படை தலைவன் – விமர்சனம்!

கேப்டன் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன். சகாப்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான இவரது நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் “படை தலைவன்”. யானை மிக முக்கிய கதாபாத்திரமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் கேப்டன் விஜயகாந்த் ஏ.ஐ. தொழில்நுட்பத்தின் மூலம் ஒரு கேமியோ அவதாரத்தில் தோன்றுகிறார். அறிமுக இயக்குநர் அன்பு இயக்கியுள்ள இந்த படம் சண்முக பாண்டியனுக்கு வெற்றியை தேடித் தந்ததா? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கஸ்தூரி ராஜா தாய் இல்லாத தன் மகன் மற்றும் மகளை வளர்த்து வருகிறார். இவர்களுடன் மணியன் என்ற யானையை மூன்றாவது குழந்தையாக நினைத்து வளர்ந்து வருகிறார். ஒரு கடன் பிரச்சினையில் ஆரம்பித்து அது நூல் பிடித்தாற்போல வந்து பிள்ளை போல பாசம் காட்டி வளர்த்த யானைக்கு பிரச்சினையாய் வந்து முடிகிறது. யானைக்கு மதம் பிடித்து விட்டது என்று சொல்லி அதை வனத்துறை யானைகள் முகாமில் வைக்கின்றனர். பின் அங்கிருந்து யானை திடீரென காணாமல் போகிறது. மொத்த குடும்பமும் தவித்துப் போகிறது. கஸ்தூரி ராஜா மனம் உடைந்து போகிறார். மகனிடம் மணியனை எப்படியாவது கண்டுபிடித்து வா என்கிறார். மணியன் என்ற யானையை தேடி, காடு மலையென அலைந்து திரிகிறார் சண்முக பாண்டியன். அந்த யானை கிடைத்ததா? யானையை கடத்திக் கொண்டு போனது யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதே மீதிக்கதை.

நாயகன் சண்முக பாண்டியன். கடந்த படங்களை விட இன்னும் கொஞ்சம் முதிர்ச்சி வெளிப்படுகிறது. நடிக்க கிடைத்த வாய்ப்பை ஓரளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார். ஆக்ஷன் காட்சிகளில் அவரது அப்பா கேப்டன் விஜயகாந்த் போலவே பறந்து பறந்து அடிக்கிறார். அவர் உடல்வாகுக்கு அதை நம்பவும் முடிகிறது. அப்பாவின் ‘பொட்டு வெச்ச தங்கக்குடம்’ பாடலிலும் நடித்திருக்கிறார். ஆனாலும் பல காட்சிகளில் அவரது அப்பா, நண்பர்கள், சுற்றி உள்ள கதாபாத்திரங்கள் மட்டுமே பேசிக் கொண்டே இருக்கிறார்கள். சண்முக பாண்டியன் வெறுமனே ஃபிரேமில் நின்று விட்டுப் போவது போல இருக்கிறது.

நாயகனின் அப்பாவாக வரும் கஸ்தூரி ராஜா படம் முழுக்க பேசிக் கொண்டே இருக்கிறார். புலம்பிக் கொண்டே இருக்கிறார், ஒரு கட்டத்தில் சலித்துப் போகிறது. நாயகி யாழினி சந்திரன், முனிஷ்காந்த், அருள் தாஸ், ஸ்ரீஜித் ரவி, ஏ. வெங்கடேஷ், எஸ்.எஸ். ஸ்டான்லி ஆகியோரும் முடிந்தவரை தங்கள் கதாபாத்திரத்தை செய்திருக்கிறார்கள். AI-ல் ஒரு முக்கியமான படத்தின் கதாபாத்திரமாகவே தோன்றுகிறார் விஜயகாந்த். காட்சியை எழுதியதை விட ‘ஏஐ’-ல் காட்டிய விதம் ரொம்பவே சுமாராக இருந்தது. விஜயகாந்த் ரசிகர்களை ஏமாற்றியிருக்கிறது.

இசைஞானி இளையராஜா இசையில் பாடல்கள் இதமாக இருந்தது. படத்தை கொஞ்சம் தூக்கி நிறுத்தியுள்ளது. பின்னனி இசை ஓகே ரகம். சதீஷ்குமார் ஒளிப்பதிவில் காடு சார்ந்த பகுதிகளை காட்டிய விதம் மிக அழகாக இருந்தது. சண்டைக் காட்சிகளை படம் பிடித்த விதமும் நன்றாகவே இருந்தது.

கொரோனாவால் வெற்றியை தவற விட்ட வால்டர் என்ற படத்தை இயக்கிய அன்பு இயக்கியிருக்கும் அடுத்த படம். கும்கி போல முழுப்படமும் யானையை வைத்து எடுத்திருப்பது சாதாரண விஷயம் இல்லை. அதற்கு நிச்சயம் பாராட்டலாம். ஆனால் திரைக்கதையும் எடுத்துக் கொண்ட கதையும் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யமாக இருந்திருக்க வேண்டும். ஆனால் யானை காணாமல் போவதை இடைவேளை வரை இழுத்திருக்கிறார்கள். இரண்டாம் பாதி முழுக்க அதை தேடி இறுதியில் கண்டுபிடித்து மீட்பது தான் கதை. ஆனால் அதிலும் திடீரென ஒரு நரபலி விஷயத்தை புகுத்தி விடுகிறார். அது கதையுடன் ஒட்டவில்லை என்பதே உண்மை. மொத்தத்தில் கேப்டன் விஜயகாந்த் ரசிகர்கள் கேப்டனுக்காகவும், அவரது வாரிசுக்காகவும் ஒரு முறை பார்க்கலாம். குழந்தைகள் படத்தை ரசிப்பார்கள் என்பது படத்துக்கு பலம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *