தமிழில் ஒரு சில ஹைபர்லிங்க் திரைப்படங்கள் வெளியாகி அவை அனைத்தும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற படங்கள். ரசிகர்களுக்கு தீனி போடும் படங்களாக அமையும், அதே சமயம் அந்த கதைகளை ஒரு புள்ளியில் இணைக்க இயக்குனருக்கு நல்ல சாமர்த்தியமும், திரைக்கதை நுணுக்கமும் தேவை. அந்த வகையில் தற்போது வெளியாகி இருக்கும் தமிழ் ஹைபர் லிங்க் வகை திரைப்படம் “ஒன்ஸ் அபான் அ டைம் இன் மெட்ராஸ்”. நல்ல படமாக அமைந்ததா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, உயிருக்கு போராடும் காதல் மனைவியை காப்பாற்ற போராடும் ஆட்டோ ஓட்டுநர் பரத், வாங்கிய கடனை அடைக்க முடியாமல் திருநங்கை வாரிசை காப்பாற்ற போராடும் துப்புரவு தொழில் செய்யும் தாய் அபிராமி, சாதி வெறியுடன் சுற்றும் தலைவாசல் விஜய், அவரின் மகள் பவித்ரா லக்ஷ்மி காதல் திருமணம் செய்ய எடுக்கும் முயற்சி, திருமணமாகி போன வீட்டில் ஒரு வித வெறுமையையும், ஏதோ தவறாக நடக்கிறது என என்னும் அஞ்சலி நாயர் என இந்த நான்கு கதைகளும் ஒரு புள்ளியில் இணையும் கதை தான் இந்த “ஒன்ஸ் அபான் அ டைம் இன் மெட்ராஸ்”.
ஆட்டோ ஓட்டும் பரத், தன் காதல் மனைவியை ஆபரேஷன் செய்து காப்பாற்ற, 15 லட்சத்துக்காக அவர் படும் இன்னல்கள் என அந்த கதாபாத்திரத்தில் வலையை உணர்த்தி நல்ல நடிப்பை கொடுத்திருக்கிறார். கணவர் இல்லாமல் தனி ஆளாக தன் திருநங்கை மகனை வளர்க்கும் துப்புரவு தொழிலாளியாக அபிராமி மிகச்சிறந்த நடிப்பு. படித்து முடித்த பின் பெரிய வேலையில் சேர்ந்து தன் சொந்த காலில் நிற்க வேண்டும் என்று வைராக்கியம் கொண்ட கதாபாத்திரத்தில் அஞ்சலி நாயர், கச்சிதமான தேர்வு. அந்த குடும்பத்தில் தனி ஆளாக அவர் படும் வேதனைகளை சிறப்பாக கடத்தியிருக்கிறார்.
சாதி வெறிப்பிடித்த தந்தை கதாபாத்திரத்தில் தலைவாசல் விஜய், அப்படியே கச்சிதமாக பிரதிபலிக்கிறார். அவரது மகளாக பவித்ரா லட்சுமி, சில காதல் காட்சிகளிலும் ரசிக்க வைக்கிறார். அஞ்சலி நாயரின் மாமனார், மாமியாராக நடித்தவர்களின் கதாபாத்திரமும் மிகவும் பேசப்படும், துணிச்சலான கதாபாத்திரம். பரத் கதையில் பயணிக்கும் கல்கி, அபிராமியின் வாரிசாக நடித்திருக்கும் திருநங்கை, அபிராமிக்கு பக்க பலமான உதவியாக இருக்கும் ராஜாஜ், முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜெகன் கவிராஜ் ஆகியோரும், ஒரு சிறப்பு தோற்றத்தில் வந்து போகும் கனிகாவும் கவர்கிறார்கள்.
கே.எஸ்.காளிதாஸ், கண்ணா.ஆர் ஒளிப்பதிவில் சென்னையின் இயல்பான முகங்களை பார்க்க முடிகிறது. இரவு காட்சிகளிலும் யதார்த்தத்துக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். ஜோஸ் பிராங்க்ளின் இசையில் பாடல்கள் ஓகே ரகம், சேகுவேர பாடல் கொஞ்சம் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் பலம் சேர்க்கிறது. ஷான் லோகேஷ் எடிட்டிங் படத்தையே மாற்றிப் போட்டிருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது.
உண்மை சம்பவம் ஒன்றை சொல்லி கதையை ஆரம்பிக்கும் இயக்குனர் பிரசாத் முருகன், அதன் இழையோடு அதில் இருந்து ஒரு விஷயத்தை நான்கு கதைகளினூடே புகுத்தியிருக்கும் விதம் சிறப்பு. ஆரம்பத்தில் சில விஷயங்கள் ஏன், எதற்கு என தோன்ற வைத்தாலும் இரண்டாம் பாதியில் கிளைமாக்ஸை நெருங்கும் போது அட அவற்றை இணைத்த விதம் அட போட வைக்கிறது. பிரசாத் மற்றும் ஜெகன் வசனங்கள் பல இடங்களில் கைதட்டல் வாங்குகிறது. விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையை அப்படியே திரையில் பார்த்த உணர்வும் எழுகிறது. மொத்தத்தில் நல்ல ஒரு ஹைபர்லிங் திரைப்படத்தை பார்க்க விரும்பும் ரசிகர்கள் தாராளமாக சென்று ரசிக்கக் கூடிய படமாக அமைந்திருக்கிறது இந்த “ஒன்ஸ் அபான் அ டைம் இன் மெட்ராஸ்”.