விஷ்ணுவின் பத்து அவதாரங்களை பற்றி இதிகாசங்களில் படித்திருக்கிறோம், மேடை நாடகங்களில், டிவி தொடர்களில் பார்த்திருக்கிறோம். அவற்றின் ஒரு சில பகுதிகளை சினிமாவாகவும் பார்த்திருக்கிறோம். தற்போது அனிமேஷன் துறையின் அதீத வளர்ச்சியில் அந்த இதிகாச கதைகளை அனிமேஷன் படமாக தயாரித்து வழங்குகிறது ஹோம்பாலே பிலிம்ஸ் மற்றும் க்ளீம் ப்ரொடக்சன்ஸ். 2025 முதல் 2037 வரை 7 திரைப்படங்களாக வெளியிட இருக்கிறது. அதில் முதல் படமாக “மஹாவதார் நரசிம்மா” திரைப்படம் வெளியாகியிருக்கிறது. இந்த திரைப்படத்தை அஷ்வின்குமார் இயக்கியுள்ளார். படம் எப்படி இருக்கு? எப்படிப்பட்ட அனுபவத்தை தந்திருக்கிறது? பார்க்கலாம்.
இந்த படத்தின் கதை, விஷ்ணுவின் மூன்றாவது அவதாரமான வராஹ அவதாரத்தில் இருந்து துவங்குகிறது. அசுர குலத்தை சார்ந்த சகோதரர்கள் ஹிரண்யாக்ஷா, ஹிரண்யகஷிபு உலகையே தங்கள் கொடூரமான செயல்களால் ஆட்டிப்படைக்கிறார்கள். ஒரு கட்டத்தில் தேவர்கள் பிரம்மாவிடம் முறையிடும் நேரத்தில் விஷ்ணு வராக அவதாரம் எடுத்து ஹிரண்யாக்ஷாவை அழிக்கிறார். அதனால் கோபம் கொள்ளும் ஹிரண்யகஷிபு கடும் தவம் புரிந்து பிரம்மாவிடம் தனக்கு உலகையே ஆளும் சக்தியும், தன்னை யாராலும் அழிக்க முடியாத வரத்தையும் கேட்டு வாங்குகிறான். அப்படி அமரத்துவ வரம் பெற்று உலகையே ஆளும் ஹிரண்யகஷிபுவுக்கு பிறக்கும் மகன் பிரகலாதன் தீவிர விஷ்ணு பக்தனாக வளர்கிறான். அதனால் கோபம் கொள்ளும் ஹிரண்யகஷிபு அவனை கொல்லச் சொல்கிறார். மரணத்தை எந்தவித தயக்கமும் ஏற்றுக் கொள்ளும் பிரகலாதனை ஒவ்வொரு முறையும் விஷ்ணு காக்கிறார். ஹிரண்யகஷிபுவே களத்தில் இறங்கும்போது விஷ்ணு தனது அரிய அவதாரமான நரசிம்ம அவதாரத்தை எடுக்கிறார். அவர் ஏன் நரசிம்ம அவதாரம் எடுத்தார்? சாகாவரம் பெற்ற ஹிரண்யகஷிபுவை எப்படி அழித்தார்? என்பதே மீதிக்கதை.
இந்த கதையை பொறுத்தவரை ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு விதத்தில் அங்கே கொஞ்சம், இங்கே கொஞ்சம் என கதையின் சாரம்சத்தை நிச்சயம் வாழ்நாளில் கேட்டிருப்போம். அதை அனிமேஷனில் அழகான, பிரம்மாண்டமான காட்சியமைப்புகளுடனும், அற்புதமான பின்னணி இசையுடனும் பார்ப்பது ஒரு தனி அனுபவம். பூவுலகம், இந்திரலோகம், அசுரர்களின் மாளிகை, அசுர வதம் செய்யும் இடம், மலை, கடல் என அத்தனையையும் அனிமேஷனில் பார்க்கும்போது அவ்வளவு அழகு. அத்துடன் முக்கிய கதாபாத்திரங்களான அசுரர்கள், பிரகலாதன், பகவான் விஷ்ணு, இந்திரன், பிரம்மன் ஆகியோரின் தோற்றம், நடை உடை எல்லாமே அனிமேஷனில் நன்றாக உருவாக்கியிருக்கிறார்கள். குறிப்பாக பிரகலாதனின் தூய பக்தி நம்மையும் அந்த கதாபாத்திரத்தின் மேல் ஈடுபாடு கொள்ள வைக்கிறது. இதற்காக 5 ஆண்டுகள் இடைவிடாமல் உழைத்திருக்கிறோம் என்கிறார்கள் குழுவினர். 2டியில் பார்க்கும்போதே அவ்வளவு ரம்மியமாக உள்ளது. 3டியிலும் நிச்சயம் மிகச்சிறந்த அனுபவம் கிடைக்கும் என்பது உறுதி!
சாம். சி.எஸ். இசையில் ஆங்காங்கே வரும் பாடல்கள் கேட்க அவ்வளவு இனிமை. பின்னணி இசையிலும் மிகச்சிறந்த உழைப்பை தந்துள்ளார். குறிப்பாக நரசிம்ம அவதாரம் எடுத்து அசுரனை வதம் செய்யும் காட்சிகளில் எல்லாம் ஒரு பரவச உணர்வை ஏற்படுத்துகிறது இசை. மொத்தத்தில் குழந்தைகளை அழைத்துச் சென்று திரையரங்கில் 3டியில் பார்க்க வேண்டிய ஒரு நல்ல அனுபவம்.

