எத்தனையோ சமூக நீதிக்காக போராடும் படங்களை திரையில் பார்த்திருக்கிறோம். சமூகத்தில் நடக்கும் பல ஏற்றத் தாழ்வுகளை, பல உண்மைக் கதைகளை படங்களில் பார்த்திருக்கிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்தும் சாதி ஏற்றத் தாழ்வு கொடுமைகள் இருப்பதும் மிகப்பெரிய அவலம். கிராமப் பஞ்சாயத்து தேர்தல் பின்னணியில் அதை பேசும் ஒரு படமாக உருவாகியிருக்கும் படம் “நாளை நமதே”.
படத்தின் கதைப்படி, சிவகங்கை மாவட்டத்தில் சிவதானுபுரம் என்ற ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது. அந்த ஊர் பஞ்சாயத்து தொகுதி பட்டியல் இன மக்கள் போட்டியிடும் ஒரு தனி தொகுதியாக அறிவிக்கப்படுகிறது. இதை பொறுத்துக் கொள்ள முடியாத ஆதிக்க சாதியினர் கலவரத்தை உண்டு பண்ணி அந்த தொகுதியை மீண்டும் பொது தொகுதியாக மாற்றி அவர்களே தலைவராக பதவியை அனுபவித்து வருகிறார்கள். அதன் பின் 15 ஆண்டுகளாக இருக்கும் அந்த ஊர் தலைவரால் வளர்ச்சி இன்றி இருக்கும் அந்த கிராம பஞ்சாயத்து மீண்டும் தனித் தொகுதியாக அறிவிக்க்ப்படுகிறது. முதலில் அதை விரும்பாதா ஆதிக்க சாதியினரின் ஒரு பிரிவினர் பட்டியலினத்தில் ஒருவரை நிற்க வைத்து அவரை டம்மி தலைவராக்கி நாமே அதிகாரங்களை எடுத்துக் கொள்ளலாம் என நினைக்கிறார்கள். அந்த நேரத்தில் அந்த ஊர் பெண்ணான நாயகி தேர்தலில் அவரை எதிர்த்து போட்டியிட வேண்டிய சூழல் உருவாகிறது. பல மிரட்டல்கள், தடைகள் என அனைத்தையும் கடந்து தேர்தலில் நின்றாரா? எதிரிகளின் எண்ணம் தவிடுபொடி ஆனதா? பட்டியலின மக்கள் அரசியல் புரிதல் அடைந்தார்களா? என்பதே மீதிக்கதை.
கதையின் நாயகியாக மதுமிதா. நல்ல தமிழ் முகம். கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார். அவர் பேசும் அரசியல், மக்களுக்காக நிற்கும் குணம் என தலைமைக்கு உண்டான அத்தனை குணங்களையும் தன் நடிப்பின் மூலம் கொண்டு வந்திருக்கிறார். மிக தேர்ந்த, அழுத்தமான, அழகான நடிப்பு.
அந்த ஊரின் முகங்களாகவே தெரியும் விதத்தில் மற்ற அத்தனை நடிகர்களுமே சிறப்பான நடிப்பு. வேல்முருகன், ராஜலிங்கம், செந்தில் குமார், முருகேசன், மாரிக்கண்ணு, கோவை உமா என ஒவ்வொருவரும் வாழ்ந்திருக்கிறார்கள்.
பிரவீன் ஒளிப்பதிவு படத்துக்கு பெரும் பலம். அந்த கிராமத்தையும், கதை மாந்தர்களையும் மிக இயல்பாக, அந்த ஊரில் நாமும் பயணிக்கும் உணர்வை கொடுக்கும் வகையில் காட்சிப்படுத்தியிருக்கிறார். வி.ஜி.ஹரிகிருஷ்ணனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் நன்றாகவே இருக்கிறது.
இயக்குனர் வெண்பா கதிரேசன் அரசியலில் இருக்கும் இட ஒதுக்கீடு பற்றியும், அரசியலில் ஏன் ஈடுபட வேண்டும் என்பது பற்றியும், உரிமைகளை கேட்டு வாங்குவது பற்றியும் ஒரு சினிமா மூலம் மிக அழகாக சொல்லியிருக்கிறார். ஆதிக்க சாதியினரில் ஒரு சாரார் இன்னமும் அதே ஆதிக்க மனநிலையில் இருப்பதையும் வெட்ட வெளிச்சமாக்கியிருக்கிறார். ஊர் தலைவராகவே இருந்தாலும் பட்டியலினத்தவர் என்பதால் கொடி ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டு தாக்கப்பட்டது உட்பட நிகழ்காலத்தில் நடக்கும் பல காட்சிகளையும் படத்தில் வைத்திருக்கிறார். ஏற்கனவே நந்தன் படத்தில் பார்த்திருந்தாலும் இந்த படம் வேறு ஒரு பாணியில் மிக இயல்பான அதே சமயம் அழுத்தமான அரசியலை முன்வைக்கிறது. இந்த படத்தை எடுத்ததற்காகவே வெண்பா கதிரேசனுக்கு பாராட்டுக்கள்.

