கோதண்டம் & கோ மற்றும் லட்சு கணேஷ் தயாரிப்பில், இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் உதவியாளர் குரு A எழுதி இயக்கியுள்ள திரைப்படம் “பருத்தி. சோனியா அகர்வால் மையக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்த படத்தில் வரும் கதாபாத்திரங்கள் அனைத்தும் உண்மை சம்பவத்தின் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, விவசாயக் கூலி வேலை செய்து வாழ்க்கையே வெறுமை என்பது போல வாழ்ந்து வருகிறார் சோனியா அகர்வால். அவருக்கு என்று யாருமே இல்லை என்பது போல இருக்கிறார். இன்னொரு புறம் பெற்றோர் முகம் பார்க்காத சிறுவன் திலிப்ஸ் பாட்டியின் அரவணைப்பில் வளர்கிறார். அவரது அண்ணன் வெளியூரில் வேலை செய்து அவ்வப்போது கிடைக்கும் பணத்தில் தம்பிக்கும் பாட்டிக்கும் தேவையானவற்றை வாங்கி வருகிறான். அதே ஊரில் வசிக்கும் அவனின் பள்ளித்தோழி வர்ஷிதா உடனான நட்பு அவனுக்கு மகிழ்ச்சியை தருகிறது. பணக்கார குடும்பமான வர்ஷிதாவின் தந்தை ஜாதி போன்ற விஷயங்களுக்கு எதிராக சமத்துவத்தோடு வாழ்கிறார். அவரின் அண்ணனோ ஜாதி வெறியனாக இருக்கிறார். அந்த சிறுவனின் பெற்றோருக்கு என்ன ஆனது? ஜாதி ஏற்றத்தாழ்வால் பாதிக்கப்படும் சிறுவன் திலிப்ஸ் அதை கடந்தாரா? அந்த சிறுவர்களின் நட்பு என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
நாயகி சோனியா அகர்வால். இதுவரை பார்க்காத ஒரு கதாபாத்திரத்தில் கூலித் தொழிலாளியாகவே நம் கண்களுக்கு தெரிகிறார். சேலை உடுத்தி கிராமத்து பெண்ணாகவே உருமாறி இருக்கிறார். ஆனாலும் அந்த கதாபாத்திரத்தை இன்னும் கொஞ்சம் வலுவாக்கி இருந்தால் நடிக்க கூடுதல் வாய்ப்புகள் அமைந்திருக்கும்.
பள்ளி சிறுவனாக வரும் திலிப்ஸ். மிக எளிமையான, இயல்பான சிறுவனாக அப்பாவித்தனம் மாறாத முகத்துடன் நம் மனதில் பதிகிறார். எமோஷனல் காட்சிகளிலும் நம்மை கலங்க வைக்கிறார். அவரது தோழியாக வரும் சிறுமி வர்ஷிதா பள்ளிச் சிறுமியாக அழகாக வந்து போகிறார். இவர்களின் நட்பை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது. சுகன்யா, சரவண சக்தி என மற்ற நடிகர்களும் அவர்கள் கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள்.
ரஞ்சித் வாசுதேவன் இசை படத்துக்கு ஓரளவு பலம் சேற்க்கிறது. ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு கிராமத்தின் அழகை அற்புதமாக காட்சிப்படுத்தியுள்ளது.
இயக்குனர் குரு கிராமத்து வாழ்வியலையும் உணர்வு போராட்டத்தையும் மிக அழகாக தான் சொல்ல வந்த களத்தில் சொல்லியிருக்கிறார். சமூகத்தின் ஏற்றத் தாழ்வுகளை, தீண்டாமையை கதையின் போக்கிலேயே மிக யதார்த்தமாக, முகத்தில் அறைந்தாற்போல சொல்லியிருக்கிறார். பால்ய பருவத்தில் இருக்கும் சிறுவர்களின் மனநிலையை யதார்த்தமாக படம் பிடித்த விதத்திலும் ஸ்கோர் செய்திருக்கிறார். மேக்கிங்கிலும் நடிகர்களை கையாண்ட விதத்திலும் இன்னும் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இன்னும் கொஞ்சம் மேம்பட்ட படமாக இருந்திருக்கும். மற்றபடி இயக்குனரின் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.

