மகா சேனா – விமர்சனம்!

மருதம் புரொடக்ஷன்ஸ் பிரமாண்டமான தயாரிப்பில் விமல், ஸ்ருஷ்டி டாங்கே நடிக்க, தினேஷ் கலைசெல்வன் எழுதி இயக்கியிருக்கும் காடு சார்ந்த ஆக்ஷன் த்ரில்லர் படமாக உருவாகியுள்ளது “மகா சேனா”. யானை கதையின் ஒரு மிக முக்கிய அங்கமாக அமைந்திருக்கிறது. இயற்கை, ஆன்மீகம், காடுகளின் பாரம்பரியம் என் அனைத்தையும் பேசும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, 3000 ஆண்டுகளாக தொடரும் ஒரு நீண்ட மோதலைப் பற்றிய கதை. குரங்கணி மற்றும் மலை அடிவாரப் பகுதி என இரண்டு இனக்குழுக்கள் வாழ்ந்து வருகிறார்கள். குரங்கணியில் இருக்கும் யாளீஸ்வரர் சிலையை எப்படியாவது எடுத்துச் செல்ல வேண்டும் என நினைக்கிறார்கள் அடிவாரப் பகுதி மக்கள். குரங்கணியின் தலைவராக மாறுகிறார் விமல். அடிவாரப் பகுதி மக்களின் தலைவி மஹிமா குப்தா. இவர்களுக்கிடையில் நடக்கும் மோதலுக்கு இடையில் போலீஸ் அதிகாரி ஜான் விஜயை பயன்படுத்தி அந்த சிலையை அபகரிக்க முயல்கிறார் கபீர் துஹான் சிங். அவர்களின் நம்பிக்கையான யாளிஸ்வரர் சிலையை அவர்கள் அபகரித்தார்களா? விமல் மற்றும் குரங்கணி மக்கள் அதை தடுத்தார்களா? அந்த யானை கதையின் முக்கிய அங்கமாக எப்படி மாறியது? என்பதே மீதிக்கதை.

விமல். குரங்கணி பகுதியின் தலைவராக ஒரு பெண்ணுக்கு அப்பாவாக நடித்திருக்கிறார். முதல் பாதியில் ஒரு சில காட்சிகளே வருகிறார். கெஸ்ட் ரோலில் வருகிறாரோ என நினைத்துக் கொண்டிருக்கும்போதே இரண்டாம் பாதி முழுக்க வியாபித்திருக்கிறார். அவரின் மனைவியாக வரும் ஸ்ருஷ்டி டாங்கே அந்த பொம்மி கதாபாத்திரத்தில் பொருந்திப் போகிறார். அந்த சேலை அணியும் ஸ்டைலிலேயே தனித்துவமாக தெரிகிறார். எதிரிகளை எதிர்த்து நிற்கும்போது அந்த நடிப்பில் மிரட்டுகிறார்.

அடிவாரப் பகுதியின் தலைவியாக மஹிமா குப்தா. மிரட்டலான கதாபாத்திரத்தில் பார்வையாலே மிரட்டுகிறார். அந்த மலைவாழ் பெண் தோற்றத்திலும் கச்சிதமாகப் பொருந்துகிறார். யோகி பாபு ஒரு சில காட்சிகளில் மட்டுமே ஒரு டூரிஸ்ட் கைடாக வருகிறார். ஒரு சில காமெடி கவுண்டர்கள் ரசிக்க வைக்கிறது. வழக்கமான போலீஸ் கதாபாத்திரம் தான் என்றாலும் வில்லத் தனத்தில் ஜான் விஜய் ஸ்கோர் செய்கிறார். ஒரு சில காட்சிகள் தான் என்றாலும் கதையின் மெயின் வில்லனாக கபீர் துஹான் சிங். அவரது தோற்றம் மற்றும் பாடி லாங்குவேஜில் அதிரடி காட்டுகிறார். அல்ஃப்ரெட் ஜோஸ், சிவக்ரிஷ்ணா, இலக்கியா, விஜய் சேயோன் என மற்ற நடிகர்களும் அவர்கள் கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள். சேனா என்ற கதாபாத்திரத்தில் வரும் யானை சம்பந்தப்பட்ட காட்சிகளும் குழந்தைகள் உட்பட குடும்ப ரசிகர்களிய ஈர்க்கும் என்பதில் ஐயமில்லை.

பிரவீண் குமார், உதய் பிரகாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். கிளைமாக்ஸ் பாடல் பரவசப்படுத்துகிறது. உதய் பிரகாஷ் பின்னணி இசையும் நன்றாகவே இருக்கிறது. டி.ஆர். மனஸ் பாபு ஒளிப்பதிவில் காடு மலைகளில் புகுந்து விளையாடியிருக்கிறது. இரவுக் காட்சிகளிலும், கோவில் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் நன்றாகவே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

பேராசை தெய்வீக ஒற்றுமையை எவ்வாறு சீர்குலைக்கிறது, ஆன்மீகம் அதை எவ்வாறு சீரமைக்கிறது என்பதை சொல்ல முயற்சி செய்திருக்கும் இயக்குனர் தினேஷ் கலைச்செல்வன் அதை ஓரளவு நன்றாகவே சொல்லியிருக்கிறார். அதை சொல்ல எடுத்துக் கொண்ட கதைக்களமும் பொருத்தம். கிளைமாக்ஸ் திருவிழா காட்சியும் அதில் வரும் பாடல் காட்சியும் பிரமாண்டம். யானை சம்பந்தப்பட்ட காட்சிகளும், சில இடங்களில் CGI தொழில்நுட்பத்துடன் அந்த யானையை காட்டியதும் அருமை. இரண்டு குழுக்கள் இடையே நடக்கும் மோதலை காட்டிய விதமும், யாளீஸ்வரர் சிலையை சுற்றி நடக்கும் காட்சிகளும் திரையில் நன்றாகவே காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் பார்த்து ரசிக்கக் கூடிய ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *