நறுவீ – விமர்சனம்!

மலைவாழ் மக்களின் வாழ்க்கை மற்றும் அவர்களின் நலன்களை பற்றி பேசும் பல படங்கள் வெளியாகி இருக்கின்றன. அந்த வகையில் ஒரு வித்தியாசமான ஒரு கதை சொல்லலில், திரில்லர் ஜானர் திரைப்படமாக உருவாகியுள்ள படம் தான் நறுவீ. மலைவாழ் சமூகத்தின் குழந்தைகளுக்கான கல்வி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகியுள்ள இந்த படத்தை அழகு பாண்டியன் தயாரித்துள்ளார். அறிமுக இயக்குநர் சுபாரக்.எம் இயக்கியிருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, கார்ப்பரேட் கம்பெனியில் வேலை செய்யும் வின்சு ரேச்சல், ஒரு பிராஜெக்டுக்காக ஊட்டி மலையை ஒட்டியுள்ள காடுகளுக்கு பாடினி குமார், விஜே பப்பு உள்ளிட்ட தன் குழுவுடன் செல்கிறார். அங்கு அவர்களுக்கு கேத்தரின் உதவுகிறார். அவருக்கு ஒரு நோக்கமும் இருக்கிறது. அவரின் தாய் மாமா ஹரீஷ் அந்த மலை கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்க பல தடைகளையும் கடந்து அதை ஒரு சேவையாக செய்து வருகிறார். அவர் காணாமல் போய் விட, அப்போது சிறுமியாக இருந்த கேத்தரின் வளர்ந்து வந்து தேடத் துவங்குகிறார். அவரது தாய் மாமனுக்கு என்ன ஆனது? வின்சு மற்றும் குழுவின் வேலை முடிந்ததா? என்பதே மீதிக்கதை.

டாக்டர் ஹரீஷ் கதையின் நாயகனாக நன்றாகவே நடித்துள்ளார். கதைக்கு ஏற்ப சேவை மனப்பான்மையுடன் இருக்கும் ஒரு ஆசிரியராக நம் மனதில் பதிகிறார். இப்படி ஒரு தன்னலமற்ற மனிதனாக நாமும் வாழ வேண்டும் என்ற உத்வேகம் படம் பார்க்கும் நமக்கும் ஏற்படுவது நிச்சயம்.

நாயகியாக வின்சு ரேச்சல் நல்ல ஆளுமையான கதாபாத்திரம். மிக இயல்பான நடிப்பால் நம்மை கவர்கிறார். கதையின் முக்கிய திருப்பமாக கேத்தரின் நடித்த கதாபாத்திரம் இருக்கிறது, அதை மிகச்சிறப்பாக கையாண்டிருக்கிறார்.

இவர்களுடன் வி.ஜே.பப்பு, பாடினி குமார், ஜீவா ரவி, பிரவீணா, முருகானந்தம், பிரதீப், மதன் எஸ் ராஜா ஆகியோரும் தங்கள் கதாபாத்திரங்களை உணர்ந்து நடித்திருக்கிறார்கள்.

போக்குவரத்து வசதிகள் இல்லாத மலை கிராமங்களில் பெரும் சிரமத்துக்கு இடையே தன் குழுவின் உதவியுடன் இந்த படத்தை உருவாக்கியிருக்கிறார் இயக்குனர் சுபாரக். எடுத்துக் கொண்ட கதையும் அதை சொன்ன விதமுமே நன்றாக இருந்தது. அஸ்வத் இசையில் பாடல்கள் இனிமை. ஆனந்த் ராஜேந்திரன் ஒளிப்பதிவு அந்த மலை கிராமங்களில் நாமே பயணித்ய உணர்வை தருகிறது. இயற்கை எழிலை ரசிக்கவும் வைத்திருக்கிறார். மொத்தத்தில் மலைவாழ் மக்களுக்கும் கல்வி முக்கியம், அதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற மிக உயரிய நோக்கத்தில் உருவாக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் பார்த்து ரசிக்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *