கிராண்ட் பிக்சர்ஸ், அப் 7 வெஞ்சர்ஸ் ஆதிராஜ் புருஷோத்தமன் இணைத் தயாரிப்பில், அபின் ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள மெடிக்கல் கிரைம் த்ரில்லர் திரைப்படம் “அதர்ஸ்”. ஆதித்யா மாதவன், கௌரி கிஷன் & அஞ்சு குரியன் நடித்துள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஒரு விபத்தில் 4 சடலங்கள் கிடைக்க, அது விபத்தா? அந்த விபத்தில் சிக்கியவர்கள் யார் என்ற கோணத்தில் வழக்கை விசாரிக்க துவங்குகிறது நாயகன் ஆதித்யா மாதவன் தலைமையிலான போலீஸ். அதே நேரத்தில் நாயகி கௌரி கிஷன் மருத்துவராக வேலை பார்க்கும் மருத்துவமனையில் நடக்கும் சில குளறுபடிகளால் நிர்வாகம் பெரும் குழப்பத்தில் இருக்கிறது. அந்த விபத்துக்கும், மருத்துவமனையில் நடக்கும் விஷயங்களுக்கும் இடையில் ஒரு தொடர்பும் இருக்கிறது. அது என்ன தொடர்பு? மருத்துவமனையில் நடக்கும் சம்பவங்களுக்கு பின்னணியில் இருப்பது யார்? அந்த விபத்தின் பின்னணியில் இருப்பது யார்? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை சொல்வதே இந்த “அதர்ஸ்” படத்தின் மீதிக்கதை.
அறிமுக நாயகன் ஆதித்யா மாதவன். முதல் படம் போலவே தெரியாத அளவுக்கு, அவரது வயதுக்கு மீறிய, கொஞ்சம் மெச்சூரிட்டியான கதாபாத்திரம். மிகச்சிறப்பாகவே செய்திருக்கிறார். அவரது உடற்கட்டும் போலீஸ் அதிகாரியாக நம்மை ஏற்றுக் கொள்ள வைக்கும் அளவுக்கு கச்சிதம். காதல், ஆக்ஷன் காட்சிகளிலும் ஸ்கோர் செய்கிறார். நல்ல ஒரு இளம் ஹீரோவாக வலம் வர அத்தனை வாய்ப்புகளும் அமைந்திருக்கிறது ஆதித்யா மாதவனுக்கு. வாழ்த்துக்கள்.
நாயகியாக கௌரி கிஷன். வழக்கமான நாயகனின் ஜோடி, டூயட் ஆடும் நாயகியாக இல்லாமல் கதையின் மிக முக்கியமான அம்சங்களை தாங்கி நிற்கும் ஒரு மருத்துவர் கதாபாத்திரம். அதை மிக இலகுவாக, சிறப்பாக செய்திருக்கிறார். ஒரு சில காட்சிகளில் நயன்தாராவை நினைவுபடுத்துகிறார். அஞ்சு குரியன் போலீஸ் அதிகாரியாக பொருத்தமான ஒரு கதாபாத்திரம், நல்ல ஒரு நடிப்பு. முனீஷ்காந்த் வரும் காட்சிகள் எல்லாம் கலகல. ஹரிஷ் பேரடிழ் மாலா பார்வதி, ஜெகன், ஆர்.சுந்தர்ராஜன் என மற்ற நடிகர்களும் சிறப்பான பங்களிப்பை தந்திருக்கிறார்கள். ராட்சசன் படத்தை போலவே சர்ப்ரைஸான ஒரு கதாபாத்திரத்தில் நடித்த நடிகரும் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை பெறுவார் என நம்பலாம்.
அரவிந்த் சிங் ஒளிப்பதிவு படத்துக்கு மிகப்பெரிய அளவில் உதவி புரிந்திருக்கிறது. ஜிப்ரான் இசையில் வந்த அந்த டூயட் பாடல் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் படத்துக்கு ஏற்ற வகையில் அந்த உணர்வை அழகாக கடத்தியிருக்கிறார். ராமர் எடிட்டிங்கும், படத்தின் நீளமும் பலம்.
இயக்குனர் அபின் ஹரிஹரன். கொஞ்சம் சென்சிட்டிவான ஒரு கதைக்களத்தை மிகச் சிறப்பான திரைக்கதை மூலம் மிக அழகாக கையாண்டு நம்மை படம் முழுக்க சீட்டில் உட்கார வைக்கிறார். முதல் பாதி படம் எதை நோக்கி செல்கிறது என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு சஸ்பென்ஸூடன் நகர்கிறது. இரண்டாம் பாதியில் அதே விறுவிறுப்புடன், அடுத்தடுத்த திருப்பங்களுடன் நல்ல ஒரு திரில்லர் படத்தை பார்த்த நிறைவை தருகிறது. ‘அதர்ஸ்’ என்ற டைட்டில் ஏன் என்பதற்கான காரணமும், டைட்டில் போடப்பட்ட இடமும் பாராட்டுக்குரியது. இந்த ஆண்டில் வெளியான மிக முக்கியமான ஒரு திரில்லர் படமாக மாறியிருக்கிறது இந்த “அதர்ஸ்”.

