நல்ல நல்ல கதைகளையே தேடித் தேடி நடிக்கும் விதார்த் நடிப்பில் உருவாகியுள்ள சமீபத்திய படம் தான் “மருதம்”. Aruvar private limited சார்பில் C வெங்கடேசன் தயாரித்துள்ல இந்த படத்தை V.கஜேந்திரன் எழுதி இயக்கியுள்ளார். ஒரு எளிய விவசாயியின் வாழ்வியலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம் விவசாய நிலத்தின் அவசியத்தை அழுத்தமாக பேசும் ஒரு சமூக அக்கறை படைப்பாக உருவாகியுள்ளது. படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, தன் சொந்த நிலத்தில் இயற்கை முறைப்படி விவசாயம் செய்து, கிடைப்பதை வைத்து தன் மனைவி, ஒரே மகனுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார் விதார்த். தன் மகனை தனியார் பள்ளியில் சேர்க்க நினைக்கும் விதார்த் அதற்காக தன் நிலத்தை அடமானம் வைத்து 3 லட்ச ரூபாயை அருள் தாஸிடம் இருந்து கடன் வாங்குகிறார். சில நாட்களிலேயே அந்த நிலத்தை யாரோ ஒரு நபர் கம்பி வேலி போட, அதை பார்த்த விதார்த் அதிர்ச்சி அடைகிறார். வங்கியில் கடன் வாங்கி திருப்பி செலுத்தாததால் அந்த நிலத்தை சம்பந்தப்பட்ட வங்கி ஏலம் விட்டது தெரிய வருகிறது. ஆனால் கடனே வாங்காத விதார்த் தரப்பு அதை எப்படி நிரூபிக்கிறது? உண்மையில் அந்த நில விஷயத்தில் நடந்தது என்ன? விதார்த் தன் நிலத்தை மீட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.
விதார்த். மைனா தொடங்கி அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதையுமே, நல்ல கதையம்சம் உள்ள படங்கள் மட்டுமே. அந்த வகையில் இந்த மருதம் படமும் மிகச் சிறந்த ஒரு படைப்பாகவே உருவாகியிருக்கிறது. ஒரு குழந்தைக்கு அப்பாவாக, ஒரு விவசாயியாக மிக யதார்த்தமாக நடித்திருக்கிறார். சேற்றில் டவுசருடன் ஏர் ஓட்டும் காட்சிகளில் இருந்து அந்த மூட்டைகளை கட்டிக் கொண்டு வண்டியில் போவது வரை அந்த விவசாயியாகவே வாழ்ந்திருக்கிறார்.
விதார்த் மனைவியாக ரக்ஷனா. தன் கேரியரின் ஆரம்ப நிலையிலேயே ஒரு குழந்தைக்கு அம்மாவாக ஒரு கிராமத்து பெண்ணாக நடித்ததிலேயே அவரின் துணிச்சலையும், நடிப்பின் மீதான அர்ப்பணிப்பையும் தெரிந்து கொள்ளலாம். மல்லி என்ற அந்த கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார். இந்த நடிப்பின் மூலமே இன்னும் பல படங்கள் அவருக்கு கிடைக்கும். விதார்த்தின் நண்பராக மாறன், ஆரம்பத்தில கல கலவென பயணிக்கும் அவர் இறுதி காட்சிகளில் கலங்க வைக்கிறார். வழக்கறிஞராக தினந்தோறும் நாகராஜ். படத்துக்கு வலு சேர்க்கும் விதத்தில் நடித்திருக்கிறார். படித்த ஒரு வில்லனாக சரவண சுப்பையா மிரட்டுகிறார். அருள் தாஸ் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் ஸ்கோர் செய்திருக்கிறார். இத்தனை நடிகர்களுக்கு மத்தியில் அந்த சிறுவனும் நல்ல ஒரு நடிப்பு.
NR ரகுநந்தன் இசையில் பாடல்கள் இனிமையாக இருக்கின்றன. பின்னணி இசையிலும் படத்தை மெருகேற்றியிருக்கிறார். அருள் சோமசுந்தம் ஒளிப்பதிவில் வட தமிழ் நாட்டில் இப்படிப்பட்ட இடங்கள் எல்லாம் இருக்கிறதா? என ஆச்சர்யமாக பார்க்க வைக்கிறார். சந்துருவின் படத்தொகுப்பு கச்சிதம். 1:43 மணி நேரத்தில் சொல்ல வந்த கதையை மிக சரி வர சொல்லியிருக்கிறார்.
இன்றைய சமூகமே இன்னொருவனை ஏமாற்றினால் தான் நாம் முன்னுக்கு வர முடியும் என்ற எண்ணத்தில் இயங்கி வருகிறது. இப்படிப்பட்ட சமூகத்தில் விவசாயிகள் மட்டும் என்ன விதிவிலக்கா? அந்த விவசாயைகளும் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள்? அப்படி பாதிக்கப்படும் ஒரு விவசாயியின் வாழ்க்கையை மிக இயல்பாக, அழகாக, அழுத்தமாக சொல்லியிருக்கிறார் இயக்குனர் கஜேந்திரன். வாங்காத கடனுக்கு தங்கள் சொத்தையே இழந்த பல விவசாயிகளின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவங்களை கமெர்சியல் அம்ங்களை கலந்து மிக அழகாக, எளிமையாக பார்க்கும் விதத்தில் தந்திருக்கிறார். சட்ட நுணுக்கங்களையும் போகிற போக்கில் எளிமையாக புரியும்படி சொல்லியிருக்கிறார். தனியார் பள்ளிகள் மீதான மோகத்தையும் மிக ஆழமாக ஒரு மெசேஜூடன் நம் மனதில் பதிய வைத்திருக்கிறார் இயக்குனர். மொத்தத்தில் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய நல்ல ஒரு தரமான படம் இந்த மருதம்.

