கொம்பு சீவி – விமர்சனம்!

சகாப்தம், படைத்தலைவன் படங்களுக்கு பிறகு சண்முக பாண்டியன் விஜயகாந்த் நாயகனாக நடிக்க, பொன்ராம் இயக்கியிருக்கும் திரைப்படம் “கொம்பு சீவி”. கிராமிய பின்னணியிலான ஆக்ஷன், காமெடி எண்டர்டெயினராக தயாராகி இருக்கும் இப்படத்தில் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் கேப்டன் மகனுக்கு வெற்றிப்படமாக அமைந்திருக்கிறதா? பார்ப்போம்.

படத்தின் கதைப்படி, அணை கட்ட தங்கள் இருப்பிடங்களை, விளை நிலங்களை விட்டுக் கொடுத்த கிராம மக்கள், அணையில் எப்போதெல்லாம் நீர் மட்டம் குறைகிறதோ அப்போதெல்லாம் அங்கு விவசாயம் செய்கிறார்கள். நீர் மட்டம் ஏறும்போது வேலை இன்றி செய்யக் கூடாததை எல்லாம் செய்கிறார்கள். அந்த ஊரில் பெரிய மனிதராக இருக்கிறார் சரத்குமார். அதே ஊரில் ஆதரவற்ற சிறுவனாக இருக்கும் சண்முக பாண்டியனுக்கு சிறு வயதிலேயே ஆதரவுக்கு கரம் நீட்டுகிறார். ஒரு கட்டத்தில் சரத்குமார் உடன் சேர்ந்து போதைப் பொருள் கடத்தலில் ஈடுபடுகிறார். கஞ்சா கடத்தலை நூதனமாக செய்கிறார். அந்த ஊருக்கு வரும் போலீஸ் அதிகாரியான நாயகி ரொம்பவே ஸ்ட்ரிக்டான ஆஃபீஸர். அவர் மீது சண்முக பாண்டியன் காதல் வயப்படுகிறார். போதை பொருள் கடத்தும் நாயகன், போலீஸ் அதிகாரி நாயகி, நாயகனுக்கு எல்லாமுமாக இருக்கும் சரத்குமார். இவர்கள் வாழ்க்கை எப்படி எல்லாம் மாறுகிறது? இந்த கடத்தல் தொழிலை ஏன் செய்கிறார்கள்? என்பதே மீதிக்கதை.

நாயகன் சண்முக பாண்டியன். நல்ல வாட்ட சாட்டமான நாயகனாக கம்பீரமாக கிராமத்து மனிதனாக வலம் வருகிறார். காதல் காட்சிகளில் செய்யும் குறும்பு ரசிக்க வைக்கிறது. ஆக்ஷன் காட்சிகள் நன்றாகவே வருகிறது அவருக்கு. ஆனால் கடந்த இரண்டு படங்களிலும் நீள முடி வைத்து ஒரே கெட்டப்பில் வருவதை தவிர்த்து வேறு வேறு களங்களில் நடிக்க முயற்சித்தால் அவரது வேறு பரிமாணங்களை பார்க்கலாம். படத்தில் இன்னொரு நாயகனாக கைகோர்த்து வருகிறார் சரத்குமார். அவரது ஆளுமையும், கம்பீரமும் சாதாரண காட்சிகளை கூட இன்னும் பெரிதாக்குகிறது. காமெடி கலந்த நடிப்பும் வெகுவாக ரசிக்க வைக்கிறது.

நாயகியாக தாரணிகா. முதல் படத்திலேயே போலீஸ் அதிகாரி வேடம். அந்த போலீஸ் உடையில் கம்பீரமான போலீஸ் என சொல்வதை விட அழகான போலீஸாக ரசிக்க வைக்கிறார். இவர்களுடன் காளி வெங்கட், முனீஸ்காந்த், ஜார்ஜ் மரியான், சுஜித் சங்கர், கல்கி ராஜா ஆகியோரும் அவர்களுக்கு வழங்கப்பட்ட கதாபாத்திரங்களை செவ்வனே செய்திருக்கிறார்கள்.

பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு படத்தின் பீரியட் தன்மையை அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. கமெர்சியல் படத்துக்கேற்ற ஒளிப்பதிவாகவும் அமைந்திருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையில் மெலடி பாடலும், குத்துப்பாடலும் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையும் முடிந்தவரை படத்தை தூக்கி நிறுத்துகிறது.

இயக்குனர் பொன்ராம் கடைசியாக எடுத்த எம்ஜிஆர் மகன், டிஎஸ்பி போன்ற படங்கள் முந்தைய சிவகார்த்திகேயன் படங்களை போல வெற்றியை ருசிக்கவில்லை. மாறாக சுமாரான படங்களாகவே அமைந்திருந்தது. அந்த வகையில் முந்தைய படங்களை போல அல்லாமல் கொஞ்சம் ரசிக்கும் வகையிலேயே தந்திருக்கிறார் பொன்ராம். அதே சமயம் ரஜினி முருகன், வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற படங்கள் போல முழு நீள பொழுதுபோக்கு படத்தை தர தவற விட்டு விட்டார். காமெடி, ஆகஷன் என ஒரு கமெர்சியல் கலவையை தந்திருக்கிறார். சண்முக பாண்டியன் கமெர்சியலாக நடிக்க நல்ல ஒரு களத்தை தயார் செய்து தந்திருக்கிறது இந்த கொம்பு சீவி. குடும்பத்துடன் ஒரு முறை பார்க்கலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *