ஸ்ரீகலா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ஜான்விகா, ஆடுகளம் நரேன், ஜெய் பாலா, கிரண் பிரதீப், சென்றாயன் மற்றும் பலர் நடிப்பில் கலா அல்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “பரிசு”. நாயகியை மையப்படுத்திய கதைக்களத்தில் இன்றைய இளம் பெண்கள் லட்சியக் கனவை நோக்கி செல்ல ஊக்கமளிக்கும் ஒரு படமாக உருவாகி இருக்கும் இந்த படம், எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கல்லூரியில் படிக்கும் நாயகி ஜான்விகா, ஓய்வு நாட்களில் விவசாயம் செய்வது, கல்லூரியிலும் படிப்பைத் தாண்டி ஒன்றையும் விடாமல் NCC-யில் ஈடுபடுத்திக் கொள்வது, துப்பாக்கி சுடுதல் என பெண்களுக்கு எல்பாம் ரோல் மாடலாகவே இருக்கிறார். துப்பாக்கி சுடும் போட்டியில் சர்வதேச அளவில் கலந்து கொண்டு பதக்கமும் பெற்று இந்தியாவுக்கு பெருமை சேர்க்கிறார். இந்திய ராணுவத்தில் சேர்ந்து ராணுவ வீரராக வேண்டும் என்ற லட்சியத்தோடும் இருக்கிறார். இதற்கிடையில் அந்த ஊரில் நடக்கும் ஒரு குற்றத்தை கண்டுபிடிப்பதிலும் ஒரு முக்கிய பங்காக இருக்கிறார். அந்த குற்றத்தை எப்படி கண்டுபிடித்தார்? ராணுவத்தில் சேர்ந்தாரா? என்பதே மீதிக்கதை.
நாயகி ஜான்விகா. ஆரம்பமே ஹீரோயின் அறிமுக பாடலுடன் அமர்க்களமாக அறிமுகமாகிறார். கல்லூரி மாணவி, விவசாயி என மாறுபட்ட விதங்களில் தனது நடிப்புத் திறமையைக் வெளிப்படுத்தியுள்ளார். தன்னைச் சுற்றி இளைஞர்கள் வந்து கொண்டே இருந்தாலும் கொஞ்சமும் கவனம் சிதறாமல் லட்சியத்தை நோக்கி செல்லும் கதாபாத்திரத்தில் கச்சிதமான நடிப்பு. சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நன்றாகவே நடித்துள்ளார்.
நாயகியின் தந்தையாக ஆடுகளம் நரேன். வழக்கம் போல மகளுக்கு உறுதுணையாக இருக்கும் அப்பா கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்கிறார். இவர்களுடன் ஜெய் பாலா, கிரண் பிரதீப், மறைந்த நடிகர் மனோபாலா, சென்றாயன், சச்சு, அஞ்சலி தேவி, சின்ன பொண்ணு, பேய் கிருஷ்ணன், ஆகியோரும் அவர்களால் முடிந்த நடிப்பை தந்திருக்கிறார்கள்.
சங்கர் செல்வராஜ் ஒளிப்பதிவு படத்தை கலர்ஃபுல்லாக பார்க்கும் விதத்தில் கொடுத்திருக்கிறது. ராஜீஷ் இசையில் பாடல்கள் சில மிகப்பெரிய ஹிட் படங்களின் பாடல்களை அப்படியே நினைவுபடுத்துகிறது. சி.வி.ஹமரா பின்னணி இசை ஓகே.
திரைப்படக் கல்லூரியில் படித்த, இயக்குனர் கலா அல்லூரி முழுக்க இன்றைய இளம் பெண்களுக்கு நல்ல செய்தியை சொல்லும் நோக்கில் ஒரு படத்தை தந்திருக்கிறார். சில காட்சிகளில் மத்திய அரசு திட்டங்களையும் எடுத்து சொல்லியிருக்கிறார். கல்லூரி மாணவ, மாணவிகள் மற்ற விஷயங்களில் கவனம் செலுத்துவதை விடுத்து லட்சியக் கனவை நோக்கி ஓட வேண்டும் என்ற கருத்தை அப்படியே வலியுறுத்தியிருக்கிறார். மொத்தத்தில் குறைகளை மறந்தால் நிச்சயம் ஒருமுறை பார்க்கக் கூடிய ஒரு திரைப்படம் தான் இந்த “பரிசு”.

