எழுத்தாளரும், பல படங்களுக்கு திரைக்கதை, வசனம் எழுதியவருமான அஜயன் பாலா இயக்குனராக மாறியிருக்கும் படம் “மைலாஞ்சி”. ஸ்ரீராம் கார்த்திக், க்ரிஷா குரூப் நடித்திருக்கும் ஒரு காதல் படமாக உருவாகியிருக்கிறது. காதலர் தினத்தை முன்னிட்டு வெளியாகியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, ஊட்டியில் உள்ள ’மைலாஞ்சி’பகுதியில் நடக்கும் கதை. தாய் தந்தை இல்லாமல் சித்தியிடம் வளர்ந்து வருகிறார் கிரிஷா குரூப். மைலாஞ்சி பறவைகள் பூங்கா நடத்தி வருகிறார் நாயகியின் சித்தி. நாயகியின் பெயரில் இருக்கும் சொத்துக்காக தன் குடிகார தம்பிக்கு நாயகியை திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார் சித்தி. அதில் இருந்து தப்பிக்க அவர் வீட்டில் வாடகைக்கு குடியிருக்கும் எஞ்சினியர் ஒருவரை ஒரு தலையாக காதலிக்கிறார். அவரிடம் காதலை சொல்வதற்குள் அவர் வீட்டை காலி செய்து விட்டு சென்னைக்கு திரும்பி விடுகிறார். அந்த நேரத்தில் வனவிலங்கு புகைப்படக் கலைஞர் நாயகன் ஸ்ரீராம் கார்த்தி அந்த ஊருக்கு வருகிறார். வந்த இடத்தில் க்ரிஷா குரூப் உடன் பழகும் வாய்ப்பு அமைகிறது. ஒரு கட்டத்தில் நட்பு காதலாக மாறுகிறது. காதலை க்ரிஷா குரூப்பிடம் சொல்ல நினைக்கும்போது, நாயகி அந்த எஞ்சினியர் உடனான காதலை பற்றி சொல்கிறார். அந்த காதலனுடன் சேர்த்து வைக்குமாறும் கேட்கிறார். தன் காதலை மறைத்து விட்டு அந்த காதலை சேர்த்து வைக்கும் முயற்சியில் இறங்குகிறார். அந்த எஞ்சினியரை மீண்டும் ஊட்டிக்கு வர வைக்கும் முயற்சிகளில் ஈடுபடுகிறார் ஸ்ரீராம் கார்த்திக். அவர் காதல் என்ன ஆனது? நாயகியின் காதலனை கண்டுபிடித்து சேர்த்து வைத்தாரா? என்பதே மீதிக்கதை.
கதையின் மையமாக நாயகி க்ரிஷா குரூப். இவரை சுற்றி தான் மொத்த கதையுமே. ஒரு கிருஷ்தவ பெண்ணாக படம் முழுக்க ஸ்கர்ட்டில், ஊட்டியை சுற்றி சுற்றி வருகிறார். முழுக்க குழந்தை தனமாக பார்க்கும் நமக்கே அவர் வாழ்க்கை எப்படியாவது நல்லவிதமாக அமையணும் என ஏங்க வைக்கிறார். குடிகாரனோடு திருமணம் செய்து வைத்து அவர் வாழ்க்கையை வீண்டித்து விடக் கூடாது என நினைக்க வைக்கிறார்.
கதையின் நாயகனாக ஸ்ரீராம் கார்த்திக். அவருக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரத்தை மிக நேர்த்தியாக செய்திருக்கிறார். காதலை மனதில் தேக்கி வைத்து காதலிக்காக அவரது ஆசையை நிறைவேற்ற முயற்சிக்கும்போது நம் மனதில் நிற்கிறார். நாயகனின் தாய் மாமனாக முனிஷ்காந்த். ஆங்காங்கே அடிக்கும் காமெடி ரசிக்க வைக்கிறது. சீனியர் புகைப்பட கலைஞராக ஒரு சில காட்சிகளில் வந்து போகிறார் சிங்கம் புலி. நாயகனின் அம்மாவாக செந்தி, நாயகியின் தாய் மாமனாக நடித்திருக்கும் கலையரசன் மற்றும் மற்ற நடிகர்களும் அவரவர் கதாபாத்திரத்தை நன்றாகவே செய்திருக்கிறார்கள்.
ஒளிப்பதிவாளர் செழியன் படத்தின் ஆகப்பெரிய பலம். ஊட்டியின் இயற்கை எழில் கொஞ்சும் அழகை மிக மிக அழகியலோடு காட்சிப்படுத்தியிருக்கிறார்கள். பாலு மகேந்திரா படங்கள் பார்க்கும் உணர்வை தர முயற்சி செய்திருப்பது தெரிகிறது.
ஒளிப்பதிவில் மட்டும் இல்லாமல் இசையிலும் அந்த உணர்வு எழுகிறது. அதற்கு காரணம் இளையராஜாவின் மனதை மயக்கும் இசை மற்றும் பாடல்கள். உன்னை நான் பாடல் படத்தின் ஹைலைட்.
இயக்குனர் அஜயன் பாலா. ஒரு கவித்துவமான காதல் கதையை உணர்வுப்பூர்வமாக சொல்ல முயற்சித்திருக்கிறார். தஸ்தோவெஸ்கியின் வெண்ணிற இரவுகள் நாவலை அடிப்படையாக கொண்டு இந்த கதையை எழுதியிருப்பாரோ என்ற கேள்வி எழுகிறது. தான் காதலிக்கும் ஒரு பெண் வேறு ஒருவனை காதலிக்க அந்த காதலை சேர்த்து வைக்க முயற்சிக்கும் நாயகன் என்ற பாணியில் இரண்டு மணி நேரம் ஒரு உணர்வுக் குவியலோடு நம்மை பயணிக்க வைக்கிறார் அஜயன் பாலா. எந்தவித பதட்டமும் இல்லாமல் பதைபதைப்பும் இல்லாமல் மிக எளிமையான ஓரு அழகியல் படமாக பார்த்து விட்டு வரலாம்.

