நடிகர் நகுல் முதன் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் திரைப்படம் ‘டார்க் ஹெவன்’. ‘D3 ‘ எனும் திரைப்படத்தை இயக்கிய பாலாஜி இயக்கியிருக்கிறார். இந்த படத்தில் நகுல் உடன் சரண், டேனி தயாள், அலெக்ஸ், கோதை சந்தானம் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பி.கே. மணிகண்டன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சக்தி பாலாஜி இசையமைத்திருக்கிறார். இந்த திரைப்படத்தை கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா ஃபேக்டரி ஆகிய பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்தின் அறிமுக காணொளி வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
அப்போது பேசிய இயக்குநர் பாலாஜி, “இந்த திரைப்படத்தில் நம்ம ஊரு பாரம்பரியமான நாட்டார் கதைகளை மையப்படுத்தி ஒரு இன்வெஸ்டிகேடிவ் திரில்லர் ஜானரில் எடுத்திருக்கிறேன். ‘காந்தாரா’ படம் ஓடும்போது நம்ம ஊர் கதையை எடுக்கலாமே என்ற ஊக்கம் வந்தது. தமிழகத்தின் தென் பகுதிகளில் இன்றும் மக்களின் நம்பிக்கைக்கு உரிய நாட்டார் கதைகளை தழுவி இதன் திரைக்கதையை அமைத்திருக்கிறேன். நகுல் முதன் முறையாக காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கிறார். இப்படம் ரசிகர்களுக்கு புதுவிதமான அனுபவத்தை வழங்கும் என உறுதியாக நம்புகிறேன்” என்றார்.