நிர்வாகம் பொறுப்பல்ல – விமர்சனம்!

ஆர் கே ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் டி. ராதாகிருஷ்ணன் தயாரிப்பில் எஸ்.கார்த்தீஸ்வரன் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’. மோசடிகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் முன்னணி நடிகர்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். காமெடி கலந்து கமெர்சியல் படமாக வெளியாகியுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கார்த்தீஸ்வரன் ஒரு மோசடி பேர் வழி. 4 பேரை தன்னுடன் சேர்த்துக் கொண்டு எந்தெந்த வழிகளில் எல்லாம் மோசடி செய்து பணம் சேர்க்க முடியுமோ அதை எல்லாம் செய்கிறார். IMS என்ற பெயரில் நிதி நிறுவனம் துவங்கி மோசடி செய்து 4500 கோடி சம்பாதிக்கிறார். நிறுவனத்தை மூடிவிட்டு அடுத்த மோசடியாக 250 ரூபாய்க்கு ஸ்மார்ட்ஃபோன் தருகிறோம் என விளம்பரம் செய்து அதில் ஒரு 5000 கோடி சம்பாதிக்கிறார். பின் ஒரு பெண்ணை காதலிப்பதாக சொல்லி ஏமாற்றி அவரிடம் இருந்து ஒரு 500 கோடி அபேஸ் செய்கிறார். இப்படியாக சேர்த்த பணத்தை வைத்து என்ன செய்தார்? மோசடிகள் செய்த அவர் போலீஸில் சிக்கினாரா? எமாந்தவர்களின் நிலை என்ன? என்பதே மீதிக்கதை.

நாயகன் கார்த்தீஸ்வரன், கதைக்கேற்ற ஒரு நடிகராக பொருந்துகிறார். கதையின் நாயகனாக இருந்தாலும் மாஸ் ஹீரோ போல ஓபனிங் சாங் எல்லாம் வைத்து மாஸ் காட்டுகிறார். மோசடி பேர்வழியாக இருந்தாலும் பேராசைப்படக்கூடாது என்ற கொள்கையோடு மோசடி செய்யும் ஒரு மோசடி மன்னனாக, அவர் பேசும் வசனங்களால் கதாபாத்திரத்துக்கும் நியாயம் சேர்க்கிறார்.

லிவிங்ஸ்டன் நிதி நிறுவனத்தில் பணம் போட்டு ஏமாறும் பல ஆயிரம் குடும்பங்களி. ஒரு பிரதிநதியாக நல்ல நடிப்பை தந்துள்ளார். ஆதவன் நாயகனின் நண்பராக காமெடியில் ஓரளவு ஸ்கோர் செய்ய முயற்சிக்கிறார். பிளாக் பாண்டி சமூக வலைத்தளங்களில் ஏமாறும் இளைஞர்களை அச்சு அசலாக பிரதிபலிக்கிறார். இமான் அண்ணாச்சி, ராணா, அகல்யா வெங்கடேசன், ஸ்ரீ நிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெயஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா என மற்ற நடிகர்களும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.

என்.எஸ்.ராஜேஷ் குமார் ஒளிப்பதிவு பட்ஜெட் படம் என்றாலும் விஷூவலுக்கு குறைவில்லாமல் நல்ல ஒரு ஜாலியான படத்தை பார்க்கும் உணர்வை கொடுக்கிறது. கொஞ்சம் கலர்ஃபுல்லாக ரசிக்கும் விதத்தில் தந்திருக்கிறார். அந்த மெலடி பாடலை படமாக்கிய விதமும் கண்களுக்கு குளிர்ச்சி.

குத்து மன்னன் ஸ்ரீகாந்த் தேவா, எப்போதுமே பாடல்களில் பட்டைய கிளப்புவார். இந்த படத்தில் பின்னணி இசையிலும் குறை வைக்கவில்லை. படத்துக்கு ஏற்ற இசையை தந்திருக்கிறார். படத்தில் வரும் மெலடி பாடலும், சக்சஸ் பார்ட்டி குத்துப் பாட்டும் அருமை.

இயக்குனர் கார்த்தீஸ்வரன், ஒரு மோசடி பற்றிய படத்தை தந்து இன்றைய உலகில் எப்படி எல்லாம் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பாடம் எடுக்கிறார். ஆனால் அதை கருத்து சொல்லி போரடிக்காமல் சதுரங்க வேட்டை பாணியில் நல்ல ஜாலியான பொழுதுபோக்கு படமாகவும் தந்து நம்மை ரசிக்கவும் வைக்கிறார். சில ஐடியாக்களும், சில பரிச்சயமான மோசடிகளை நினைவுபடுத்தும் விதத்தில் காட்டிய விதமும் நன்றாக ரசிக்கும்படியே இருந்தது. படத்தில் 5000 கோடி, 10000 கோடி என வார்த்தைகளில் மட்டுமே சொல்வதும், காட்சிகளில் அந்த ரிச்னெஸ் இல்லாததும் சிறு குறையே. மற்றபடி இது ஒரு குட்டி சதுரங்க வேட்டை என சொல்லும் அளவுக்கு நல்ல ஒரு கமெர்சியல் பொழுதுபோக்கு படமாக அமைந்திருக்கிறது இந்த “நிர்வாகம் பொறுப்பல்ல”.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *