவினர் வீட்டு நிகழ்வுகளுக்கு செல்லும் காட்சிகளாகட்டும் என எல்லாவிதமான காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். அப்பாவுடனான எமோஷனல் காட்சி அனைத்து இளைஞர்களின் மனதை நிச்சயம் தொடும்.
நாயகி தனுஷா. முதல் படத்திலேயே இப்படி ஒரு முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல் காட்சிகளில் அஜய் உடன் கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியிருக்கிறது. இளைஞர்களின் இன்னொரு கிரஷ் ரெடி. லக்ஷ்மி மஞ்சு மஞ்சு மனநல மருத்துவராக சில காட்சிகள் வந்தாலும் அந்த கதாபாத்திரமாகவே இருக்கிறார். நாயகனின் தந்தையாக பாண்டியராஜன் மிடில் கிளாஸ் தந்தைகளை அப்படியே நம் கண் முன் நிறுத்தியிருக்கிறார். கார்பரேட் சாமியாராக சுனில் ஒரு ரகளையான கதாபாத்திரத்தில் ரசிக்க வைக்கிறார். இந்துமதி மணிகண்டன், விவேக் பிரசன்னா, பிளாக் பாண்டி, ஆதித்யா கதிர், பிக்பாஸ் சத்யா, MJ ஶ்ரீராம், அஸ்வின் ராம், ஷியாரா ஷார்மி, பிரியங்கா மஸ்தானி என மற்ற கதாபாத்திரங்களில் நடித்த ஒவ்வொருவருமே மனதில் பதியும்படியான நடிப்பை தந்திருக்கிறார்கள்.
விஜய் ஆண்டனி இசையில் பாடல்கள் எல்லமே ‘வைப்’ மெட்டீரியல். பின்னணி இசையும் 2கே கிட்ஸூ மனநிலையில் படத்துக்கு ஏற்ப இசையை தந்திருக்கிறார். விஜய் ஆண்டனியின் எடிட்டிங் கச்சிதம். கணேஷ் சந்திரா ஒளிப்பதிவு காதல் படத்துக்கேற்ப கலர்ஃபுல்லாக, கண்களுக்கு விருந்தாக அமைந்திருக்கிறது.
புதிய பரிதி கதை, திரைக்கதை, வசனம் எழுத அதை ரசிக்கும் விதத்தில் இயக்கி ஒரு நல்ல ரொமாண்டிக் காமெடி படமாக தந்திருக்கிறார் இயக்குனர் கணேஷ் சந்திரா. படம் முழுக்க ஆங்காங்கே 2கே கிட்ஸ் மொழியில் பல அம்சங்கள் இடம் பெற்றிருக்கின்றன. Fling, ons, dating apps, types of sexuality, stages of break up, talking animals என முழுக்க முழுக்க இணையத்தில் உலவும் இன்றைய தலைமுறையின் பேச்சு வழக்கை, வாழ்க்கை முறையை படம் முழுக்க பரப்பி வைத்திருக்கிறார்கள். முதல் காட்சியிலேயே காதல் பிரேக் அப் என ஷாக் கொடுத்து அவர்கள் எப்படி மீண்டும் இணைந்தார்கள் என்பதை கலகலப்பாக காமெடியுடன் ரசிக்கும் விதத்தில் சொல்லியிருக்கிறார். நிச்சயம் இளைஞர்கள் ரசிக்கக் கூடிய படம். குடும்பத்துடனும் ரசிக்கலாம். காதலர் தினத்துக்கு ஏற்ற ஒரு கலர்ஃபுல் திரைப்படம்.
SK Cinemas Rating: 3.25/5

