லிஃப்ட், டாடா, ஸ்டார், பிளடி பெக்கர், கிஸ் என படத்துக்கு படம் வித்தியாசமான களங்களை தேர்ந்தெடுத்து தன்னுடைய கேரியரில் வெரைட்டி காட்டும் கவின் நடிப்பில் தற்போது வெளியாகியிருக்கும் படம் மாஸ்க். ஆண்ட்ரியா ஜெர்மியா கவினுக்கு இணையாக ஒரு பவர்ஃபுல் கேரக்டரில் நடித்துள்ள இந்த படத்த அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக் இயக்கியிருக்கிறார். படம் எப்படி இருக்கு? கவின் கிராஃபை உயர்த்தியதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, பிரைவேட் டிடெக்டிவான நாயகன் கவின் தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறப்பான முறையில் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்கிறார். எத்திகல் அதாவது தொழில் தர்மத்துடன் தொழிலை செய்து வருகிறார். அதே நேரம் குழந்தை கடத்தலில் இருந்து பல குழந்தைகளை மீட்டு அவர்களை வளர்க்கும் ஒரு நபராக வருகிறார் ஆண்ட்ரியா. வெளியே சமூக சேவகியாக இருந்தாலும் உள்ளுக்குள் அவர் முகம் வேறு. அரசியல்வாதி பவனின் தேர்தல் பணப்பட்டுவாடாவை கையாள்கிறார். கிட்டத்தட்ட 440 கோடியை பவன் பூமியிடம் கொடுத்து வைக்க, அந்த மொத்த பணத்தையும் எம்.ஆர்.ராதா மாஸ்க் போட்ட கும்பல் கொள்ளையடிக்கிறது. அந்த பணத்தை கொள்ளையடித்தவர்களை கண்டுபிடிக்கும் பொறுப்பை கவினிடம் ஒப்படைக்கிறார் ஆண்ட்ரியா. அந்த பணத்தை கவின் கண்டுபிடித்தாரா? ஆண்ட்ரியாவின் நிலை என்ன? கவின் தனிப்பட்ட வாழ்க்கை என்ன ஆனது? அந்த பணத்தை கொள்ளையடித்த கும்பல் யார்? என்பதே படத்தின் மீதிக்கதை.
கவின். படத்துக்கு படம் அவரது ஸ்க்ரீன் பிரசன்ஸ் கூடிக் கொண்டே போகிறது. திரையில் ஆளுமை செலுத்தும் அளவுக்கு அவரின் இமேஜ் இந்த படத்திலும் ஏறியிருக்கிறது. அலட்டல் இல்லாத போக்கிரி விஜய் ஸ்டைல் நடிப்பு, ரொமான்ஸ் காட்சிகளில் துறுதுறுப்பு, ஆக்ஷன் காட்சிகள் என பட்டைய கிளப்புகிறார்.
கவினுக்கு நேர் எதிரான, அதே சமயம் கவினுக்கு இணையாக படம் முழுக்க வியாபித்திருக்கிறார் ஆண்ட்ரியா. ரொம்பவே ஆளுமை செலுத்தும் அதே சமயம் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் ஆண்ட்ரியா மிரட்டுகிறார். அவரின் பேக் ஸ்டோரி கொஞ்சம் சொல்லப்படுகிறது. இன்னொரு பாதியையும் சொல்லியிருந்தால் அவர் கதாபாத்திரம் முழுமை அடைந்திருக்கும். நாயகியாக ருஹானி ஷர்மா கதாபாத்திரம் கொஞ்ச நேரமே வந்தாலும் இளசுகளுக்காக திரையில் வந்து ரசிக்க வைக்க பயன்பட்டிருக்கிறது. படத்துக்குள் கொஞ்சம் கலரை கூட்டியிருக்கிறது.
மாநகரம் படத்துக்குப் பிறகு சார்லி மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். கல்லூரி வினோத், ரமேஷ் திலக், அர்ச்சனா, அச்யுத் குமார், ஜார்ஜ் மரியான், பத்மன் என மற்ற நடிகர்களும் அவர்கள் வரும் காட்சிகள் எல்லாமே படத்துக்கு தேவையானதாகவே அமைந்திருக்கிறது. பேட்டரியாக வந்தவர் கூடுதலாக கவனம் ஈர்க்கிறார்.
ஜி.வி.பிரகாஷ் இசையில் ஆலங்கட்டி பாடல் ஆட்டம் போட வைக்கிறது. பகலினில் ஆட்டம் ரீமிக்ஸ் துள்ள வைக்கிறது. பின்னணி இசையிலும் முடிந்த வரை படத்தை மெருகேற்றி இருக்கிறார் ஜிவி பிரகாஷ். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு படத்தின் தன்மையை சிதைக்காமல் பலம் சேர்த்திருக்கிறது. ராமர் எடிட்டிங்கும் படத்துக்கு பலம்.
அறிமுக இயக்குநர் விகர்ணன் அசோக். முதல் படத்திலேயே நல்ல ஒரு கான்செப்ட், கதைக்களத்தை எடுத்துக் கொண்டு அதில் கதாபாத்திரங்களின் வடிவமைப்பு என அவரின் முத்திரையை பதித்துள்ளார். மணி ஹெய்ஸ்ட் போல மாஸ்க் போட்டு கொள்ளையடிக்கும் ஐடியா எல்லாமே சூப்பர். இது ஹெய்ஸ்ட் படம் இல்லை என்பதால் அந்த காட்சியை விலாவரியாக காட்டாமல் கொஞ்சம் காமெடியாக ட்ரீட் செய்திருக்கிறார். இண்டர்வல் பிளாக் மற்றும் கிளைமாக்ஸ் ரெண்டுமே படத்தின் பெரிய ஹைலைட். மிடில் கிளாஸ் பற்றி சொல்லும் தத்துவங்களும், இரண்டாம் பாதியில் வரும் சில விஷயங்களும் படத்தின் ஆன்மா.
திரைக்கதை இலக்கணத்தை உடைக்க அவர் செய்திருக்கும் சில விஷயங்கள் ஷாக் தந்தாலும் சில நேரங்களில் ஓகே என்ற உணர்வோடு நின்று விடுகிறது. கொள்ளை அடித்தவர்கள் அணிந்த மாஸ்க்கை மட்டும் குறிப்பிடாமல் அதை ஒரு metaphor-ஆக வைத்து கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் கவின் படங்களில் இந்த படமும் ஒரு வித்தியாசமான படைப்பு, அதை கமெர்சியலாக சொன்ன விதத்தில் வெற்றியும் பெற்றிருக்கிறது. கவினுக்கு ஒரு வெற்றிப்படம் இந்த மாஸ்க்.

