தமிழில் உலக சினிமாக்களை கொடுக்கும் முயற்சிகள் அவ்வ்ப்போது எட்டிப் பார்க்கும். சமீப காலங்களில் பெரிதாக முயற்சிகள் இல்லை என்றாலும் அவ்வப்போது கடைசி விவசாயி, கூழாங்கல், சேத்துமான் போல ஒரு சில படங்கள் வந்து கொண்டு தான் இருக்கும் . அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் படம் தான் ‘ஒண்டிமுனியும் நல்லபாடனும்’. சுகவனம் எழுதி இயக்கியிருக்கும் இந்த படம் அச்சு அசல் கிராமத்து வாழ்வியலை பிரதிபலிக்கும் ஒரு படமாக உருவாகி இருக்கிறது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, விவசாய தொழிலாளி நல்ல பாடன். அவரின் சிறுவயது மகன் உயிரைக் காப்பாற்ற காவல் தெய்வம் ஒண்டிமுனியிடம் வேண்டி ஆட்டுக்குட்டி நேர்ந்து விடுகிறார். சிறுவயது மகனாக இருந்தவன் வாலிபனாகி கல்லூரி முடித்து வேலைக்கு செல்லாமல் ஊர் சுற்றும் அளவுக்கு வளர்ந்த பின்பும் கூட அந்த நேர்த்திக் கடனை செய்தபாடில்லை. அதற்கு காரணம் அந்த ஊரின் இரு பண்ணாடிகள் & அவர்களின் அதிகார மோதல். அந்த இருவரையும் சமாதானப்படுத்தினால் தான் கோவிலில் பூஜையே செய்யமுடியும் என்ற சூழ்நிலை. இந்த பிரச்சினைகளுக்கு நடுவில் அந்த ஆட்டை ஒண்டிமுனிக்கு படைத்தாரா? என்பதை மிக யதார்த்தமாக உண்மைக்கு நெருக்கமாக சொல்வதே மீதிக்கதை.
வெண்ணிலா கபடி குழுவில் பரோட்டா சூரிக்கு பெயர் வந்தது போல அந்த பரோட்ட கணக்குக்கு கோட்டை போடும் நடிகராக நமக்கு பரிச்சயமான நடிகர் ‘பரோட்டா’ முருகேசன் தான் இந்த கதையின் மையக் கதாபாத்திரமான நல்லபாடனாக வாழ்ந்திருக்கிறார். அச்சு அசல் கிராமத்து மனிதரை அப்படியே நம் கண் முன் நிறுத்துகிறார். வெறும் காலில் காடு மேடெல்லாம் உலவுவது, விவசாய வேலைகளை செய்வது ஆட்டை அவ்வளவு இயல்பாக கையாள்வது என கிராமத்து மனிதராக வாழ்ந்திருக்கிறார்.
அவரது மகளாக வரும் சித்ரா கிராமத்தின் எளிய குடும்பத்து மகள்களை பிரதிபலிக்கிறார். பிறந்த வீட்டில் அவர்கள் எப்படி இருப்பார்கள் என்பதை அப்படியே பார்த்த உணர்வை தருகிறார். நல்ல பாடன் மகனாக விஜயன். குடும்பத்து சூழலை கண்டுகொள்ளாமல் குடித்து விட்டு பெண் பின்னால் காதல் செய்து கொண்டு ஊர்சுற்றும் மகனாக அப்படியே இயல்பான நடிப்பை தந்திருக்கிறார். பண்ணாடியாக வரும் கார்த்திகேசன் அந்த திமிரான நடிப்பால் நிற்கிறார். முருகன், விஜய் சேனாதிபதி, கெளசிகா, தமிழினியன் விகடன் என மற்றவர்களும் நடிகர்களா? அந்த ஊர் மனிதர்களா என எண்ணும் அளவுக்கு அப்படி ஒரு தத்ரூபமான இயல்பான நடிப்பு.
விமல் ஒளிப்பதிவு அந்த கொங்கு மண்டலத்தின் வறண்ட நிலப்பரப்பை மிக அழகாக, இயல்பாக நமக்கு படம் பிடித்து தந்திருக்கிறது. நாமும் அந்த களத்தில் நடமாடும் உணர்வை தந்து விட்டுப் போகிறது. நடராஜன் சங்கரன் இசை படத்தின் தன்மையையும், நேட்டிவிட்டியையும் சிதையாமல் காத்திருக்கிறது. அந்த மண்ணின் இசையை தந்து படத்துக்கு பலம் சேர்க்கிறது. பல இடங்களில் வரும் நிசப்தம் படத்தை இன்னும் ஆழமாக நமக்குள் சேர்க்கிறது.
இயக்குனர் சுகவனம். இப்படி ஒரு கிராமத்து பின்னணியில் இன்றும் நடக்கும் வர்க்க வேற்பாடு, அதிகாரப் போட்டி, அதிகார திமிர், உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றையும் கதையின் போக்கில் வைத்து ஒரு மிக யதார்த்தமான படைப்பை கொடுத்திருக்கிறார். கொங்கு வட்டார மக்களின் வாழ்வியிலை, சிறு தெய்வ வழிபாட்டை மிகச் சிறப்பாக திரையில் காட்டியிருக்கிறார். வசனங்கள் படத்தின் முதுகெலும்பு என்றே சொல்லலாம். இயல்பாக சொல்லும் வசனங்கள் கூட அவ்வளவு அழுத்தமானதாக இருக்கிறது. அந்த வட்டார வழக்கை படத்தில் அவ்வளவு தத்ரூபமாக கொண்டு வந்திருப்பதும், சினிமாத்தனம் இல்லாத எளிய அந்த மண்ணின் முகங்களை நடிக்க வைத்திருப்பதும் படத்தின் தரத்தை மேலும் உயர்த்தியிருக்கிறது.
ஒண்டிமுனியும் நல்ல பாடனும் – தமிழில் ஒரு உலக சினிமா!

