தெலுங்கு சினிமா பாகுபலிக்கு பிறகு அசுர வளர்ச்சி அடைந்திருக்கிறது, அதை நாம் கண் கூடாக பார்க்கிறோம். மிகப்பெரிய பிரமாண்ட படங்கள் வெளியாகி இந்திய அளவில், உலக அளவில் மிகப்பெரிய வெற்றியை அடைகின்றன. பெரிய ஹீரோக்கள் மட்டுமின்றி அடுத்தக்கட ஹீரோக்களும் பிரமாண்ட படங்களில் நடித்து தெலுங்கு சினிமாவை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தி செல்கின்றனர். கார்த்திகேயா, ஹனுமன் போன்ற படங்களின் வெற்றியே இதை பறைசாற்றும். அப்படி ஹனுமன் நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில் மிக பிரமாண்டமான பான் இந்தியா படமாக உருவாகியுள்ள படம் தான் “மிராய்”. கார்த்திக் கட்டமனேனி இயக்கியிருக்கிறார். படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, வரலாற்றில் கலிங்கத்து போருக்கு பிறகு அசோகர் சாகாவரம் ரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். அந்த புத்தகங்களை தீய சக்திகள் கைப்பற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார். தற்போதைய காலத்தில் மந்திர சக்திகள் மூலம் உலகை ஆள நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களை அடைய ஆசைப்படுகிறார். அதற்காக முயற்சிக்கிறார். அந்த மனோஜின் முயற்சியை நாயகன் தேஜா சஜ்ஜா எப்படி முறியடித்தார்? மிராய் என்றால் என்ன? என்பதை காட்சிக்கு காட்சி பிரமாண்டத்துடன் சொல்லியிருக்கும் படமே மிராய்.
நாயகன் தேஜா சஜ்ஜா, ஏற்கனவே ஜாம்பி ரெட்டி, ஹனுமன் என நல்ல ஃபேண்டஸி முயற்சிகளில் வெற்றியை சுவைத்தவர் இந்த படத்திலும் கதைக்கு கச்சிதமாக பொருந்துவதோடு ஆக்ஷன் காட்சிகளில் பட்டையை கிளப்புகிறார். ஒரு சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் கதைத் தேர்விலும், அதை மிகப்பெரிய அளவில் பொசிஸன் செய்வதிலும் ஸ்கோர் செய்கிறார். தெலுங்கு சினிமாவில் எதிர்கால டாப் ஹீரோக்களில் முக்கிய இடத்தை பிடிக்கும் வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.
வில்லனாக மனோஜ் மஞ்சு. சாகாவரத்தை அடையும் தீய நோக்கத்தை கொண்ட கதாபாத்திரத்தில் வில்லத்தனத்தில் மிரட்டுகிறார். வில்லனாக மனோஜ் நல்ல தேர்வு. ஸ்ரேயா சரணை இப்படி ஒரு கதாபாத்திரத்தில் பார்ப்பதே ஆச்சர்யம் தான். ஒரு தாயாக நடித்திருக்கிறார். ஆனாலும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்திருக்கிறார். நாயகியாக ரித்திகா நாயக், முனிவராக ஜெயராம், ஜகபதி பாபு என மற்ர நடிகர்களும் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.
கெள்ரா ஹரி இசையும் பாடல்களும் படத்துக்கு பெரும் பலமாக அமைந்து உதவி புரிந்திருக்கிறது. பின்னணி இசை பிரமாண்டத்திற்கு கூடுதல் பிரமாண்டம் சேர்க்கிறது. ஹாலிவுட் தரத்தை பின்னணி இசையில் தந்திருக்கிறார். ஸ்ரீ நாகேந்திர தங்கலா அரங்க அமைப்புகள் பிரமாண்டத்தின் உச்சம்.
இயக்குனர் கார்த்திக் கட்டமனேனியே ஒளிப்பதிவையும் மேற்கொண்டிருக்கிறார். அடிப்படையில் அவர் ஒரு கேமராமேன் என்பதால் படத்தின் தரத்தை பல படிகள் உயர்த்தியிருக்கிறார். காட்சிகள் ஒவ்வொன்றும் நம்மை படத்துக்குள் இழுத்துக் கொள்கிறது.
ஒளிப்பதிவாளராக இருந்தாலும் அவ்வப்போது அவர் சொல்ல விரும்பும் கதைகளை அழகாக திரையில் வடிக்கிறார் கார்த்திக் கட்டமனேனி. தயாரிப்பாளர் TG விஸ்வ பிரசாத் கொடுத்த நம்பிக்கையில் உருவாகியுள்ளது இந்த படம். அப்படி ஆன்மீகம் கலந்த ஃபேண்டஸி படமாக ரசிக்கும்படி கொடுத்திருக்கிறார். படத்தில் ஆக்ஷன் காட்சிகள், கிராபிக்ஸ் காட்சிகள் ஆகியவற்றை காட்சிப்படுத்திய விதமும், மிராய் என்ற கதையை எழுதிய விதத்திலேயே ஜெயித்திருக்கிறார். அவெஞ்சர்ஸ் போன்ற படங்களிலேயே இன்ஃபினிட்டி ஸ்டோன்ஸ் போன்ற விஷயங்கள் தான் படத்துடன் நம்மை ஒன்றி பார்க்க வைத்தது. அப்படி இந்த படத்திலும் 9 விஷயங்களை கொண்டு வந்த விதமும் ரசிக்கும்படி இருந்தது, மொத்தத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் சென்று ரசித்து விட்டு வரலாம்.

