சாணி காயிதம், பகாசூரன் படங்களுக்கு பிறகு செல்வராகவன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் “மனிதன் தெய்வமாகலாம்”. குஷி ரவி, மைம் கோபி. கௌசல்யா நடிக்க, டெனிஸ் மஞ்சுநாத் இயக்கியிருக்கும் இந்த படம் எப்படி இருக்கு? விமர்சனத்தில் பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, சேலம் மாவட்டத்தில் மலையடிவார கிராமம் ஒன்றில் நுங்கு, பதநீர் விற்றுப் எளிய வாழ்க்கை வாழ்ந்து வரும் செல்வராகவன் பெரிதாக படிக்காதவர், திருமணம் ஆகாதவர். தரகர் மூலம் ஒரு வரன் அமைய, செல்வராகவனை பார்க்கும் நாயகிக்கு அவரது குணம் பிடித்து திருமணத்துக்கு சம்மதம் சொல்ல திருமணமும் நடக்க, மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். குடும்பம் ஆகி விட்டதால் அடுத்த கட்டத்துக்கு முன்னேற காசு புரட்டி நெடுஞ்சாலையில் ஒரு உணவகம் ஒன்றை ஆரம்பிக்கின்றனர். அரசியல்வாதியில் மச்சான் மைம் கோபிக்கும் செல்வராகவனுக்கும் இடையில் ஒரு பிரச்சினை ஏற்படுகிறது. மைம் கோபி அவரது மில்லில் வேலை செய்யும் பெண்களுக்கு வட்டிக்கு கடன் தந்து, திருப்பி செலுத்த முடியாதவர்களை தன் ஆசைக்கு இணங்க வைப்பவர்.
மறுபுறம் ஊருக்கு சாலை வசதி இல்லாததால் அந்த ஊர் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள். சில மரணங்களும் நிகழ, சாலை வசதிக்காக ஊர் பெரியவர் நீண்ட காலமாக முயற்சி எடுக்கிறார். அதுவும் தோல்வியிலேயே முடிகிறது. இந்த சூழலில் தான் மைம் கோபியால் செல்வராகவன் சில இழப்புகளை சந்திக்க நேரிடுகிறது. என்ன இழந்தார்? அந்த ஊருக்கு சாலை வசதி கிடைத்ததா? வில்லன் உடனான பிரச்சினைகள் எந்த அளவுக்கு போனது? என்பதே மீதிக்கதை.
நாயகன் செல்வராகவன். ஜீனியஸ் இயக்குனர் என்ற பெயரை பெற்றவர், திரையில் ஒரு படிக்காத எளிய மனிதனாகவே ஒரு அப்பாவியாக நம் கண் முன் நிற்கிறார். நாயகியின் மீதான காதல், முக்கியமான தருணத்தில் ஆவேசம் என முடிந்த வரை நடிப்பை தந்திருக்கிறார். நாயகி குஷி ரவி. ஒரு படித்த பெண்ணாக, அதே சமயம் கணவன் மீது அதீத அன்பு வைத்திருக்கும் மனைவியாக நம்மை நெகிழ வைக்கிறார்.
கௌசல்யா நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படி ஒரு ரீ எண்ட்ரி. அன்றாட வேலைக்கு செல்லும் சராசரி கிராமத்து பெண்ணாக, கதையின் முக்கிய கதாபாத்திரமாக நல்ல நடிப்பை தந்திருக்கிறார். ஆனால் அவரது மேக்கப் முடிவு மட்டுமே உறுத்தல். மைம் கோபி வழக்கமான ஒரு வில்லனாக வந்து அவர் பங்கை கச்சிதமாக செய்து விட்டுப் போகிறார். ஒய்ஜி மகேந்திரன் நல்ல அரசியல்வாதியாக வந்து ஸ்கோர் செய்கிறார். மற்ற நடிகர்களும் நல்ல பங்களிப்பு.
ஏ கே பிரியனின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையில் சில காட்சிகளில் மிரட்டி இருக்கிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் நல்ல இசை. ரவி வர்மா ஒளிப்பதிவு சேலம் மாவட்ட கிராமத்தை அதன் இயல்போடு அழகாக நேர்த்தியாக படம் பிடித்து தந்திருக்கிறது.
இயக்குனர் டெனிஸ் மஞ்சுநாத். ஒரு எளிமையான கதையை எடுத்துக் கொண்டு உணர்வுப்பூர்வமான படத்தை தர முயற்சி எடுத்திருக்கிறார். எளிய மக்களை அழகாக கண் முன் கொண்டு வந்திருக்கிறார். எளிய மனிதர்கள் வாழ்வில் முன்னேற உழைக்கும் அந்த காட்சிகள் உண்மையில் மனதுக்கு ஒரு நல்ல ஊணர்வை தருகிறது. யூகிக்கும்படியான திரைக்கதை கொஞ்சம் பலவீனம் தான் என்றாலும் கிளைமாக்ஸ் 30 நிமிடங்கள் படத்தின் தரத்தை உயர்த்துகிறது. கிளைமாக்ஸ் காட்சி எதிர்பாராத ஒன்று. நல்ல தாக்கத்தை ஏற்படுத்துகிறது. செல்வராகவன் கேரியரில் நல்ல ஒரு படமாகவே அமைந்திருக்கிறது இந்த மனிதன் தெய்வமாகலாம்.

