ஹரி கே. சுதன் என்ற அறிமுக இயக்குனர் இயக்கத்தில் சாய்ஸ்ரீ பிரபாகரன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் “மரியா”. பாவெல் நவகீதன், சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, சுதா புஷ்பா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். கிருஸ்தவ கன்னியாஸ்திரியின் வாழ்க்கையை சுற்றி பின்னப்பட்டுள்ள இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, கிருஸ்தவ கன்னியாஸ்திரியாக இருக்கும் சாய்ஸ்ரீ வருடத்தில் ஐந்து நாட்கள் மட்டும் வெளியில் சென்று விட்டு வரலாம் என்ற நிலையில் மடத்தை விட்டு வெளியே வந்து தன் உறவுக்கார பெண் அறையில் தங்குகிறார். அவருடன் அவரது தோழியும், லிவிங் டுகெதரில் இருக்கும் இரண்டு ஆண் நண்பர்களும் இருக்கிறார்கள். வந்த இடத்தில் அவரது மனநிலையில் அவ்வளவு நாட்களாக அடக்கி வைத்திருந்த உணர்வுகள் பீறிட்டு எழுகின்றன. அது இயற்கையானதா? பாவமானதா? என்ற குழப்பத்தில் இருக்கும் சாய்ஸ்ரீ கொஞ்சம் கொஞ்சமாக தன் துறவற வாழ்வில் இருந்து வெளியேறி சாதாரண பெண்ணாக வாழ ஆசைப்படுகிறார். அப்படி அவர் வெளியில் வர நினைக்கும்போது சமூகம் எப்படி பார்க்கிறது? அவரது மனதில் எழும் குழப்பங்களை மீறி அவர் கன்னியாஸ்திரி வாழ்வில் இருந்து வெளியே வந்தாரா? என்பதை சொல்லும் படமாக உருவாகியுள்ளது இந்த மரியா.
கதையின் மையக்கதாபாத்திரம் மரியாவாக நடித்திருக்கும் சாய்ஸ்ரீ பிரபாகரன் நடிப்பு படத்தை நமக்கு மிக மிக நெருக்கமாக்குகிறது. நுண்ணிய உணர்வுகளை வெளிப்படுத்திய விதம் அவர் ஒரு உண்மையான கன்னியாஸ்திரி தானே என நம்மை நம்ப வைக்கிறது. கண்ணாலேயே பாதி படத்தை நமக்கு கடத்துகிறார். பாவெல் நவகீதன் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து பலரும் பேசத் தயங்குகிற வசனங்களை மிக தைரியமாக பேசியிருக்கிறார். சித்து குமரேசன், விக்னேஷ் ரவி, சுதா புஷ்பா என மற்ற நடிகர்களும் படத்தை தாங்குகிறார்கள். ஒவ்வொரு கதாபாத்திரமும் கதைக்கு இன்றியமையாததாக மாறுகிறது.
மணி ஷங்கர் ஒளிப்பதிவு ஒரு உலக சினிமா பார்க்கும் தரத்தை நமக்கு அளித்திருக்கிறது. லைட்டிங், கேமரா கோணங்கள், கலர் பேலட், கலர் கிரேடிங் என எல்லாமே படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறது. அரவிந்த் கோபாலகிருஷ்ணன் பின்னனி இசை படத்துக்கு சிறப்பான ஒரு பங்களிப்பை செய்திருக்கிறது.
உலக சினிமாக்களில் நாம் பார்க்கும் படங்களைப் போல தமிழ் சினிமாவில் உருவாகியிருக்கும் ஒரு உலக சினிமா தான் இந்த மரியா. கிருஸ்தவ மதத்தை பற்றிய பல்வேறு கேள்விகளை, மதத்தை பற்றிய வேறு வேறு பார்வைகளை படத்தினூடே சொல்லியிருக்கிறார் இயக்குனர். ஹாலிவுட் படங்களில் மட்டுமே இதுவரை பார்த்து வந்த கதைக்களத்தை தமிழில் ரொம்பவே தைரியமாக அணுகியிருக்கிறார் ஹரி கே.சுதன். கொஞ்சம் பிசகினாலும் பிரச்சினைக்குள்ளாகும் ஒரு சென்சிட்டிவான படத்தை கொஞ்சம் முதிர்ச்சியுடனே அணுகியிருக்கிறார்.
முதல் பாதி முழுக்க கன்னியாஸ்திரியின் எண்ண ஓட்டங்களை, அவரின் ஆசாபாசங்களை, உணர்வுகளை மிக நெருக்கமாக பதிவு செய்த இயக்குனர் இரண்டாம் பாதியில் Christ, Anti christ என்ற ஒரு டாபிக்குக்குள் சென்று விடுகிறார். அதில் பல விஷயங்கள் கிருஸ்தவர்களுக்கு புரியலாம், மற்றவர்கள் இன்னும் ஓரிரு முறை பார்த்தால் தான், அல்லது அதை பற்றி கொஞ்சம் படித்திருந்தால் தான் புரிந்து கொள்ள முடியும். மொத்தத்தில் தமிழில் ஒரு தனித்துவமான சினிமாவை கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஹரி கே.சுதன்.

