கம்பி கட்ன கதை – விமர்சனம்!

நடிகர் நட்டி நடிப்பில் ராஜநாதன் பெரியசாமி இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கம்பி கட்ன கதை’. சதுரங்கவேட்டை பட பாணியில் நட்டி நடித்திருக்கும் இந்த படத்தில் முகேஷ் ரவி, சிங்கம் புலி, ஸ்ரீரஞ்சனி, ஷாலினி, ஜாவா சுந்தரேசன், முருகானந்தம், கராத்தே கார்த்தி, முத்துராமன் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் இந்த படம் எப்படி இருக்கு? பார்க்கலாம்.

படத்தின் கதைப்படி, சதுரங்க வேட்டை படத்தின் காந்தி பாபு கதாபாத்திரத்தின் நீட்சியாக வருகிறது நட்டி நடித்த அறிவு கதாபாத்திரம். பேசிப் பேசியே யாரையும் மயக்கி, மோசடி செய்யும் பேர்வழியாக இருக்கிறார். ஒரு வைரத்தை தேடித்தரச் சொல்லி ஒரு வேலையை நட்டிக்கு தருகிறார் கராத்தே கார்த்தி. ஆனால் அதை தானே அபகரிக்க நினைக்கும் நட்டி, அதை கண்டுபிடித்து ஓரிடத்தில் புதைத்து வைக்கிறார். ஜெயிலில் இருந்து வெளிவரும் நட்டி அதை தேடிப் போக பெரும் அதிர்ச்சி. அந்த இடத்தில் ஒரு கோவில் இருக்கிறது. அதற்காகவே சாமியாராக அவதாரம் எடுத்து, அந்த இடத்தை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வரும் நட்டி, அந்த வைரத்தை கண்டுபிடித்தாரா? ஆசிரமம் நடத்தி அதன் மூலம் என்ன ஆதாயங்களை பெற்றார்? என்பதே மீதிக்கதை.

நட்டி. வழக்கம் போல தன் அசால்ட்டான நடிப்பால் அசத்துகிறார். மோசடி ஆசாமியாக தன் பேச்சாலேயே எவரையும் வீழ்த்தும் கதாபாத்திரத்தில் அப்படியே பொருந்திப் போகிறார். வசன உச்சரிப்பில் அடித்து நொறுக்குகிறார். அவருடன் வரும் சிங்கம் புலி காமெடி களை கட்டுகிறது. நட்டி, சிங்கம் புலி காம்போவில் எல்லா காமெடியும் தியேட்டரில் தெறிக்க விடுகிறது. குறிப்பாக ஆசிரமத்தில் நடக்கும் காட்சிகள் எல்லாம் வெடிச் சிரிப்பை வர வைக்கிறது.

நட்டி ஹீரோவா? முகேஷ் ரவி ஹீரோவா என கேட்கும் அளவுக்கு முகேஷூக்கு நல்ல முக்கியத்துவம். அவருக்கென ஒரு நாயகி, ஓபனிங் பாடல், ரொமான்ஸ் ட்ராக் என அவரும் கொடுத்த வேலையை செவ்வனே செய்திருக்கிறார். ஸ்ரீரஞ்சனி, ஷாலினி ஆகியோரும் இளைஞர்களை சொக்கி இழுக்கிறார்கள். முருகானந்தம் காமெடியும் ரசிக்க வைக்கிறது. ஜாவா சுந்தரேசன் சில காட்சிகளில் வந்தாலும் ரசிக்க வைக்கிறார்.

ஜெய் சுரேஷ் ஒளிப்பதிவு கலர்ஃபுல்லாக இருக்கிறது. குறிப்பிட்ட லொகேஷன்களில் எடுத்திருந்தாலும் போர் அடிக்காத வகையில் காட்சிகளை எடுத்திருக்கிறார். சதீஷ் செல்வம் இசையில் பாடல்கள் ஓகே ரகம். பின்னணி இசையும் கலகலப்பான படத்துக்கு பொருத்தமாக இருக்கிறது.

முருகானந்தம் எழுதிய திரைக்கதை வசனம், இயக்குனர் ராஜநாதன் பெரியசாமிக்கு பக்கபலமாக அமைந்துள்ளது. நட்டியை வைத்து இன்டஸ்டிங்கான ஒரு படத்தை, பொழுதுபோக்கு அம்சங்களுடன் கலந்து கொடுத்திருக்கிறார். சில அடல்ட் ஜோக்குகள் மட்டும் தவிர்த்திருந்தால் குடும்பத்துடன் குதூகலமாக பார்த்து ரசிக்கலாம். மொத்தத்தில் நட்டி நடித்துள்ள இன்னொரு கலகலப்பான பொழுதுபோக்கு படம் தான் இந்த “கம்பி கட்ன கதை”. நட்டிக்கு இன்னொரு சதுரங்க வேட்டை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *