பராசக்தி – விமர்சனம்!

இறுதிசுற்று, சூரரைப் போற்று படங்களின் மூலம் தமிழ் சினிமா மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ஒட்டுமொத்த கவனத்தையும் திரும்பிப் பார்க்க வைத்த சுதா கொங்கரா இயக்கத்தில் தற்போது வெளியாகியுள்ள படம் பராசக்தி. சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா முரளி, ஸ்ரீலீலா ஆகியோர் நடிக்க ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் 100வது படம் இது. 1965 காலகட்டங்களில் நடைபெற்ற இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடி மொழி உரிமையை நிலைநாட்டிய மொழிப்போர் தியாகிகளை போற்றும் வகையில் உருவான இந்த படம், எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 1959-ல் இந்தி திணிப்புக்கு எதிராக புறநானூற்றுப் படை என்ற மாணவர் அமைப்பு சிவகார்த்திகேயன் தலைமையில் போராடுகிறது. அப்போது ஏற்பட்ட ஒரு துயர நிகழ்வால் போராட்டங்களை எல்லாம் விடுத்து, ரயில்வே துறையில் எஞ்சினுக்கு கரி அள்ளிப் போடும் வேலையை செய்து கொண்டு அமைதியான வாழ்க்கை வாழ்கிறார் சிவகார்த்திகேயன். சில ஆண்டுகள் கழித்து அவரது தம்பி அதர்வா முரளி கல்லூரியில் தன் நண்பர்களுடன் சேர்ந்து போராட்டத்தை கையிலெடுக்கிறார். இந்த போராளிகளை ஒடுக்குவதையே குறிக்கோளாக வைத்து வாழ்ந்து வருகிறார் ரவி மோகன்.

அமைதியாக வாழ்ந்து வரும் சிவா, இந்தி படித்தால் தான் இனி வேலை என்ற நிலை உருவாக, அதனால் தன் கண் முன்னே ஒரு இளைஞன் உயிர் துறக்க, சிவகார்த்திகேயன் மீண்டும் போராட்டத்தை கையில் எடுக்கிறார். சிவகார்த்திகேயன் களத்தில் இறங்கிய பின் போராட்டம் மேலும் வீரியமடைகிறது. அவர்கள் போராட்டம் தீர்வை எட்டியதா? இருமொழிக் கொள்கையை அமல்படுத்தினார்களா? ரவி மோகன் இவர்களை பிடித்தாரா? என்பதே மீதிக்கதை.

சிவகார்த்திகேயனுக்கு 25வது படம் என்ற மைல்கல்லை தாண்டி, உண்மையிலேயே சிவாவின் மைல்கல் படம் இது. செழியன் என்ற இளைஞராக சிவகார்த்திகேயன். போராட்டத்தை வழி நடத்தும் தலைவனாக, குடும்ப பொறுப்பை உணர்ந்து வேலை செய்து கொண்டு அமைதி வாழ்க்கை வாழ்வது என இரண்டு விதமாகவும் வாழ்ந்திருக்கிறார். பாடல் காட்சிகள், காதல் காட்சிகள், போராட்டக் காட்சிகள் என ஒவ்வொன்றிலும் தனித்து தெரிகிறார். இளைஞர்களின் நம்பிக்கை நாயகன் என்ற உணர்வை தருகிறார்.

ரவி மோகனை நாயகனாகவே பார்த்து பழக்கப்பட்ட நமக்கு வில்லனாக அதுவும் ஈவு இரக்கமற்ற ஒரு வில்லனாக பார்க்கும்போது பிரமிப்பாகவே இருக்கிறது. அரசாங்கத்தின் திட்டத்தை செயல்படுத்த எந்த எல்லைக்கும் செல்லும் ஒரு அதிகாரியாக மிரட்டுகிறார்.

அதர்வா முரளி துறுதுறுவென நல்ல எனர்ஜியோடு கல்லூரி இளைஞனாக வந்து நம்மை கவர்கிறார். அந்த புத்துணர்ச்சியை நடிப்பிலும் தோற்றத்திலும் காட்டியிருக்கிறார். சிவா, அதர்வாவின் அந்த அண்ணன் தம்பி கெமிஸ்ட்ரி நன்றாகவே ஒர்க் அவுட் ஆகியுள்ளது. தமிழில் ஸ்ரீலீலாவுக்கு முதல் படமே மிகச்சிறந்த ஒரு அறிமுகம். அந்த காலத்து இளம் பெண்களை தோற்றத்திலும் நடிப்பிலும் கொண்டு வந்திருக்கிறார். கிளைமாக்ஸில் ஸ்கோர் செய்கிறார்.

சேத்தன், பிரித்வி பாண்டியராஜன், காளி வெங்கட், பாலா ஹாசன் மற்ற நடிகர்கள் என அனைவருமே தரம். படத்தில் வரும் சில கேமியோ கதாபாத்திரங்கள் படத்துக்கு செம்ம சர்ப்ரைஸ். யாருனு சொல்லல, தியேட்டர்ல பாருங்க, செம்மயா இருக்கும்.

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன் ஒளிப்பதிவு வழக்கம் போலவே அபாரம். அந்த காலகட்டத்துக்கே நம்மை கூட்டிச் செல்கிறது. அதற்கு மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கிறது கலை இயக்குனர் கார்த்திக் ராஜ்குமாரின் அட்டகாசமான உழைப்பு. அந்த கால தெருக்கள், நீராவி எஞ்சின் ரயில்கள், சட்டசபை என அத்தனையும் மிக அழகாக நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார்கள்.

ஜிவி பிரகாஷின் 100வது படம். ரொம்பவே ஸ்பெஷலான படம். பாடல்கள் ஏற்கனவே செம்ம ஹிட். அடி அலையே, நமக்கான காலம், முத்தாரமே, பெருஞ்சேனை என ஒவ்வொன்றும் ஒவ்வொரு ரகம். பின்னணி இசையில் தெறிக்க விட்டிருக்கிறார். சவுண்ட் மிக்ஸிங்கும் படத்திற்கு பலம்.

இயக்குனர் சுதா கொங்கரா. ஒவ்வொரு தடவையும் எடுத்துக் கொள்ளும் கதைகளும் சம்பவங்களும் நம்மை ஆச்சர்யப்படுத்துகிறது. இந்த படத்துக்கும் அவர் எடுத்துக் கொண்ட விஷயமும், அதற்கு அவர் போட்டிருக்கும் உழைப்பும் நம்மை ஆச்சர்யப்பட வைக்கிறது. படத்தின் ஆரம்பத்திலேயே “நாங்க இந்தி எதிர்க்கல, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம்” என படத்தின் நோக்கத்தை தெளிவான வசனத்தின் மூலம் அழகாக புரிய வைத்திருக்கிறார். படம் கற்பனை என கார்டு போட்டாலும் பல வரலாற்று நிகழ்வுகளையும், மனிதர்களையும் திரையில் பார்க்கும்போது எளிதாக கனெக்ட் செய்து கொள்ள முடிகிறது.

பொறி பறக்கும் வசனங்கள் இந்த படத்தின் மிகப்பெரிய பலம். நடிகர்கள் தேர்வு, திரைக்கதை, வசனம், படத்தை உருவாக்கிய விதம் என அத்தனையிலும் தான் கில்லாடி என்பதை நிரூபித்து நல்ல ஒரு திரை அனுபவத்தையும் தந்திருக்கிறார் சுதா கொங்கரா. தெலுங்கு தான் ஆட்சி மொழினு சொல்லிருந்தாலும் வந்து போராடுற முதல் ஆளு நான் தான் என ஸ்ரீலீலா சொல்வது சுதா கொங்கராவே சொன்ன மாதிரி, The real Goosebumps moment. மொத்தத்தில் இது

21ஆம் நூற்றாண்டின் பராசக்தி!

SK Cinemas Rating: 4/5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *