நல்ல நல்ல கதையம்சம் உள்ள இணையத் தொடர்களை மாதா மாதம் வெளியிட்டு வரும் ZEE5 நிறுவனத்தின் தற்போதைய வெளியீடு “காக்கி சர்க்கஸ்” என்ற இணையத் தொடர். இந்த தொடர் எப்படி இருக்கு? ரசிகர்களை கவர்ந்ததா? பார்க்கலாம்.
கதைப்படி, தமிழ்நாடு கேரள பார்டரில் உள்ள சிறைச்சாலையில் ஜெயிலராக இருக்கும் முனீஷ்காந்த் அந்த சிறைக்கு வரும் கைதிகளை திருத்தும் முயற்சியில் வரும் ஒவ்வொருவருக்கும் புத்தகங்கள் வழங்குகிறார். அவரும் ஒரு எழுத்தாளர், சிறைச்சாலையில் அவர் அறையில் ஒரு நூலகத்தையே வைத்திருக்கிறார். அந்த சிறையில் ஒரு இடத்தில் கோவில் உண்டியல் ஒன்று வைக்கப்பட்டு கைதிகள் அதில் பணம் போட, அந்த பணம் கோவிலுக்கு அனுப்பப்படும். திடீரென ஒரு நாள் அந்த உண்டியல் பணம் கொள்ளையடிக்கப்படுகிறது. இது வெளியே தெரிவதற்குள் அந்த பணத்தை உண்டியலில் வைக்க வேண்டிய சூழல் உருவாகிறது. முனீஷ்காந்துக்கு கீழ் காவலராக பணியாற்றும் சுபாஷ் செல்வம், திருமணமாகாத இளைஞர். அவர் இதை முடிவுக்கு கொண்டு வர நிதி நிறுவனத்தில் கடன் வாங்கி அந்த பணத்தை உண்டியலில் போட முடிவு செய்து கடனும் வாங்குகிறார். அந்த பணமும் திருடப்படுகிறது. அந்த பணத்தை கொள்ளையடித்தது யார்? எப்படி திருடப்பட்டது? உண்டியலில் பணத்தை எப்படு வைத்தார்கள்? திருடனை பிடித்தார்களா? என்பதே மீதிக்கதை.
கதையின் இளம் நாயகனாக சுபாஷ் செல்வம். நல்ல மிடுக்கான தோற்றம், இளம் போலீஸ் அதிகாரியாக நல்ல ஒரு நடிப்பை தந்திருக்கிறார். பணத்தை இழந்து தவிக்கும் தருணங்கள், திருடனை பிடிக்க எடுக்கும் முயற்சிகள் என தேந்தெடுத்த நடிப்பை தந்திருக்கிறார். நாயகி வின்சு ஷாம் ரேச்சல் உடனான காதல் காட்சிகளிலும் நல்ல கெமிஸ்ட்ரி. வின்சு நாயகியாக நல்ல ஒரு சாய்ஸ்.
கைதிகளை நல்வழிப்படுத்தும் நோக்கில் செயல்படும் ஜெயிலராக முனீஷ்காந்த். சில இடங்களில் சீரியஸாக இருந்தாலும் பல இடங்களில் அவரது பாடி லாங்குவேஜ் மற்றும் நடிப்பால் கலகலப்பாக்குகிறார். மலையாள நடிகர் ராஜேஷ் மாதவன். மலையாளத்தில் மரண மாஸ் உள்ளிட்ட படங்களில் ஏற்கனவே வித்தியாசமான நடிப்பை தந்தவர் இந்த தொடரிலும் சிறந்த நடிப்பை தந்திருக்கிறார். கௌதமி கதாபாத்திரமும் கதையை நகர்த்தி செல்லும் ஒரு முக்கிய கருவியாக அமைந்திருக்கிறது.
சவப்பெட்டி வியாபாரம் செய்பவராக அந்துல் லீ தொடர் முழுக்க நம்மை ரசிக்க வைக்கிறார். சாவித்ரி, அம்ருதா, இயக்குனர் மருது பாண்டியன், ராகேஷ், விக்னேஷ்வர், அருண் என மற்ற நடிகர்களின் பங்களிப்பும் தொடரை மிக அழகாக தந்திருக்கிறது.
நீரஜ் ரவி ஒளிப்பதிவில் அந்த கிராமத்து அழகையும், சிறைச்சாலை காட்சிகளையும், அந்த கடை வீதி தெருக்களையும் மிக இயல்பாக படம் பிடித்து தந்திருக்கிறார். சேவியர், விபின் பாஸ்கர் இசை காமெடி கலந்த இந்த தொடருக்கு நல்ல ஒரு இசையை வழங்கியிருக்கிறது.
இயக்குனர் அமீன் பாரிஃப், நல்ல ஒரு எளிமையான அதே சமயம் கொஞ்சம் புதுமையான ஒரு கதையை எடுத்து அதை அழகாக திரைக்கதையாக்கி ரசிக்கும் விதத்தில் ஒரு தொடரை தந்திருக்கிறார். சிறைச்சாலைக்குள் கோவில் உண்டியல் மற்றும் கைதிகளை திருத்தும் நோக்கத்துடன் இருக்கும் ஜெயிலர், கைதிகளுக்கு புத்தகம் தரும் ஒரு ஜெயிலர் என சுவாரஸயமான அம்சங்களை வைத்து காமெடி கலந்து தந்திருக்கிறார் இயக்குநர் அமீன் பாரிஃப். எளிமையான பின் புலத்தில் இருக்கும் நாயகன் மற்றும் திருடன் இடையிலான ஒரு துரத்தல் கதையை சுவாரஸ்யமாக தந்திருக்கிறார். இந்த முக்கிய கதாபாத்திரங்களுக்கு இடையில் இன்றைய மக்களின் சோஷியம் மீடியா அடிக்ஷன், பிரபலம் ஆகும் எண்ணம் ஆகியவற்றையும் போகிற போக்கில் சொல்லி நல்ல ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறார். குடும்பத்தோடு உட்கார்ந்து விடுமுறை நாளில் பார்க்க ஏதுவான ஒரு தொடர், நிச்சயம் பார்க்கலாம்.

