யூடியூப், இன்ஸ்டாகிராம் இன்ஃபுளுயன்ஸர் எல்லாம் சினிமாவில் எண்ட்ரி கொடுத்துக் கொண்டிருக்கும் சீசன் இது. ஒரு சிலர் நல்ல வாய்ப்பாக இதை பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சிலர் ஒரு படத்தோடு பெட்டியை கட்டி விட்டனர். அந்த வகையில் தற்போது யூடியூப் சென்சேஷன் TTF வாசன் நாயகனாக அறிமுகமாகி இருக்கும் படம் “ஐபிஎல்” (IPL). ஆடுகளம் கிஷோர், அபிராமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படம் எப்படி இருக்கு? வாசன் எதிர்காலம் எப்படி இருக்கும்? பார்க்கலாம்.
படத்தின் கதைப்படி, டாக்ஸி ஓட்டுநர் கிஷோர் தன் மனைவி, தங்கை என குடும்பத்தோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். ஒரு சூழலில் வேலையை இழந்து விட, சொந்தமாக கார் வாங்கி டாக்ஸி ஓட்டுகிறார். நல்ல படியாக போய்க் கொண்டிருக்கும் நேரத்தில் கிஷோருக்கு ஒரு விபத்து ஏற்பட்டு 3 மாதங்கள் கார் ஓட்ட முடியாத சூழல் ஏற்படுகிறது. அந்த விபத்துக்கு TTF வாசன் ஒரு வகையில் காரணமாகி விட கிஷோருக்கு அவர் மீது கோபம் ஏற்படுகிறது. அதே வாசன் தான் கிஷோரின் தங்கையை காதலிக்கிறார். இன்னொரு புறம் அரசியல்வாதியின் தொடர்பில் இருக்கும் போலீஸ் அதிகாரி போஸ் வெங்கட் ஒரு இளைஞனை லாக்கப்பில் அடிக்க அவனும் இறந்து விடுகிறான். அந்த லாக்கப் மரணத்தில் கிஷோரை மாட்டி விட சதி நடக்கிறது. அந்த சதியில் இருந்து கிஷோர் எப்படி வெளியே வந்தார்? டிடிஎஃப் வாசன் அவருக்கு எப்படி உதவுகிறார்? அவரது காதல் என்ன ஆனது? என்பதே மீதிக்கதை.
நாயகனாக டிடிஎஃப் வாசன். அன்பு என்கிற ஒரு சாதாரண இளைஞன் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகன் என்ற பில்டப்பை விட கதையில் முக்கிய கதாபாத்திரத்துக்கு உதவும் ஒரு கதாபாத்திரமாகவே வந்து போகிறார். காதல் காட்சிகளில் ஓகே. பாடல் காட்சிகளில் ஓரளவு ஆட முயற்சித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளிலும் இன்னும் முயற்சி தேவை. சேஸிங் காட்சிகள் அவரின் Zone-ல் இருப்பதால் அதில் இயல்பாக ஸ்கோர் செய்கிறார். அவரின் நண்பரை ஒரு காட்சியில் கொண்டு வனத்து அவரின் ரசிகர்களுக்கு வாவ் மொமெண்ட்.
படத்தின் ரியல் நாயகன் கிஷோர் தான். அவரது தேர்ந்த நடிப்பின் மூலம் முழுப்படத்தையும் தன் தோளில் தாங்குகிறார். குடும்பத்துக்காக நிற்கும் ஒரு நடுத்தர வர்க்க மனிதராக படம் முழுக்க நம் மனதில் பதிகிறார். அவரின் மனைவியாக அபிராமி. விருமாண்டி படத்தில் பார்த்த அபிராமியை மீண்டும் பார்த்த உணர்வை ஒரு சில காட்சிகள் தருகின்றன. நாயகியாக வரும் குஷிதா கல்லபு இயல்பான நடிப்பை தந்து ரசிக்க வைக்கிறார். அரசியல்வாதியாக நரேன், கொடூரமான காவல்துறை அதிகாரிகளாக போஸ் வெங்கட், ஜான் விஜய், ஹரிஷ் பேரடி என மூவருமே அவர்கள் பங்கை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்கள். சிங்கம் புலி, திலீபன் ஆகியோரும் நன்றாகவே நடித்திருக்கிறார்கள்.
பிச்சுமணி ஒளிப்பதிவு படத்துக்கு தேவையான அளவு உதவியிருக்கிறது. அஸ்வின் விநாயகமூர்த்தி இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். பின்னணி இசையும் ஓகே. மப்பு பிரகாஷ் படத்தொகுப்பு ஓரளவு உதவி செய்திருக்கிறது.
இயக்குனர் கருணாநிதி இந்திய தண்டனை சட்டம் பற்றியும், அரசு இயந்திரத்தில் சிலரின் தவறான நோக்கங்களால் சாதாரண மக்கள் எப்படி எல்லாம் பாதிக்கப்படுகிறார்கள் என்பதை அழகாக சொல்லியிருக்கிறார். அரசியல் சதிகள், லாக்கப் மரணம் என உண்மையாக நடந்த விஷயங்களை நினைவுபடுத்தும் வகையில் காட்சிகளை அமைத்தது கொஞ்சம் நம்மை உணர்வு ரீதியாக இணைக்கிறது. வாசன் பின்னணி என்ன என்பதை தெளிவாக சொல்லாதது படத்தில் வரும் இன்னொரு கதாபாத்திரம் தான் இதுவும் என்பது போல என்ன வைக்கிறது. கிஷோர், போஸ் வெங்கட் என தேர்ந்த நடிகர்களின் நடிப்பின் மூலம் படத்தை பார்க்க முடிக்கிறது. மொத்தத்தில் டிடிஎஃப் வாசன் ஹீரோ அறிமுகம் நல்லபடியாகவே ஆகியிருக்கிறது. இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வாழ்த்துக்கள்.

