லவ் டுடே, ட்ராகன், ட்யூட் என ஹாட்ரிக் வெற்றியை தந்த பிரதீப் ரங்கநாதன், இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடித்துள்ள படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK). 2040ல் நடக்கும் ஒரு ஃபியூச்சரிஸ்டிக் சயின்ஸ் பிக்ஷன் படமான இந்த படம் பிரதீப்புக்கு அடுத்த வெற்றியை தந்ததா? பிரதீப் கிராஃபை அடுத்த கட்டத்துக்கு உயர்த்தியதா? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, 2040-ல் அதி நவீன சென்னையில் மக்கள் அனைவருமே டெக்னாலஜிக்கு அடிமையாகி இருக்கின்றனர். நவீன மருத்துவமனைகள், பறக்கும் ட்ரோன்கள், அதி நவீன மொபைல்கள் என தொழில்நுட்பத்தில் உச்சத்தில் இருக்கிறது. காதலுக்கு என லவ் இன்ஸூரன்ஸ் கம்பெனி ஆரம்பித்து நடத்தி வருகிறார் எஸ்.ஜே.சூர்யா. அதே நேரம் மொபைல் அடிக்ஷனில் இருந்து தனி ஒரு உலகமாக இயங்கி வருகிறது Organic world. அங்கு சீமான் தொழில்நுட்ப சாதனங்கள் எதுவுமே இருக்கக் கூடாது, மக்கள் தற்சார்பு மற்றும் இயற்கையோடு இயைந்து வாழ வேண்டும் என முயற்சி எடுக்கிறார். அவரது மகன் பிரதீப் ரங்கநாதன். மொபைல் இல்லா வாழ்க்கை வாந்து வரும் அவருக்கு மொபைலால் வளர்க்கப்பட்ட பெண்ணான நாயகி கிரித்தி ஷெட்டியை பார்த்ததும் காதல். நாயகிக்கும் பிரதீப் மீது காதல் உருவாகும் வேளையில் LIK கம்பெனியின் லவ் ஸ்கோர் என்ற அப்டேட்டால் காதல் பிரியும் சூழல் உருவாகிறது. இதனால் LIK மீது கோபம் கொள்ளும் பிரதீப், அந்த ஆப் பொய் என்பதை நிரூபிக்கிறேன் என சவால் விடுகிறார். அவரது காதல் கைகூடியதா? LIK ஆப் என்ன ஆனது? என்பதை கலர்ஃபுல்லாக சொல்லியிருக்கும் படமே இந்த LIK.
நாயகன் பிரதீப் ரங்கநாதன். முந்தைய படங்களில் இருந்து இன்னும் மெறுகேறி ஒரு நட்சத்திரமாகவே மாறியிருக்கிறார். முழுக்க முழுக்க காதல் படமாக உருவாகியுள்ள இந்த படத்தில் இன்னும் ட்ரெண்டியாக, 2040 இளைஞனாக துருதுருவென கலகலப்பானவராக நம்மை ரசிக்க வைக்கிறார். ஒரே ஒரு ஆக்ஷன் காட்சி, அதிலும் அசால்ட்டாக ஸ்கோர் செய்கிறார். நாயகி கிரித்தி ஷெட்டி. கிட்டத்தட்ட 2.0 படத்தில் வரும் ஏமி ஜாக்ஸன் ரோபோ போன்ற ஒரு உடல் மொழியுடன் கிட்டத்தட்ட ரோபோ என்று சொல்லும் அளவுக்கு மொபைல் தான் உலகம் என வாழும் கதாபாத்திரமாக வாழ்ந்திருக்கிறார். மனித உணர்வுகளை போகப் போக புரிந்து கொள்ளும் அவர் நடிப்பும் நன்று. இன்னொரு நாயகியாக கௌரி கிஷன். பெரிய அளவில் நடிக்க வாய்ப்பு இல்லையென்றாலும் இதுவரை நாம் பார்க்காத ஒரு பரிமாணத்தில் ஒரு மாடர்ன் பெண்ணாக ரசிக்க வைக்கிறார்.
LIKவின் நிறுவனராக எஸ்.ஜே.சூர்யா. இன்றைய எலோன் மஸ்க்கை நினைவுபடுத்தும் ஒரு கதாபாத்திரம். டெக்னாலஜியை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்லும், ஒரு கடவுளாக தன்னை நினைத்துக் கொள்ளும் கதாபாத்திரமாக, வில்லத்தனத்திலும் ரசிக்க வைக்கிறார். சீமான் அவரது நிஜ வாழ்க்கையில் அவர் பேசும் விஷயங்களை திரையில் பேஸ வைத்திருக்கிறார்கள். ஆனந்த்ராஜ், சுனில், விடிவி கணேஷ், ஷாரா, ஒரு கெஸ்ட் ரோலில் அம்ரிதா ஐயர் என பிரபலங்கள் படம் முழுக்க நிறைந்து இருக்கிறார்கள்.
ரவிவர்மனின் ஒளிப்பதிவு படத்தின் ரிஸ்னஸை கூட்டியிருக்கிறது. ரொம்பவே கலர்ஃபுல்லாக 2040-ஐ பார்த்த உணர்வை தந்திருக்கிறார். கலை இயக்குனர் முத்துராஜ் உழைப்பும், ஆங்காங்கே அவரின் கைவண்ணமும் படத்தின் தன்மையை இன்னும் அழகாக காட்டியிருக்கிறது.
ராக்ஸ்டார் அனிருத் இசையில் பாடல்கள் எல்லாமே இளமை துள்ளல். எனக்கென யாரும் இல்லையே இந்த படத்துக்கு தான் வாய்த்திருக்கிறது என்றால் யாரால் மாற்ற முடியும். அதை காட்சிப்படுத்திய விதமும் அருமை. தீமா தீமா பாடலும், பட்டும்மா பாடலும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் காதல் கதைக்கு மிகப்பெரிய அளவில் உறுதுணையாக இருந்திருக்கிறது.
இயக்குனர் விக்னேஷ் சிவன். சாதாரண கதைகளை கூட கொஞ்சம் புதுமையான களங்களில் சொல்லும் ஒரு இயக்குனர். அப்படி இந்த காதல் படத்தையும் ஃபியூச்சரில் நடப்பது போல கதையை அமைத்து அன்று மக்கள் எப்படி இருப்பார்கள்? அவர்கள் மனநிலை மாற்றம் எப்படி இருக்கும்? தொழில்நுட்பம் எப்படி வளர்ந்திருக்கும் என்பதை வைத்து அதன் பின்னணியில் ஒரு காதல் கதையை சொல்லியிருக்கிறார். ஃபியூச்சரில் கதை நடந்தாலும் அந்த மொபைல் ஆதிக்கம் இன்றைக்கே அதற்கு இணையாக இருக்கிறது. அதை இன்றைய நிலையை வைத்து சொன்னதாக கூட எடுத்துக் கொள்ளலாம். இயற்கையோடு இயைந்து வாழ்வது தான் வாழ்க்கை என்ற நல்ல கருத்தையும் வலியுறுத்தி இருக்கிறார். சிம்பிள் காதல் கதையை, ஃபியூச்சர் செட்டப்பில் தந்து ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கியிருக்கிறார் விக்னேஷ் சிவன். இளைஞர்கள் நிச்சயம் கொண்டாடுவார்கள். குடும்பத்துடன் பார்க்கும் வகையிலான ஒரு படமாகவும் அமைந்திருக்கிறது. பிரதீப் கேரியரில் இன்னொரு வெற்றிப்படம் இந்த LIK.

